Published:Updated:

பொதுத்தேர்வு... அரசின் அறிவிப்பு: ஆரம்பக்கல்விக்கும் ஆப்பு!

DPI
DPI

பள்ளிக்கல்வித் துறை கொண்டுவரும் புதிய மாற்றங்கள், மாணவர்களை வகுப்பறைக்கு வரவழைப்பதாக இருக்கட்டும்!

மத்திய பி.ஜே.பி அரசின், 'புதிய கல்விக்கொள்கை திட்டம்' தமிழகத்தில் ஏற்படுத்திய தடதடப்புகளே இன்னும் அடங்கவில்லை... அதற்குள், '5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு', 'காலாண்டுத் தேர்வு விடுமுறை ரத்து' என்று அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு, நாடு முழுக்கப் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது, தமிழகப் பள்ளிக்கல்வித் துறை!

Directorate of school education
Directorate of school education

'5-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்பது மாணவர்களைக் குலக்கல்விக்கு அனுப்பும் மறைமுகத் தந்திரம்', 'சமூக நீதிக்கு எதிரானது' என்று தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை ஒருசேரப் பதிவுசெய்திருக்கின்றனர். ஆனால், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, "பொதுத்தேர்வு என்பது மாணவர்களுக்கு அவசியமானது. அடுத்தடுத்த நிலைகளில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வதற்கான ஒரு பயிற்சியை இது அளிக்கும். எனவே, இதில் நன்மையும் இருக்கிறது" என ஆதரவு கருத்து தெரிவித்திருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்த நிலையில், இந்தப் பிரச்னையின் உண்மைத்தன்மையை அறியும் நோக்கில், 'பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை'யின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம்... ''பொதுவாகக் குழந்தைப்பருவத்தில், தேர்வு என்ற வார்த்தையைக் கேட்டாலே அது குழந்தைகள் மத்தியில் ஒருவித பயத்தையும் பதற்றத்தையும்தான் உருவாக்கும். இது, உளவியல்ரீதியாகவும் அந்தக் குழந்தைகளிடையே பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும். அதாவது, கல்வியின்மீது அவநம்பிக்கை அல்லது கல்வியைத் தொடரவேண்டாம் என்ற விடுபடும் நிலை போன்ற மோசமான சூழலுக்குத்தான் அது வழிவகுக்கும்.

Students
Students

கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மத்தியக் கல்வி ஆலோசனைக் கூட்டத்தில், 'தமிழ்நாடு அரசு இடைநிற்றல் இல்லாத் தேர்வைத் தொடர விரும்புகிறது' எனத் தெரிவித்திருந்தது. ஆனால், இப்போது அதற்கு நேர்மாறாக 5, 8-ம் வகுப்புகளுக்குத் தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பது ஏன்?

தேர்வு முறையே இல்லாமல் இருப்பதனால், மாணவர்கள் நேரடியாக 9-ம் வகுப்புக்கு வருகிறபோது, அவர்களுக்கு அடிப்படைக் கல்வியறிவு இல்லை என்பதைத்தான் இப்போது இந்தத் திட்டத்தை அமல்படுத்த நினைப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால், மாணவர்களுக்கு இதுபோல் தேர்வு நடத்துவதாலேயே அவர்களது கல்வித் திறன் மேம்படுவதாகச் சொல்வதற்கு எந்தவித ஆதார அறிக்கையும் கிடையாது.

Public Exam
Public Exam

அடுத்ததாக, 'முதல் 3 வருடங்களுக்குத் தேர்வின் அடிப்படையில் எந்தக் குழந்தைமீதும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பொதுத்தேர்வு நடத்தப்பட்டு அந்தத் தேர்வில் தோல்வியுறும் மாணவர்களுக்கு அடுத்த 2 மாதங்களில் உடனடித்தேர்வு நடத்தப்படும். ஆக, முழு ஆண்டுத் தேர்வு எழுதி, தோல்வியுறும் மாணவன் 2 மாத கோடை விடுமுறையைக்கூடக் கொண்டாட முடியாமல் தொடர்ந்து படித்து, அடுத்த தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழல் ஏற்படும். இது, மற்ற மாணவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கச் செய்து தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும்.

மேலும், 10 வயதுக் குழந்தையிடம், 'நீ ஃபெயிலாட்டே... உட்கார்ந்து ஒழுங்கா படி. விளையாடப் போகாதே' என்றெல்லாம் பெற்றோர் திரும்பத்திரும்பச் சொல்வது, குழந்தைக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். 10 மாதங்களாகப் படிக்காததை வெறும் 2 மாதங்களுக்குள் படிக்கவைத்துவிட முடியுமா? குழந்தை படிக்கவில்லை என்றால், ஏன் படிக்கவில்லை, குழந்தையின் கற்கும் திறனைத் தடுத்த சூழல், அம்சம் என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து மேல் நடவடிக்கை எடுப்பதுதான் ஆரோக்கியமான கல்வித்துறையாக இருக்கமுடியும். அதைவிடுத்து, குழந்தையின் கற்றல்திறன் குறைந்துபோவதற்கு, குழந்தைகள் மீதே பழிபோட்டு அரசு நிர்வாகம் தப்பித்துக்கொள்வதென்பது நியாயமான செயல் அல்ல.

School students
School students

எனவே, பொதுத்தேர்வு என்று சொல்லி, குழந்தைகள் மீதே தண்டனையைத் திணிக்காமல், அவர்கள் மேற்கொண்டு கற்றல் திறனை வளர்த்துக்கொள்வதற்கான ஆக்கப்பூர்வ சூழலை ஏற்படுத்துவற்கான வழிமுறைகளைத்தான் ஆராயவேண்டும். அதாவது, கல்விச் சாலைகளில் தேவையான ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, ஆசிரியர்களுக்கு அலுவல் வேலைகளை வழங்காமல், கல்வி போதிக்கும் பணியை மட்டும் செய்யவைப்பது போன்ற நடவடிக்கைகளை அரசுதான் முன்னெடுக்க வேண்டும்.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: ஆரம்பக் கல்விக்கு வளர்ச்சியா... வீழ்ச்சியா?

இடைநிற்றல் இல்லாக் கல்விமுறை என்றால், மேலோட்டமாக 'ஆல் பாஸ்' என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. மாறாக, குழந்தையின் ஒவ்வொருநாள் நடவடிக்கையும் கண்காணித்து ஊக்கப்படுத்தி, அந்தக் குழந்தையை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லும் 'தொடர் மதிப்பீட்டு முறை' இது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், ஒருநிலையில், சரிவரப் படிக்காத குழந்தைகளும்கூட அடுத்தடுத்த காலகட்டத்தில் தங்கள் திறனை வளர்த்துக்கொண்டு கற்றுக்கொள்ளும் சூழல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அப்படியிருக்கும்போது, 3 மணி நேரத் தேர்வு ஒன்றில் வெற்றிபெறவில்லை என்பதற்காகவே ஒரு குழந்தையை கல்வி கற்கும் சூழலிலிருந்து விலக்கிவைப்பதென்பது அறமற்ற செயல்.

Prince Gajendra Babu
Prince Gajendra Babu

இதுதவிர, போர்டு எக்ஸாம், பப்ளிக் எக்ஸாம், ரெகுலர் எக்ஸாம் என தேர்வு முறையிலும் பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. அதுபற்றிய விளக்கத்தையும் அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை. கல்விச் சூழலை ஆரோக்கியமானதாக மாற்ற இயலாத அரசு, தேர்ச்சியின்மைக்கு குழந்தைகளைப் பலிகடாவாக்கும் முயற்சியாகத்தான் இந்தப் பொதுத்தேர்வு திட்டத்தைப் பார்க்கமுடிகிறது'' என்றார்.

இந்த நிலையில், பொதுத்தேர்வு முறையை இதுவரையிலும் எதிர்த்துப் பேசிவந்த ம.தி.மு.க சமீபத்தில், வரவேற்றுப் பேசியிருப்பதன் பின்னணியைத் தெரிந்துகொள்ளும் நோக்கில், அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவைத் தொடர்புகொண்டபோது, ''மத்திய அரசின் கல்வித் திட்டங்கள் அனைத்துமே காவி சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. இந்தி, சமஸ்கிருதம், புதிய கல்விக் கொள்கை என 'டெக்ஸ்ட் புக் டெரரிஸ்ட்'டாக விளங்கும் மத்திய அரசின் பொதுத்தேர்வு முறைகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.

Vaigaiselvan
Vaigaiselvan

ஆனால், மாநில அளவில், தமிழக அரசு கொண்டுவரவிருக்கும் பொதுத்தேர்வு முறை என்பது, மாணவர்களின் திறனை வளர்க்கச் செய்யும் தேர்வு முறையாக இருக்கும் என்று நம்புகிறோம். அதனடிப்படையிலேயே வரவேற்கிறோம். அடுத்ததாக, இன்னும் 3 ஆண்டுகளுக்குத் தேர்வின் அடிப்படையில், எந்த மாணவரையும் பின்தங்கச் செய்யப் போவதில்லை என்ற அறிவிப்பும் வரவேற்கக்கூடியதே. அதேசமயம், மத்திய அரசின் புதிய வழிக்கொள்கையை அமல்படுத்துவதற்கான முன்னோட்டமாகத்தான் தமிழக அரசும் இப்படியொரு திட்டத்தை அமல்படுத்துகிறது எனத் தெரியவந்தால், நாங்கள் கடுமையாக எதிர்ப்போம்!'' என்றார்.

5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அவசியமா? உங்களின் கருத்து என்ன? #VikatanSurvey

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், ''கல்வித்துறையில் தமிழக அரசின் சாதனை, இந்திய அளவில் கவனிக்கத்தக்கது. இதன் அடுத்தகட்டமாக, 5, 8 -ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வைக் கொண்டுவரலாம் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், மீண்டும் இதுகுறித்து அமைச்சரவை கூடி பரிசீலனை செய்யவிருக்கிறோம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சரே கூறிவிட்டார். எனவே, இப்போதைக்கு இதுகுறித்த விவாதம் தேவையில்லை'' என்றார் சுருக்கமாக.

எது எப்படியோ, பள்ளிக்கல்வித் துறை கொண்டுவரும் புதிய மாற்றங்கள், மாணவர்களை வகுப்பறைக்கு வரவழைப்பதாக இருக்கட்டும்!

அடுத்த கட்டுரைக்கு