Published:Updated:

புதுச்சேரி: `ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கும்!’ - அமைச்சர் கமலக்கண்ணன்

பள்ளிகள் தொடக்கம்
பள்ளிகள் தொடக்கம்

`புதுச்சேரியில் பள்ளிகள் ஜனவரி 4-ம் தேதி முதல் தொடங்கும்’ என்றும், `ஜனவரி 18-ம் தேதியிலிருந்து முழு நேர வகுப்புகள் நடைபெறும்’ என்றும் கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்திருக்கிறார்.

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. புதுச்சேரியில் தீவிரமாகப் பரவிய கொரோனா தொற்று, கடந்த இரண்டு மாதங்களாகக் குறையத் தொடங்கியிருப்பதால் 9 முதல் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் மட்டும் நடைபெற்றுவருகின்றன.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பிவரும் நிலையில், இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், ``வரும் ஜனவரி மாதம் 4-ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து வகுப்புகளும் நடைபெறும்.

அதேபோல கொரோனா பரவலுக்கு முன்பாகச் செயல்பட்டதைப் போல ஜனவரி 18-ம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளும் முழு நேரமும் செயல்படும். இன்ஜினீயரிங் கல்லூரிகள், கலைக்கல்லூரிகளில் இளங்கலை, முதுநிலை இறுதியாண்டு மாணவர்கள், ஆராய்ச்சித்துறை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படுகின்றன. பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் மத்திய அரசின் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வி நிறுவனங்கள் செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கல்லூரிகளை முழுமையாகத் திறப்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும்.

`டிசம்பருக்குப் பிறகு பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்கலாமே...’ - என்ன செய்யப்போகிறது தமிழக அரசு?

வகுப்பில் 60 மாணவர்கள் இருந்தால், அவர்களை இரண்டாகப் பிரித்து திங்கள்கிழமை 30 மாணவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை 30 மாணவர்களுக்கும் வகுப்புகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்திவருகிறோம். இது தொடர்பான விரிவான முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடந்துவருகிறது. தேர்வுக்குப் பின் பாலிடெக்னிக்குகள் திறக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு