Published:Updated:

`கைப்பிரதி வினாத்தாள்; தேர்வில் குளறுபடி!'- மாணவர்களைத் தவிக்க வைத்த புதுவைப் பல்கலைக்கழகம்

புதுவைப் பல்கலைக்கழகம்
புதுவைப் பல்கலைக்கழகம்

5,000-க்கும் மேற்பட்ட மாணவர்களை நேரடியாகவும், உறுப்புக் கல்லூரிகள், தொலைதூரக் கல்வி மூலம் 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்களையும் கொண்டிருக்கும் புதுவை மத்தியப் பல்கலைக்கழகம், வினாத்தாள் விவகாரத்தில் செய்திருக்கும் குளறுபடி கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

புதுச்சேரி அரசின் சட்டக்கல்லூரி கனகச்செட்டிக்குளத்தில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று காலை முதல் பருவத்தேர்வு தொடங்கியது. அதன்படி இன்று ஆங்கிலத் தேர்வுக்கான வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், மாணவர்கள் படித்த பாடத்துக்கும், பாடத்திட்டத்துக்கு சம்பந்தமே இல்லாத கேள்விகள் அந்த வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்ததால் குழப்பமடைந்த மாணவர்கள் பேராசிரியர்களிடமும், கல்லூரி நிர்வாகத்தினரிடமும் புகார் அளித்திருக்கின்றனர்.

புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி
புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரி

அதையடுத்து, இந்தக் குழப்பம் குறித்து புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கூறியிருக்கிறது கல்லூரி நிர்வாகம். அதற்கு, ``ஓ அப்படியா ? அதனால் என்ன? இப்போது மாற்றி அனுப்புகிறோம்” என்ற ரீதியில் பதிலளித்திருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம்.

அதற்குப் பிறகு கையால் எழுதி பிரதியெடுக்கப்பட்ட வினாத்தாள்களை தங்கள் ஊழியர்கள் மூலம் கொடுத்தனுப்பியிருக்கிறது பல்கலைக்கழக நிர்வாகம். தேர்வு தொடங்கிய 2 மணி நேரங்களுக்குப் பிறகு, மாணவர்கள் கையில் இருந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை வாங்கிக் கொண்ட ஆசிரியர்கள், புதிய வினாத்தாளைக் கொடுத்து 2 மணி நேரத்தையும் நீட்டித்திருக்கிறார்கள்.

பல்கலைக்கழகத்தால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கைப்பிரதி வினாத்தாள்
பல்கலைக்கழகத்தால் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கைப்பிரதி வினாத்தாள்

ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் சிலர், ``இரவு முழுவதும் நாங்கள் கண்விழித்து படித்துவிட்டு வந்தால் எங்களை இப்படித்தான் அலைக்கழிப்பீர்களா?'' என்று கூறி தேர்வு அறையிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பள்ளி மற்றும் உயர்கல்வி பெற்றோர் மாணவர் நலச்சங்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான சுப்பிரமணியன், ``ஒரு நாளைக்கு 1 மணி நேரம் கூட பாடத்தை நடத்தாமல் புதுச்சேரி பல்கலைக்கழகம் தேர்வை அறிவித்து நடத்துவது தவறான ஒன்று. ஒரு பாடப்பிரிவைப் பற்றி வாரத்தில் 4 நாள்கள் வகுப்பெடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக ஒரு நாளுக்கு 1 மணி நேரம் கூட வகுப்புகள் நடத்தப்படவில்லை.

வழக்கறிஞர் சுப்பிரமணியன்
வழக்கறிஞர் சுப்பிரமணியன்

இந்தச் சூழலில்தான் நேற்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. 10 மணிக்கு கொடுக்கப்பட்ட வினாத்தாள்களைப் படித்துப்பார்த்த மாணவர்கள், இது எங்களுக்கான வினாத்தாளே கிடையாது. எங்கள் பாடத்திலுள்ள எந்தக் கேள்விகளும் இதில் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

அதன்பிறகு 12 மணிக்குப் பிறகு தேர்வு வளாகத்துக்குச் சென்ற ஆசிரியர்கள் வினாத்தாள்களையும், விடைத்தாளையும் வாங்கிக் கொண்டு, பல்கலைக்கழகத்திலிருந்து உங்களுக்குத் தவறான வினாத்தாளை அனுப்பிவிட்டார்கள். தற்போது புதிய வினாத்தாளை அனுப்பி நேரத்தையும் நீட்டித்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். கையால் எழுதி ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட வினாத்தாளை மாணவர்களிடம் கொடுத்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தவறு. பல்கலைக்கழக விதிகளின்படி 10 ஆசிரியர்களிடம் வினாத்தாள்களை தயாரித்து வாங்க வேண்டும்.

வினாத்தாள்
வினாத்தாள்

அதில் மூன்றை மட்டும் இறுதி செய்து அச்சிட்டு ரகசியமாக வைக்க வேண்டும். ஒருவேளை தேர்வுக்கு முன்னதாக வினாத்தாள் கசிந்துவிட்டால் அதை அப்படியே விட்டுவிட்டு புதிய வினாத்தாளை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் இந்த விதிகளை புதுச்சேரி பல்கலைக்கழகம் செயல்படுத்தவில்லை என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. கையால் எழுதப்பட்ட வினாத்தாள்கள் பிரதியெடுக்கப்பட்ட இடத்திலும், அதை தயாரித்த ஆசிரியர் மூலமாகவும் கசிய வாய்ப்பிருக்கிறது. இப்படிப் படித்துவிட்டு வரும் மாணவர்கள் வழக்கறிஞரானால் அவர்களிடம் என்ன தரமிருக்கும் ? இதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவிருக்கிறேன்” என்றார்.

இதுகுறித்து விளக்கம் கேட்க சட்டக்கல்லூரி முதல்வர் சீனுவாசனைத் தொடர்புகொண்டோம். ``அந்த வினாத்தாள்களில் நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அதுகுறித்து பல்கலைக்கழகத்திடம் நாங்கள் கூறியதையடுத்து அவர்கள் மாற்றிக் கொடுத்துவிட்டார்கள். அது முழுக்க முழுக்க பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குழப்பம்” என்றார்.

புதுவை பல்கலைக்கழகம்
புதுவை பல்கலைக்கழகம்

இதுகுறித்து விளக்கம் கேட்க பல்கலைக்கழகத்தின் தேர்வுத்துறை கட்டுப்பாட்டு அதிகாரி லாசரைத் தொடர்புகொண்டோம். ``குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களுக்கு வழக்கம்போல வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டது. அதன்பிறகுதான் அந்த வினாத்தாள் பாடத்திட்டத்துக்குள் இல்லாதது என்று மாணவர்கள் கண்டுபிடித்ததையடுத்து, ஆசிரியர்கள் கையால் தயாரித்து வைத்திருந்த வினாத்தாள்களை உடனே மாற்றிக் கொடுத்தோம். இந்தக் கல்லூரி மட்டுமல்ல அந்தமான் உள்ளிட்ட உறுப்புக் கல்லூரிகளுக்கும் அப்படித்தான் கொடுத்தோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு