Published:Updated:

மாநில போட்டிக்குத் தேர்வு! திருச்சி டு சென்னை விமானத்தில் பறக்கும் அரசுப்பள்ளி மாணவிகள்

விமான டிக்கெட்
விமான டிக்கெட்

அடுத்த ரெண்டு வருஷத்துக்கு இந்தப் பள்ளியிலிருந்து மாணவ மாணவிகள் யார் வெளியூர் சென்றாலும், விமானத்தில்தான் போகணும்னு கராராக சொல்லிவிட்டேன். மற்ற மாணவர்களுக்கும் ஒரு ஊக்கம் வரணும் அதுதான் நோக்கம்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணத்தாங்கோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர். தற்போது இப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் ஊக்கத்தால் பேச்சு, கட்டுரை, ஓவியம், விளையாட்டுப் போட்டிகள் எனப் பல்வேறு மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிவாகை சூடி வருகின்றனர். குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜூனியர் ரெட் கிராஸ் (ஜேஆர்சி) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.

விமான டிக்கெட்
விமான டிக்கெட்

இதில், ஆவணத்தாங்கோட்டை பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் தாரணி ஸ்ரீ, ஸ்ரீநிதி கலந்துகொண்டு வெற்றிபெற்றதுடன், சென்னையில் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்றனர். இருவரும் வரும் 28-ம் தேதி, சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இவர்கள் இருவரும்தான் தற்போது விமானத்தில் பறக்க உள்ளனர். முன்னதாக, பள்ளி சார்பில் மாணவர்கள் சென்னை செல்வதற்கு பஸ் புக் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையே, இதுபற்றித் தகவல் அறிந்த பக்கத்து ஊரைச் சேர்ந்த சங்கர் என்ற இளைஞர் பள்ளி ஆசிரியரைத் தொடர்புகொண்டு, வெற்றிபெற்ற மாணவிகள் இருவரும் இந்த முறை விமானத்தில்தான் செல்வார்கள்.

அதற்கான செலவு முழுவதையும் நானே தருகிறேன் என்று கூறி, மாணவிகளின் பெயர் முகவரி பற்றிய தகவல்களை வாங்கிக்கொண்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார். அடுத்த சிறுது நேரத்திலேயே ஆசிரியரைத் தொடர்புகொண்டு, புக்கிங் செய்த விமான டிக்கெட்டுகளை ஆசிரியரின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பிவைத்து, அந்த மாணவிகளுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துவிட்டார். இதுபற்றி சங்கரிடம் பேசினோம், "இப்ப அடிக்கடி விமானத்துல பறந்துக்கிட்டு இருக்கேன். ஆனா, நான் படிக்கிற காலத்துல எல்லாம் விமானத்தை நேர்ல பார்க்கக்கூட வாய்ப்பு கிடைக்கலை.

சங்கர்
சங்கர்

பார்க்க பல நாள் ஏங்கி இருக்கேன். மாணவிகளின் திறமை, விடாமுயற்சி பற்றி கேள்விப்பட்டேன். அவங்களை விமானத்தில பறக்க வச்சு, போட்டியில கலந்துகொள்ள வச்சா நல்லா இருக்கம்ணு தோணுச்சு. உடனே, ஒரு ஆசிரியை மற்றும் இரண்டு மாணவிகளுக்கு டிக்கெட் புக் பண்ணி அனுப்பி வச்சிட்டேன். இது ரொம்ப சின்ன விஷயம்தான். மற்ற மாணவர்களுக்கும் ஒரு ஊக்கம் வரணும், அதுதான் நோக்கம். அடுத்த ரெண்டு வருஷத்துக்கு இந்தப் பள்ளியிலிருந்து மாணவ மாணவிகள் யார் வெளியூர் சென்றாலும், விமானத்தில்தான் போகணும்னு சொல்லிட்டேன்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு