Published:Updated:

காலதாமதம்; `போதை' பேராசிரியர்; ஊதியம் லேட்! - சர்ச்சையில் ராசிபுரம் அரசுக் கல்லூரி முதல்வர்

ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி
ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி ( எம். விஜயகுமார் )

``கல்லூரி முதல்வர் மணிமேகலையால் இந்தக் கல்லூரி எங்கள் கண்முன்பே சீரழிந்து வருகிறது'' என்கிறார்கள் பேராசிரியர்கள்.

``கல்லூரிக்கு மாணவர்கள் கால தாமதமாக வரலாம். ஆனால் முதல்வரே தினமும் கல்லூரிக்குக் கால தாமதமாக வருகிறார்'' என்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆண்டகலூர் கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் மணிமேகலை மீது புகார் எழுந்துள்ளது. மேலும், அவர் கல்லூரிக்கு தினமும் காலதாமதமாக வருவதாலும் கல்லூரியைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாலும் கல்லூரி சீரழிந்து வருவதாகவும் அக்கல்லூரி பேராசிரியர்கள் குமுறுகிறார்கள்.

மணிமேகலை
மணிமேகலை
எம்.விஜயகுமார்

இதுபற்றி நாமக்கல் மாவட்டம் ஆண்டகலூர் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் நம்மிடம்,``திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை தமிழ், ஆங்கிலம், வரலாறு, கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், உயிரியல், பொருளியல் போன்ற பல பாடப் பிரிவுகளும் அதேபோல முதுகலை மற்றும் ஆராய்ச்சி பாடப் பிரிவுகள் என 12 துறைகளில் மொத்தம் 3,360 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள்.

தற்போது, திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக இருப்பவர் மணிமேகலை. இவர் சேலம் சீனநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். இவர், இதே கல்லூரியில் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணிபுரிந்தார். பிறகு பதவி உயர்வு பெற்று இக்கல்லூரியில் கடந்த 2 வருடமாக முதல்வராக பணிபுரிந்து வருகிறார். இவர் பேராசிரியராக இருந்தபோதும் கல்லூரிக்குக் கால தாமதமாக வருவார்.

தற்போது முதல்வரான பிறகு தினமும் 11.30 மணிக்குக் கல்லூரிக்கு வருவார். 4.30 மணிக்கு வீட்டுக்குக் கிளம்பி விடுவார். இவருக்கு கல்லுரியைப் பற்றி சிறிதும் அக்கறை இல்லை. யாரையும் கண்டுகொள்வதில்லை. இவர் முதல்வரான 2 வருடத்தில் ஒருநாள் கூட கல்லூரி வளாகத்தைச் சுற்றிப் பார்த்ததில்லை. இவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர் மீது புகார் கொடுத்தாலும் உயர் கல்வித் துறை இயக்குநர் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

கல்லூரி
கல்லூரி
எம்.விஜயகுமார்

கல்லூரியில் தலைமை சரியில்லாததால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மிகை பேராசிரியர் பணி மாறுதலில் இங்கு வந்துள்ள பொருளாதார பேராசிரியர் ராஜ்குமார் தினமும் குடித்துவிட்டு போதையில் வந்து மட்டையாகி விடுகிறார். மாணவர்களுக்குப் பாடம் நடத்துவதில்லை. நிதியாளர், தன் பணியைச் சரியாகச் செய்வதில்லை. இதனால், சரியான தேதியில் எங்களுக்குச் சம்பளம் கிடைப்பதில்லை. கல்லூரி முதல்வர் மணிமேகலையால் இந்தக் கல்லூரி எங்கள் கண்முன்பே சீரழிந்து வருகிறது'' என்றார்கள்.

இதுபற்றி திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் மணிமேகலையிடம் கேட்டதற்கு, ``காலதாமதமாக வரவில்லை. கடந்த ஒரு வாரமாகக் கல்லூரிக்கு காலையில் நேரமாக வந்து விடுகிறேன். இன்று கூட காலையில் 8 மணிக்கே வந்துவிட்டேன். மற்றபடி, கல்லூரி சீரழிந்து வருகிறது என்று சொல்லுவதெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு