Published:Updated:

`இந்தியாவில் அமைக்கப்பட்ட கல்விக் குழுக்கள்!' - வாசகர் பார்வை #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

`ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக அனுபவம் வாய்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் குழுவை 1948 நவம்பர் 4-ம் தேதி அமைத்தார் நேரு'.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்றைக்கு வழக்கில் உள்ள பள்ளி என்ற சொல், சமணர்களின் பங்களிப்பு ஆகும். "பள்ளி என்றால் படுக்கை என்று பொருள். சமணத்துறவிகள் மலைகுகையின் தரைப்பகுதியைப் படுக்கைப் போல சமதளமாக செதுக்கி அதில் தியானம் செய்து வந்தனர். பின் ஞானதானம் செய்வதற்காக அருகில் கிராமத்திலுள்ள சிறுபிள்ளைகளை அழைத்து பள்ளிகளின் மீது அமரவைத்து பாடம் கற்றுக் கொடுத்ததால் கல்விக்கூடம் பள்ளிக்கூடம் ஆனதாக" அறிஞர் தொ.பரமசிவன் கூறுவார்.

Representational Image
Representational Image
Pixabay

சிறிதுகாலம் கழித்து குருகுலக் கல்வி முறை மன்னர்களின் ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது. பின் ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபின் இந்தியர்களின் அறியாமையைப் போக்கி, கல்வி போதிக்கப்பட முதன்முறையாக கல்விக்காக 1813-ல் 10,000 பவுண்ட் (1 லட்சம் ரூபாய்) ஒதுக்கப்பட்டது.

வில்லியம் பெண்டிங் பிரபு காலத்தில், 1834-ல் இந்தியா வந்த மெக்காலே, பொதுக்கற்பித்தல் குழு தலைவராய் நியமிக்கப்பட்டு 8 மாதங்கள் நாடு முழுதும் ஆய்வு செய்து, தன் அறிக்கையை சமர்ப்பித்தார். வில்லியம் பெண்டிங் பிரபுவால், 1835-ல் கல்விச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கல்வி வளர்ச்சியின் மகாசாசனம் எனப்பட்ட சார்லஸ் வுட் அறிக்கை 1854-ல் வெளியானது. தாய்மொழியும் ஆங்கிலமும் போதிக்கப்பட்டது. விளிம்பு நிலை மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்தது.1882-ம் ஆண்டு வில்லியம் ஹண்டர் குழு ஆய்வு செய்தபோது அடித்தட்டு மக்கள் கல்வி மற்றும் பெண் கல்விக்கு முக்கியத்துவம், துவக்கக் கல்வி அளிப்பது, மாதிரிப்பள்ளி உருவாக்குவது என அறிக்கை அளித்தார். இதனடிப்படையில் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி அளிக்க ரிப்பன் பிரபு துவக்கப்புள்ளி வைத்தார்.

Representational Image
Representational Image
Vikatan Team

1911-ல் கோபால கிருஷ்ண கோகலே அன்றைய பிரிட்டிஷ் இந்தியா இம்பீரியல் சட்டமன்றத்தில் தொடக்கக்கல்வி மசோதாவை கொண்டுவந்தார்.1913-ல் சட்டம் நிறைவேறினாலும் முழுமைப்படுத்த முடியவில்லை.

1919-ல் மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டம், கல்வித்துறை வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத்திற்கு பொறுப்புடைய அமைச்சரின் கீழ் கல்வித்துறை வந்தது.

தமிழகத்தில் 1920-ல் நீதிக்கட்சியின் ஏ.சுப்பராயலு செட்டியார் அமைச்சரவையில் கல்வித் துறை அமைச்சராகவும் இருந்தார். அவருக்குப் பின் ஏ.பி பாத்ரோ, கல்வி அமைச்சராகப் பதவியேற்று கல்வி வளர்ச்சிக்கு ஏராளமான நடவடிக்கைகளை செய்தார்.

சுதந்திரத்துக்குப் பின் அமைக்கப்பட்ட கல்விக்குழுக்கள்..

டாக்டர் ராதாகிருஷ்ணன் குழு

நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே, பல்கலைக்கழகக் கல்வியின் தரத்தை ஆராய, அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியராக அனுபவம் வாய்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் சுதந்திர இந்தியாவின் முதல் கல்விக் குழுவை 1948 நவம்பர் 4-ம் தேதி அமைத்தார் நேரு.

1949 ஆகஸ்ட் மாதம், தன் அறிக்கையை சமர்ப்பித்தது இந்தக் குழு. கல்வியமைப்பிலும் கட்டமைப்பிலும் காணப்பட்ட குறைகளைக் களைய வலியுறுத்தியது. இதன் பரிந்துரைகளில் முக்கியமானது, கிராமியப் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்துவதாகும். அதன்படி, கோவையில் ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மதுரையில் காந்தி கிராம பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.

Representational Image
Representational Image
Vikatan Team

டாக்டர் லட்சுமணசாமி குழு

1953-ல் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த டாக்டர் லட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு கல்விக் குழு அமைக்கப்பட்டு, அதன் ஆய்வறிக்கை 1953 ஆகஸ்ட் 29ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

5 ஆண்டுகள் துவக்கக் கல்வி, 3 ஆண்டுகள் உயர்நிலை துவக்கக் கல்வி, 3 ஆண்டுகள் உயர்நிலை இடைநிலைக் கல்வி என மொத்தம் 11 ஆண்டுக் கல்வி முறை அறிமுகமானது. அதன் பிறகு மூன்று ஆண்டு பட்டப்படிப்பும், இரண்டு ஆண்டு மேல் பட்டப்படிப்பு.

இக்குழுவின் பரிந்துரைப்படி நாடு முழுவதும் `உயர் இடைநிலைக் கல்வி முறை’ நடைமுறைக்கு வந்தது.

பெண் கல்வி மேம்பட பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்குதல், தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளைப் பயிற்று மொழியாக்குதல் என இரண்டு முக்கிய மாற்றங்களை இக்குழு முன்மொழிந்தது.

Representational Image
Representational Image

கோத்தாரி கல்விக் குழு

லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் டி.எஸ்.கோத்தாரியின் தலைமையில் 1964 ஜூலை 14-ம் தேதி கல்விக்கமிஷன் அமைக்கப்பட்டது.

12 செயற்குழுக்களை நியமித்து ஆய்வைத் திட்டமிட்டு தொடங்கியது 100 நாள்களில் பல்வேறு பயணங்களை மேற்கொண்டு 9,000 கல்வியாளர்கள் விஞ்ஞானிகளைக் கண்டு, கல்வியாளர்களுடன் விவாதித்து 692 பக்க அறிக்கையை 1966 ஜூன் 29ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் சமர்ப்பித்தது.

* GDP-இல் 6% கல்விக்காக ஒதுக்க வேண்டும்.

* சமமான கல்விவாய்ப்பு,14 வயது வரை கட்டாயக்கல்வி.

* இடைநிலைக்கல்வியில் தொழில்கல்வி.

*பகுதிநேரக் கல்வியையும், தொலைதூரக் கல்வியையும் வலியுறுத்தியது.

*ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்பப் பள்ளி, 2 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி, 3 கிலோ மீட்டருக்கு ஒரு மேல்நிலைப் பள்ளி இருக்க வேண்டுமெனக் கூறியது.

புதிய கல்விக் கொள்கை-1986

பிரதமர் ராஜீவ் காந்தி 1985 ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று புதிய கல்விக் கொள்கை குறித்து அறிவித்து, 1986 மே மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

புதிய அறிவியல் தொழில்நுட்பக் கொள்கைகளுக்கு ஏற்பவும், தாழ்த்தப் பட்ட மக்களுக்கு முக்கியத்துவம் அளித்தும், குழந்தை மையக் கற்றலை மையப்படுத்தியும் இருந்தது.

* அனைவருக்கும் ஆரம்பக் கல்வியை கொடுக்கும் பொருட்டு கரும்பலகை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

* நவோதயா வித்யாலயங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தல்.

* சுயாட்சி கல்லூரிகள்: UGC உதவியுடன் 1986-ல் 12 கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன.

* திறந்தவெளி பல்கலைக்கழகங்கள், தொலைதூரக்கல்வியும் முக்கிய அம்சங்களாகும்.

* இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் 1985 செப்டம்பரில் துவக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது.

Representational Image
Representational Image

யஷ்பால் கல்விக் குழு

குழந்தைகளின் கற்றலை இனிமையாக்க ஐ.மு கூட்டணி 2008-ல் இயற்பியல் பேராசிரியர் யஷ்பால் தலைமையில் குழு அமைக்கப்பட்டு 2009 ஜூன் 24-ல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தேர்வுகளுக்குப் பதிலாக, மாற்றுக் கல்வித் தொடர் மற்றும் முழுமை மதிப்பீட்டை (CCE) இக்குழு அறிமுகம் செய்தது. எட்டாம் வகுப்பு வரை தொடர் தேர்ச்சி என்பதை இக்குழு கொண்டுவந்தது.

சரிவர செயல்படாத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை அனுமதி பறிக்கப்பட வேண்டும். உயர் கல்வி ஆணையம் துவங்கவும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யவும் வலியுறுத்தியது.

புதிய கல்விக்கொள்கை-2019

ஸ்மிரிதி ராணி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது, டாக்டர் சுப்பிரமணியன் தலைமையில் 2015-ல் குழு அமைக்கப்பட்டு,இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கனால் இறுதிப்படுத்தப்பட்டது. இது, ஜூன் 2019-ல் வெளியிடப்பட்டு, 2020 ஜூலை 29-ல் வடிவம் பெற்றது.

* 5+3+3+2 கல்விமுறை, 2030-ம் ஆண்டிற்குள் 18 வயதுவரை கட்டாயக் கல்வி, உயர் கல்விக்கு நுழைவுத் தேர்வு, மும்மொழிக் கொள்கை, 9-லிருந்து 12ம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு, 6-ம் வகுப்பிலிருந்து தொழில்கல்வி என கூறப்பட்டுள்ளது.

Representational Image
Representational Image

காந்தியின் பார்வையில்

காந்தியின் பார்வையில் கல்வி என்பது குழந்தையின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். தாய்மொழி வழிக்கல்வியே முக்கியமானது.

கல்வி முறையை நகரவாசிகளை மட்டும் கணக்கில் கொள்ளாது இந்திய கிராமப்புற மக்களை மனதில் வைத்து உருவாக்க வேண்டும்.

``என் வீட்டைச் சுற்றி எல்லாப் பக்கங்களிலும் சுவர் எழுப்பிவிட்டுச் சன்னல்களை எல்லாம் இறுக அடைத்துவிட நான் விரும்பவில்லை. எல்லா நாடுகளின் கலாசாரங்களும் என் வீட்டுக்குள் தாராளமாக வீச வேண்டும். ஆனால், அந்தக்காற்று என்னை அடித்து வீழ்த்த இடம் தர மறுக்கிறேன்" என தாய்மொழியின் அவசியம் குறித்து காந்தி கூறியதைத்தான் ஒவ்வொரு கல்விக்குழுவும் தாய்மொழிக்கற்றலை ஊக்குவிக்கின்றன.

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு