Published:Updated:

`முதல்வரின் கவனத்துக்குச் சென்ற பொதுத்தேர்வு விவகாரம்..!’ - பிளஸ்2 விவகாரத்தில் என்ன நடக்கிறது?

அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்

தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அதி.மு.க அரசு அலட்சியப்படுத்துகிறதா? ” என்று கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவிவருவதால், அதைத் தடுக்கும் முயற்சியில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கல்வி நிறுவனங்கள், சுற்றுலாத்தலங்கள், பொது அரங்குகள் உட்பட அனைத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டதே தவிர பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படவில்லை. இது தொடர்பாக கோரிக்கை விடப்பட்டும், பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பள்ளி கல்வித்துறை
பள்ளி கல்வித்துறை

கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் சூழலில், பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படாதது கல்வி ஆர்வலர்களாலும் பெற்றோர்களாலும், பொதுமக்களாலும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டது. பிளஸ்2 மாணவர்கள், தேர்வுக்குப் பின்னர் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளைச் சந்திக்கவேண்டிய சூழல் வரும் என்பதால், இந்தத் தேர்வுகள் ரத்துசெய்யப்படவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான தேர்வும் நிறுத்திவைக்கப்பட்டது. நீட், ஜே.இ.இ உட்பட பல தேர்வுகளும் சி.பி.எஸ்.இ தேர்வு நடக்கும் பட்சத்தில்தான் நடக்கும். எனவே, இங்குள்ள பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்குத் தேர்வை நடத்துவது தேவையற்றதாகக் கருதப்படுகிறது. இருந்தும் தேர்வுகள் ஒத்துவைக்கப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாகக் கல்வித்துறையில் சில உயரதிகாரிகளிடம் பேசினோம், ''கல்வித்துறை அதிகாரிகள் ,மக்களின் முடிவுகளை ஒத்துதான் முடிவெடுக்கிறார்கள். ஆனால், அமைச்சர் செங்கோட்டையனுக்கு நெருக்கமான சிலர், மக்களுடன் தொடர்பில் இல்லாத, வெளியில் நடப்பது தெரியாத சிலர், அவரை குழப்பிவிடுகின்றனர். அதன் விளைவுதான் இது. இந்தச் செய்தி தற்போது முதல்வரின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அநேகமாக , தேர்வுகளை ஒத்திவைப்பது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

நேற்று தி.மு.க தலைவர் ஸ்டாலின், ``11மற்றும்12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து, கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அ.தி.மு.க அரசு அலட்சியப்படுத்துகிறதா? மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல்,தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு