Published:Updated:

`ஐஐடி முனைவர் பட்ட அனுமதிகளில் இட ஒதுக்கீடு கேள்விக்குறி?’-சு.வெங்கடேசன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

ஐஐடி
ஐஐடி

`அமைச்சர் எனக்களித்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் வரையறுத்துள்ள இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை’ - சு.வெங்கடேசன் எம்.பி

``மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனமான ஐஐடி-யில் முனைவர் பட்டக் கல்வியில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் உட்பட இதர பிற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களின் இட ஒதுக்கீட்டு அளவைவிட மிகக்குறைவாக இருக்கிறது" என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியிருக்கிறார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

இது பற்றி சு.வெங்கடேசனிடம் பேசியபோது, ``ஐஐடி முனைவர் பட்ட அனுமதிகளில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்துள்ள பதில் அதிர்ச்சி அளிக்கிறது.

நாட்டிலுள்ள 23 ஐஐடி-களில் மொத்தம் 7,186 மாணவர்கள் 2020-ம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஓ.பி.சி மாணவர்கள் 1,635, பட்டியல் சாதியினர் 707, பழங்குடியினர் 321 என பதிலளித்துள்ளனர்.

இட ஒதுக்கீட்டின்படி பட்டியல் சாதி மாணவர்கள் குறைந்தபட்சம் 15 சதவிகிதம் இருக்க வேண்டும். ஆனால், முனைவர் பட்ட அனுமதிகளில் பட்டியல் சாதி மாணவர்கள் 9.83 சதவிகிதம் மட்டுமே இருக்கிறார்கள்.

15 சதவிகிதம் என்றால் 1,077 பட்டியல் சாதி மாணவர்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், 370 இடங்கள் குறைவாக உள்ளன.

ஐஐடி
ஐஐடி

கோவா, தன்பாத், ரூர்கி ஆகிய மூன்றைத் தவிர மற்ற 20 ஐஐடி-களில் அனுமதிக்கப்பட்ட இந்தப் பிரிவு மாணவர் எண்ணிக்கை, அவர்களின் இட ஒதுக்கீடு சதவிகிதத்தைவிடக் குறைவாக இருக்கிறது.

சென்னை ஐஐடி-யிலும் 9.41 சதவிகிதம் மட்டுமே பட்டியல் சாதி மாணவர்களுக்கு இடம் கிடைத்திருக்கிறது.

இதேபோல் பழங்குடி மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் குறைந்த பட்சம் 7.5 சதவிகித இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், 4.46 சதவிகிதமே இடம்பெற்றிருக்கிறார்கள். மும்பை மற்றும் ரூர்கி தவிர மற்ற 21 ஐஐடி-களிலும் உரிய சதவிகிதம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இதில் மேலும் அதிர்ச்சியாக காந்தி நகர் ஐஐடி-யில் 124 பேர் முனைவர் பட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதில் ஒரு பழங்குடி மாணவர்கூட இடம்பெறவில்லை. ரோபார் ஐஐடி-யில் 186 மொத்த மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதில் ஒரு பழங்குடி மாணவர்கூட இல்லை.

திருப்பதி ஐஐடி-யில் 148 பேரில் ஒரு பழங்குடியினர்கூட இல்லை. பாலக்காடு ஐஐடி-யிலும் அனுமதிக்கப்பட்ட 146 பேரில் ஒரு பழங்குடியினர்கூட இல்லை.

பழங்குடியினருக்கான 15 சதவிகிதம் முழுமையாக நிரப்பப்பட்டிருந்தால், குறைந்தபட்சம் 538 பேருக்கு இடம் கிடைத்திருக்கும். ஆனால், 217 பேர் குறைவாக இருக்கிறார்கள்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

அமைச்சர் எனக்களித்த பதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மத்திய கல்வி நிறுவனங்கள், சட்டம் வரையறுத்துள்ள இட ஒதுக்கீட்டை ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கவில்லை. இது ஓர் ஆண்டுக் கணக்குதான். ஓராண்டில் மட்டும் 902 இடங்களை ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் இழந்திருக்கிறார்கள்.

இழந்ததே மொத்த இடங்களில் 13 சதவிகிதத்தை நெருங்குகிறது. ஓராண்டிலேயே இவ்வளவு என்றால் கடந்த காலங்களில் எவ்வளவு பறிபோயிருக்கும்... எதிர் காலத்தில் எவ்வளவு பறி போகும்?

உண்மைநிலை இப்படியிருக்கும் சூழலில் மத்திய கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ராம் கோபால் ராவ் தலைமையிலான நிபுணர் குழு, மாணவர் அனுமதிகளில் இட ஒதுக்கீடு முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்திருப்பதுதான் வேதனையானது.

ராம் கோபால் ராவ் குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு