Published:Updated:

ரொமிலா தாப்பர் - ஜே.என்.யு விவகாரம்: உண்மையில் நடந்தது என்ன?

ஐஷ்வர்யா

"இங்கு மட்டுமல்ல, புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் மாஸச்சூட் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில்கூட இந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ளது." - பூணம் குடாசியா, ஜே.என்.யு மக்கள் தொடர்புத்துறை

Romila Thapar
Romila Thapar

வரலாற்று ஆய்வாளரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சிறப்பு அந்தஸ்து பேராசிரியருமான ரொமிலா தாப்பரின் தற்குறிப்பு ஆவணத்தை (Curriculum vitae) பல்கலைக்கழக நிர்வாகம் பரிசீலனைக்காகக் கேட்டதாக அண்மையில் சர்ச்சை எழுந்தது.

உலகின் எந்தப் பல்கலைக்கழகத்திலுமே சிறப்பு அந்தஸ்து பேராசிரியர்களின் பதவி மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டதில்லை.
ரொமிலா

இந்த விவகாரம் குறித்து பேசுவதற்கு முன்பு ரொமிலா தாப்பர் குறித்த சிறிய அறிமுகம்... 87 வயதான ரொமிலா, பண்டைய இந்தியாவின் புராணக் கதைகளுடைய உண்மை வரலாறுகளை ஆய்வுசெய்து புத்தகங்களாக்கி வருபவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். குருஷேத்திரா பல்கலைக்கழகம், டெல்லிப் பல்கலைக்கழகம் தொடங்கி நாட்டின் முக்கியப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியிருக்கிறார். ’அசோகரும் மெளரியரின் வீழ்ச்சியும்’, ’பண்டைய இந்தியச் சமூக வரலாறு: சில விளக்கங்கள்’, ’தொடக்கநிலை இந்திய வரலாற்றில் அண்மைக் கண்ணோட்டங்கள்’, ’இந்திய வரலாறு: தொகுதி ஒன்று’, ’தொடக்கநிலை இந்தியா: தோற்றம் முதல் கி.பி 1300 வரை’ உள்ளிட்டவை இவரது முக்கியப் படைப்புகளில் சில. வரலாற்று அரசியலின் குறுகிய நோக்கங்களுக்குப் பலியாகிவிடக் கூடாது என்னும் அடிப்படையில், தனக்கு இருமுறை தரப்பட்ட பத்ம பூஷண் விருதை இரண்டு முறையுமே பெற மறுத்தார். 1991-ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது அதன் சிறப்புப் பேராசிரியர் (Professor Emerita) பொறுப்பில் இருக்கிறார்.

ரொமிலாவின் தற்குறிப்பு விவரங்களைக் கேட்டு கடந்த 12 ஜூலை அன்று பல்கலைக்கழக நிர்வாகம் அவருக்குக் கடிதம் எழுதியிருந்தது. அதற்குச் சில வாரங்களுக்குப் பிறகு பதில் கடிதம் எழுதியிருந்த ரொமிலா, "உலகின் எந்தப் பல்கலைக்கழகத்திலுமே சிறப்பு அந்தஸ்து பேராசிரியர்களின் பதவி மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டதில்லை. எனக்கு ஜே.என்.யு-வில் இந்தப் பதவி வழங்கப்பட்ட சமயமே, இது வாழ்நாளுக்குமான பதவி என்று குறிப்பிட்டுத்தான் இந்தப் பதவியை அளித்தார்கள். ஒரு பல்கலைக்கழகத்துக்கு எத்தனை சிறப்பு அந்தஸ்து பேராசிரியர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். சிறப்பு அந்தஸ்து பேராசிரியர் என்றால் என்ன என்பதே தெரியாமல்தான் பல்கலைக்கழகம் தற்போது என்னைக் கேள்வி கேட்கிறது?

Jawaharlal Nehru University
Jawaharlal Nehru University

பல்கலைக்கழகத்தில் அண்மைக்காலமாக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை நான் கேள்வி கேட்பதாலேயே இப்படிச் செய்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. என்னை அவமதிக்கத்தான் அவர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்றால், இது நகைப்புக்குரியதாகவே இருக்கிறது. மேலும், எனது பணிகளை மறு ஆய்வு செய்ய என்ன மாதிரியான அளவீடுகள் கையாளாப்படுகின்றன என்பது எனக்குத் தெரியப்படுத்த வேண்டும்“ என்று விவரமாகத் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தார். ஆனால், இதற்குப் பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து அவருக்குப் பதில் எதுவும் தரப்படவில்லை.

சட்டதிருத்தம் குறித்து ஜே,என்.யூ விளக்கத்தை இங்கே தரவிறக்கலாம்.

download
பல்கலைக்கழகத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தைத் தற்போது கொண்டுவருவதற்கான தேவை என்ன என்று கேட்டதற்கு, பல்கலைக்கழக நிர்வாகம் பதிலளிக்க மறுத்துவிட்டது.
Vikatan

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்புத்துறை அதிகாரி பூணம் குடாசியாவிடம் பேசினோம், “கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பல்கலைக்கழக நிர்வாகம் சிறப்பு அந்தஸ்து பேராசிரியர்களை நியமிப்பதில் சில சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்தது. சட்டத்திருத்தம் 32-ன்படி, 75 வயதுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களின் பதவிக்காலம் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும். அவர்களின் பணிகள், ஆய்வுகள் இதுநாள் வரை அவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செய்த பணிகள் உள்ளிட்டவை அந்த மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். தகுதியுள்ள மேலதிகமான சிறப்பு அந்தஸ்து பேராசிரியர் காலியிடங்களை நிரப்பவே இந்த மறுபரிசீலனை.

இங்கு மட்டுமல்ல, புகழ்பெற்ற பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் மாஸச்சூட் தொழில்நுட்பக் கழகம் ஆகியவற்றில் இந்தப் பழக்கம் நடைமுறையில் உள்ளன” என்று விவரமளித்தார். ஆனால், பல்கலைக்கழகத்தில் இந்தச் சட்டத்திருத்தத்தைத் தற்போது கொண்டுவருவதற்கான தேவை என்ன என்று கேட்டதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பதிலளிக்க மறுத்துவிட்டது.

வாட்ச்மேன் டு ஸ்டூடன்ட்... அசத்தும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வாட்ச்மேன்!

கடந்த வருடம் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில்தான் டெல்லி சட்டக்கல்லூரிப் பேராசிரியர் சுதா பரத்வாஜ் தேச விரோத நடவடிக்கைகளுக்காகக் கைதுசெய்யப்பட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.