Published:Updated:

`ரொட்டியும் உப்பும்தான் சத்துணவு!' - வீடியோ எடுத்த பத்திரிகையாளர் மீது உ.பி அரசு வழக்கு

கலிலுல்லா.ச

இங்கிருக்கும் உணவுகள் மோசமாகத்தான் இருக்கின்றன. சிலசமயங்களில் மாணவர்களுக்கு ரொட்டி மற்றும் உப்பு வழங்கப்படுகிறது. அதேபோல அரசியுடன் சேர்ந்து உப்பைக் கொடுத்து மாணவர்களை உண்ணச் சொல்கின்றனர்.

 Roti With Salt
Roti With Salt

உத்தரப்பிரதேச மாநிலம் மிசாபூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் ரொட்டிக்கு உப்பு வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றும் வைரலானது. இந்த வீடியோவை எடுத்த பத்திரிகையாளர் மீது அம்மாநில அரசு வழக்கு பதிவுசெய்துள்ளது. அந்தப் புகாரில், `உத்தரப்பிரதேச அரசின் மீது அவதூறு பரப்பும் வகையில் பத்திரிகையாளர் செயல்பட்டுள்ளார்’ எனக் குறிபிடப்பட்டுள்ளது.

 Roti With Salt
Roti With Salt
Vikatan

அந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் அமர்ந்துகொண்டு, ரொட்டிக்கு உப்பைத் தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். உத்தரப்பிரதேச அரசால் நிர்வகிக்கப்படும் மதிய உணவுக்கான வலைதளத்தில், மாணவர்களுக்கு என்ன வகையான உணவுகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து அட்டவணை இடம்பெற்றுள்ளது. அதில், அரிசி, ரொட்டி, காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன. வீடியோ எடுத்த பத்திரிகையாளருக்கு எதிராகப் பதிவுசெய்யபட்டுள்ள எஃப்.ஐ.ஆரில், `உள்ளூர் பத்திரிகையில் வேலைபார்க்கும் நிருபர் அந்த வீடியோவை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அனுப்பி, அது சமூகவலைதளங்களில் பரவியிருக்கிறது. இது மாநில அரசு மீதான அவதூறு பரப்பும் முயற்சி’ என்று குறிபிடப்பட்டுள்ளது.

``நாங்கள் இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம். ஒருவேளை மாணவர்களுக்கு ரொட்டியுடன் சேர்ந்து சாப்பிட உப்பு வழங்கியிருப்பது உறுதியாகும்பட்சத்தில், பள்ளியின் தலைமையாசிரியர், கிராம பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பந்தபட்டவர்கள் இடைநீக்கம் செய்யபடுவார்கள்” என்று உயர் அதிகாரி ஒருவர் என்டிடிவி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ``இங்கிருக்கும் உணவுகள் மோசமாகத்தான் இருக்கின்றன. சிலசமயங்களில் மாணவர்களுக்கு ரொட்டி மற்றும் உப்பு வழங்கப்படுகிறது. அதேபோல அரசியுடன் சேர்ந்து உப்பைக் கொடுத்து மாணவர்களை உண்ணச் சொல்கின்றனர்.

Government school students
Government school students

எப்போதாவதுதான் பால் கொடுக்கப்படுகிறது. மற்றபடி, வேறு எதுவும் வழங்கப்படுவதில்லை. வாழைப்பழங்கள் ஒருபோதும் கொடுப்பதில்லை. கடந்த ஓராண்டாக இதே நிலைதான் நீடித்து வருகிறது” என்று பவன் ஜைஸ்வால் என்ற பெற்றோர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச அரசால் கடந்த 2018-ம் ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது. ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைகின்றனர். இந்தத் திட்டத்தில், `ஒவ்வொரு மாணவருக்கும் நாள் ஒன்றுக்கு 450 கலோரி நிறைந்த உணவு வழங்கப்பட வேண்டும். அதில் 12 கிராம் புரோட்டின் இருக்க வேண்டும். இந்த உணவுகள் வருடத்துக்கு குறைந்தபட்சம் 200 நாள்கள் கொடுக்க வேண்டியது கட்டாயம்’ என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை உத்தரப்பிரதேச அரசு பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.