Published:Updated:

`ரகசிய ஆலோசனை, விருந்து!' - சர்ச்சையான ஹெச்.ராஜாவின் சேலம் பெரியார் பல்கலைக்கழக வருகை

``இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கட்சிக்காரர்களும் பல்கலைக்கழகத்துக்கு வந்தால் துணைவேந்தர் சேம்பரில் அமர வைத்து ஆலோசனை செய்வார்களா?''

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம் ( எம். விஜயகுமார் )

சேலம் பெரியார் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச். ராஜா வருகை தந்ததோடு துணைவேந்தர் இல்லாதபோது அவருடைய அறையில் பொறுப்பு பதிவாளர் மற்றும் பேராசிரியர்களோடு ரகசிய ஆலோசனை செய்ததும், பிறகு விருந்தினர் மாளிகையில் விருந்துண்டு மகிழ்ந்ததும் தற்போது பல்கலைக்கழகத்தில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம்

இந்த விவகாரத்தில் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்க்கும் பேராசிரியர்கள், ''முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1997 -ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி தந்தை பெரியார் பிறந்த தினத்தில் இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை சாதி, மத பேதமின்றி அறத்தோடு அறிவியலைப் போதிக்கும் நிலையமாகத் திகழ்ந்து வந்தது. ஆனால், தற்போது அரசியல்வாதிகளுக்கு அடிபணியும் இடமாக மாறி இருப்பது வேதனையாக இருக்கிறது.

தர்மபுரியில் மக்கள் சந்திப்புக்காகச் செல்லும் வழியில் பல்கலைக்கழகத்ததுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா வர இருப்பதாகத் தகவல் வந்தது. அதையடுத்து பா.ஜ.க கட்சியினர் பல்கலைக்கழகத்தில் கூடினர். பொறுப்பு பதிவாளர் தங்கவேல் மற்றும் சில பேராசிரியர்கள் வாசலுக்குப் போய் ராஜாவை வரவேற்று பல்கலைக்கழகத்துக்குள் அழைத்து வந்தார்கள்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா வருகையை முன்கூட்டியே அறிந்ததால் என்னமோ தெரியவில்லை துணைவேந்தர் குழந்தைவேலு வரவில்லை. அவர் இல்லாதபோது அவருடைய அறையைத் திறந்து அங்கு அமர்ந்து ஒரு மணி நேரம் ஹெச்.ராஜா பொறுப்பு பதிவாளர் தங்கவேல் மற்றும் சில பேராசிரியர்களிடம் ரகசிய ஆலோசனை மேற்கொண்டார். பிறகு, அனைவரும் கிளம்பிச் சென்று பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் விருந்துண்டு மகிழ்ந்தார்கள். இறுதியில் ஹெச்.ராஜா பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். ஆனால், தான் வந்ததற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

Vikatan

மக்கள் பிரதிநிதியாகவோ, அரசு பதவியிலோ இல்லாத ஒருவரைத் துணைவேந்தர் இல்லாதபோது அவருடைய சேம்பரில் எதன் அடிப்படையில் அமர வைத்து ஆலோசனை செய்தீர்கள்? விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்தீர்கள்? பல்கலைக்கழக வளாகத்துக்குள் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுக்க அனுமதித்தீர்கள்? இப்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கட்சிக்காரர்களும் பல்கலைக்கழகத்துக்கு வந்தால் துணைவேந்தர் சேம்பரில் அமர வைத்து ஆலோசனை செய்வார்களா... விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுப்பார்களா... இல்லை பல்கலைக்கழக வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி கொடுக்க அனுமதிப்பீர்களா? எனப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி இருக்கிறோம்'' என்றார்கள்.

குழந்தைவேலு
குழந்தைவேலு

இதுபற்றி துணைவேந்தர் குழந்தைவேலுவிடம் கேட்டதற்கு, ''பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பெர்ஷனல் விசயமாகப் பல்கலைக்கழகத்துக்கு வந்திருக்கிறார். அவர் இங்கு யாரிடமும் எந்த ரகசியமும் பேசவில்லை. நான் மீட்டிங்கில் இருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. மற்றபடி எந்த ஒரு விதிமீறல்களும் நடைபெறவில்லை. இதைத் தேவையில்லாமல் பெரிசுபடுத்தாதீர்கள்'' என்றார்.