Published:Updated:

`68-வது இடத்தில் இருந்து 83-வது இடம்!' -ஏன் பின்னுக்குத் தள்ளப்பட்டது பெரியார் பல்கலைக்கழகம்?

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், ஆய்வுக்கூட பணியாளர்கள் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்வதால் மாணவர்களுக்குத் திறம்பட வகுப்புகள் எடுக்கப்படுவதில்லை.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசியத் தர மதிப்பீட்டுக் குழு வெளியிட்டுள்ள பட்டியலின்படி, கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். இதனால் பல்கலைக்கழக பேராசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தரவரிசைப் பட்டியல்
தரவரிசைப் பட்டியல்

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகியவற்றின் தரத்தினை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசியத் தர மதிப்பீட்டுக் குழு ஒவ்வோர் ஆண்டும் ஆய்வு செய்து வெளியிடுகிறது. இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த 2019-ம் ஆண்டு 68-வது இடத்தில் இருந்தது. தற்போது 2020-ம் ஆண்டு 83-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இதனால் பெரியார் பல்கலைக்கழகத்தின் மதிப்பும் குறைந்துள்ளது.

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் பேசினோம். ``மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த வாரம் 1 முதல் 100 வரையிலான பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 83-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 68-வது இடத்தைப் பெற்றது. இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், ஆய்வுக்கூட பணியாளர்கள் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்வதால் மாணவர்களுக்குத் திறம்பட வகுப்புகள் எடுக்கப்படுவதில்லை. முறையான நேரத்தில் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் அறிவிப்பதும் இல்லை. உரிய நேரத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதும் இல்லை. மாணவ, மாணவிகளைச் சரியாக கண்டுகொள்ளாமல் இருப்பதால் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயே மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.

``வாஸ்து பார்த்து கட்டிடங்களை இடித்தீர்களா?’’ - பெரியார் பல்கலை துணைவேந்தர் விளக்கம்

பல்கலைக்கழகத்தில் உள்ள பதிவாளர், தேர்வாணையர், நிதி அலுவலர், உடற்கல்வி இயக்குநர், நூலகர், தொலைத் தூரக் கல்வி இயக்குநர் மற்றும் துறைத் தலைவர்கள் என முக்கியப் பதவிகளில் நிரந்தரப் பணியாளர்கள் இல்லாமல் பொறுப்பு பணியாளர்களே இருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. இதுபோன்ற பல காரணங்களால் தரவரிசைப் பட்டியலில் பெரியார் பல்கலைக்கழகம் பின்நோக்கிச் சென்றிருக்கிறது.

முக்கியப் பதவிகளில் நிரந்தரப் பணியாளர்கள் இல்லாமல் பொறுப்பு பணியாளர்களே இருப்பது பற்றி என்னிடம் கேட்கக் கூடாது. நானே பொறுப்புப் பதவியில் இருக்கிறேன்.
பதிவாளர் தங்கவேல்

பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் பின்னோக்கிப் போவதால் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியின் அளவு குறையும். பல்கலைக்கழக ஆராய்ச்சிக்காக டி.எஸ்.டி நிறுவனம் வழங்கும் நிதியும் குறையும். பல்கலைக்கழக உள்கட்டமைப்புக்காக ஐ.சி.எஸ்.ஆர் நிறுவனம் வழங்கும் நிதியும் பெருமளவு குறைக்கப்படும். இதனால் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி மேன்மேலும் பாதிக்கப்படும்'' என்றார்கள்.

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம்

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், ``தரவரிசைப் பட்டியலில் பெரியார் பல்கலைக்கழகம் பின்னுக்குப் போனதற்கான காரணத்தை இனிமேல்தான் ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவில் 960 பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அதில் தரவரிசைப் பட்டியலில் 100-க்குள் வருவதையே நோக்கமாக வைத்துச் செயல்பட்டு வருகிறோம். முக்கியப் பதவிகளில் நிரந்தரப் பணியாளர்கள் இல்லாமல் பொறுப்பு பணியாளர்களே இருப்பது பற்றி என்னிடம் கேட்கக் கூடாது. நானே பொறுப்புப் பதவியில் இருக்கிறேன். தகுதி இல்லாமல் யாருக்கும் பொறுப்புப் பதவி கொடுக்க மாட்டார்கள். இதுபற்றி உயர் கல்வித் துறையில் கேட்க வேண்டும்'' என்றார் இயல்பாக.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு