Published:Updated:

`புதிய கல்விக் கொள்கை குறித்து ஸ்டாலின், சூர்யாவுடன் நேரடியாக விவாதிக்கத் தயார்!' - சசிகலா புஷ்பா

பி.ஆண்டனிராஜ்

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் சூர்யா ஆகியோருடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என சசிகலா புஷ்பா எம்.பி சவால் விடுத்துள்ளார்.

சசிகலா புஷ்பா
சசிகலா புஷ்பா

மத்திய அரசு அறிமுகப்படுத்த இருக்கும் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா கல்விக் கொள்கை தொடர்பான கருத்தைத் தெரிவித்திருந்தார். நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்டோருடன் கல்வியாளர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா

ஆனாலும், பா.ஜ.க-வினர் பலரும் நடிகர் சூர்யா கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் காட்டமாக அவரை எதிர்த்து வருகின்றனர். மாநிலங்களவை உறுப்பினரான சசிகலா புஷ்பா இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மத்திய அரசு நாடு முழுமைக்குமான தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. நமது வருங்காலத் தலைமுறையின் வாழ்க்கையைத் தீர்மானிக்க இருக்கும் இந்த கல்விக் கொள்கையில் சிறந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய கள்விக் கொள்கையில் 12-ம் வகுப்பு வரை கட்டணமில்லா இலவசக் கல்வி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி கட்டாயம் என்றும் எட்டாம் வகுப்பு வரை அதை நீட்டிக்கவும் வலியுறுத்துகிறது. மாணவர்கள் அவர்களின் விருப்பத்திற்கேற்ப பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், சிறப்பான மதிப்பெண் பெறும்வரை, ஒரே தேர்வை பலமுறை எழுத முடியும்.

புதிய கல்விக் கொள்கையின் சாராம்சங்கள் மாணவர்களுக்குப் பயன் உள்ளதாக அமைந்துள்ளன.
சசிகலா புஷ்பா எம்.பி

ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வின் மூலமாக ஆட்டோ தொழிலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தரப்பு மக்களின் குழந்தைகளின் மருத்துவக் கனவு சுலபமாக்கி இருக்கிறது. இது தவிர, நவோதயா பள்ளிகள் கல்வியுடன் உணவு மற்றும் உறைவிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. நவோதயா பள்ளிகளில் பயிலும் 70 சதவிகிதம் மாணவர்கள், நீட், ஐ.ஐ.டி போன்ற நுழைவுத் தேர்வுகளில் சிறப்பாக முத்திரை பதிக்கின்றனர். உண்மையில் புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் உள்ள அனேகம் அரசியல்வாதிகளும் நடிகர்களும் பெரும்பான்மையான கல்வி நிலையங்களின் அதிபர்களாக இருக்கிறார்கள். அதனால், புதிய கல்விக் கொள்கை அவர்களின் கல்வி வியாபாரத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்று பயப்படுகிறார்கள். அந்த அச்சத்தின் காரணமாகவே முற்றிலும் இலவசமாகக் கிடைக்க இருக்கும் தரமான புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். இத்தகைய சிறப்பு மிகுந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நேரடி விவாதத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் சூர்யா தயாரா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.