Published:Updated:

`பாவம், அவங்களே கன்ஃபியூஸ் ஆகிட்டாங்க!' - பள்ளிக் கல்வித்துறை அறிவித்து திரும்பப் பெற்ற 6 விஷயங்கள்!

K. A. Sengottaiyan
Listicle
K. A. Sengottaiyan

அதிரடியாக அறிவிப்புகளையும், புதிய பாடத்திட்டத்துடன் கூடிய புத்தகங்களையும் வெளியிடும் பள்ளிக்கல்வித்துறை அண்மைக்காலங்களில் வெளியிடும் அறிவிப்புகளுக்கு, எதிர்ப்புகள் எழும்போது, அவற்றைப் பின்வாங்கி வருகிறது. அப்படி அறிவிக்கப்பட்டு, சர்ச்சைக்குள்ளாகி, வாபஸ் பெறப்பட்டவற்றின் தொகுப்பு.


1
உயிரெழுத்து சர்ச்சை!

அ-அகத்தியர்.. ஆ-ஆஞ்சநேயர்.. உயிரெழுத்து சர்ச்சை!

1-ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், வழக்கமாக இடம்பெறும் அ என்றால் அம்மா, ஆ என்றால் ஆடு, இ என்றால் இலை என்பது இடம்பெறாமல், அ என்றால் அகத்தியர், ஆ என்றால் ஆஞ்சநேயர், இ என்றால் இமயம், ஈ என்றால் ஈசன் என்று அச்சிடப்பட்டிருந்தது.

இது சமூக வலைதளங்களில் பரவி, பெரும் எதிர்ப்பைச் சந்தித்தது. பாடப் புத்தகங்களில் மதத் திணிப்பு என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பாடப் புத்தகத்தைத் தயாரித்த பேராசிரியர்கள் செய்த தவற்றால் இப்படி நிகழ்ந்ததாகவும், இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.


2
Tamil Script

தமிழை விட தொன்மையானதா சம்ஸ்கிருதம்?

பன்னிரண்டாம் வகுப்பின் ஆங்கிலப் பாடப் புத்தகத்தில் மொழிகளின் தோற்றம் பற்றிய பாடத்தில், தமிழ்மொழி கி.மு.300ஆம் ஆண்டில் தோன்றியதாகவும், சம்ஸ்கிருதம் கி.மு.2000ஆம் ஆண்டில் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தமிழ்ப் பற்றாளர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியது.

உலகின் மூத்த மொழி தமிழ் எனப் பல ஆய்வறிஞர்கள் கூறியிருக்க, சம்ஸ்கிருதத்தைப் பழைமையானதாகக் காட்டும் நோக்கம் என்ன என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டது. தலைவர் மு.க.ஸ்டாலின், "இது தமிழக அரசா? சமஸ்கிருத சர்க்காரா?" என்று கேட்டு, கண்டனம் தெரிவித்தார்.

கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, அமைச்சர் செங்கோட்டையன், "12ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழி பற்றிய கருத்து உடனடியாக திருத்தப்படும். தவறாக குறிப்பிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உலகிலேயே மூத்த மொழி தமிழ் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை" என்று பேட்டியளித்து, இந்தச் சர்ச்சையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

3
சாதிக்கயிறு

சாதிக்கயிறு கலாசாரம்!

கடந்த ஆகஸ்ட் மாதம், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், "தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சாதிப்பிரிவுகளைக் குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளைக் கட்டி வரும் மாணவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்குத் தலைமை ஆசிரியர்கள் அறிவுரை கூற வேண்டும். பாகுபாடுகள் காட்டுவோர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் குறிப்பிட்ட வண்ணக் கயிறுகள், வளையங்களை அணிந்து வரக் கூடாது. அதுபோல் சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் நெற்றியில் திலகமிட்டு வர அனுமதிக்கக் கூடாது" என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.

பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை

மாணவர்களிடையே சாதி பேதம் தலைதூக்கக் கூடாது என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு, பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவால் எதிர்க்கப்பட்டது. "கைகளில் கயிறு அணிவதும் நெற்றியில் திலகம் இடுவதும் இந்துக்களின் மத நம்பிக்கை. இந்த நம்பிக்கையில் பள்ளிக்கல்வித்துறை தலையிடுவது தவறு" என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் ஹெச்.ராஜா.

அதைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "என் கவனத்துக்கு வராமலே பள்ளிக்கல்வித்துறை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. பள்ளிகளில் பழைய நிலையே தொடரும்" என்றார். அவரது இந்த முடிவுக்குப் பல திசைகளிலிருந்தும் எதிர்ப்புகள் எழ, "தமிழகப் பள்ளிகளில் சாதிப்பாகுபாடு இல்லை; அப்படி சாதிப்பாகுபாட்டைக் குறிக்கும் வகையில் கயிறு கட்டி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூற, `தமிழகப் பள்ளிகளில் சாதிப் பாகுபாடே இல்லை!' என்ற அதிசயத்தக்க கண்டுபிடிப்போடு இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


4
School Text Books

பாடப் புத்தகங்களில் சர்சைக்குரிய கருத்துகள்!

இந்தக் கல்வியாண்டில் புதிதாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில், 7, 8, 10, 11 ஆகிய வகுப்புப் பாடப் புத்தகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்தன. 7-ம் வகுப்பு, சமூக அறிவியல் பாடத்தில் 'இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி' என இடம்பெற்றிருந்தது. 7-ம் வகுப்பு தமிழ், 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடங்களில், 'சுதந்திரத்திற்குப் பின், முஸ்லிம் மக்கள் முஸ்லிம் ஆட்சி நிறுவக்கோரி புரட்சியில் ஈடுபட்டனர்' என்ற பிழையான தகவல் இடம்பெற்றிருந்தது. 7-ம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில், முத்துராமலிங்கத் தேவர் குறித்த சர்ச்சைக்குரிய வரிகளும் இடம்பெற்றன.

புகார்கள் வெளியான பிறகு, பள்ளிக்கல்வித்துறை மாநிலம் முழுவதும் சுற்றறிக்கை அனுப்பி, 'இந்தியாவின் அலுவல் மொழி இந்தி; இந்தி பேசாத மாநிலங்களில் அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்கும்' என்ற வரியைச் சேர்த்ததோடு, மற்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கவும் உத்தரவிட்டது.


5
Public Exams

5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு!

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற உள்ளீடு, புதிய கல்விக்கொள்கைக்கான கஸ்தூரிரங்கன் வரைவு அறிக்கையில் கொடுக்கப்பட்டிருந்தது. புதிய கல்விக்கொள்கையில் மற்ற உள்ளீடுகள் எதிர்க்கப்பட்ட போது, இதுவும் எதிர்க்கப்பட்டது.

புதிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, மத்திய அரசின் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை. 'சமூக நீதிக்கு எதிரானது', 'குலக்கல்விக்கான மறைமுக தந்திரம்' என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. கல்வியாளர்கள் குழந்தைகள் மீது திணிக்கப்படும் சுமையாக இந்தத் தேர்வுகளை வர்ணித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதிலும் பின்வாங்கினார். எனினும், 'மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வுகளிலிருந்து விலக்கு' என அறிவித்துள்ளார் செங்கோட்டையன். 'மூன்றாண்டு வரையிலும் மாணவர்களின் திறனை வளர்க்க மத்திய அரசு முயன்று வருகிறது' என்று அவர் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


6
அறிவிக்கை

காலாண்டு விடுமுறையும், காந்தி பிறந்த தினக் கொண்டாட்டமும்!

மத்திய அரசின் திட்டத்தின்கீழ் வரும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் வெளியிட்ட அறிவிக்கையில், "மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் அறிவுறுத்தலின்படி 23 செப்டம்பர் தொடங்கி 2 அக்டோபர் வரை, மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினக் கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்த வேண்டும்" என்ற உத்தரவோடு வெளியானது.

காலாண்டு தேர்வுகளை முடித்து, விடுமுறைகளுக்குக் காத்திருந்த மாணவர்களுக்குக் குழப்பத்தை விளைவித்தது இந்த உத்தரவு. மேலும், ஆசிரியர், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட தரப்புகளிடமிருந்தும் அதிருப்தி எழுந்தது.

தொடர்ந்து நீடித்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அமைந்தது பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு. "காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி" என்று உறுதிசெய்யப்பட்டது.

பள்ளி வாழ்க்கைதான் ஒருவனது வாழ்க்கையின் ஆணிவேர். வாழ்நாள் முழுமைக்குமான அறிவும் தெளிவும் இன்னபிற நற்குணங்களும் அங்கேதான் ஒருவன் கற்றுக்கொள்வான். ஆனால் அங்கேயே இப்படிக் குழப்பங்களும் தெளிவின்மையும் நடந்தால் அவர்கள் எதிர்காலம் மட்டுமல்ல... இந்த நாட்டின் எதிர்காலமே கேள்விக்குரியதாகிவிடும்.


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism