Published:Updated:

கொரோனா: `மாணவர்களுக்கு முழுத் தேர்ச்சி அளிக்கலாமா?!' -தலைமையாசிரியர்கள் சங்கம் சொல்வதென்ன?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மாணவர்களின் பள்ளித் தேர்வுகள் முக்கியமானதா அல்லது மாணவர்களின் உயிர் முக்கியமானதா எனும் சூழலில் மாணவர்களின் உயிருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க, உலக சுகாதார அமைப்பால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக, இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் தொற்று பரவாமல் இருக்க பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஐந்தாம் வகுப்பு வரை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை

இந்நிலையில், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம், 'ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் விடுமுறையை அனைத்து மாணவர்களின் நலன் கருதி, ஒன்பதாம் வகுப்பு வரை நீட்டிக்க வேண்டும்' எனத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பத்திரிகைச் செய்தி வெளியிட்ட தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் சிவகங்கை கல்வி மாவட்டச் செயலாளர் வே.ம.விநாயக மூர்த்தியிடம் பேசினோம். "மாணவர்கள் கொரோனாவின் வீரியத்தைச் செய்தித் தொலைக்காட்சிகள் மூலமாக அறிந்திருக்கின்றனர். இது மாணவர்களிடையே வைரஸ் தொற்று குறித்த அச்சத்தையும், உளவியல் ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படச் செய்துள்ளது. மாணவர்களின் பள்ளித் தேர்வுகள் முக்கியமானதா அல்லது மாணவர்களின் உயிர் முக்கியமானதா எனும் சூழலில் மாணவர்களின் உயிருக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். எங்களுடைய நோக்கம், எந்த ஒரு மாணவனும் கொரோனா வைரஸால் பாதிப்படையக் கூடாது என்பதால் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

வே.ம.விநாயக மூர்த்தி
வே.ம.விநாயக மூர்த்தி

மேலும், மாணவர்களின் அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்ணைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்ச்சியை அளிக்கத் தமிழக அரசு வழிவகை செய்யவேண்டும் என்பதோடு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு நாள்களைத் தவிர பிற நாள்களில் பள்ளிக்கு செல்லவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பள்ளிகள் நடத்தப்படும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வைரஸ் தொற்றிலிருந்து மாணவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள, சோப்புகள் மற்றும் மாஸ்க் ஆகியவற்றை பள்ளிக்கல்வித் துறை வழங்க வேண்டும்" என்றார்,

அடுத்த கட்டுரைக்கு