Published:Updated:

`சென்னை ஐ.ஐ.டி.யில் ஒடுக்குமுறைகள் நடப்பது உண்மை!' - பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்

பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஸ்வராஜ் வித்வானும் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், சமீபத்தில் சென்னை ஐஐடி-யில் மாணவி ஃபாத்திமா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் விவாதிக்கப்பட்டது.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி-யில், கேரள மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், 'சென்னை ஐஐடி-யில் ஒடுக்குமுறைகள் நடைபெறுவது உண்மை' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருக்கிறார், பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணைய (National Commission for Scheduled Castes) உறுப்பினர் ஸ்வராஜ் வித்வான்.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

அனைத்திந்திய தொழில்நுட்பக் கழகங்களுடைய பட்டியல் சமூக ஊழியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சமீபத்தில் டெல்லியில் நடந்தது. பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் ஸ்வராஜ் வித்வானும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில், சமீபத்தில் சென்னை ஐஐடி-யில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வராஜ், "ஐஐடி-க்களில் பட்டியல் சமூக மாணவர்களும் ஊழியர்களும் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்வது உண்மை" என்று குறிப்பிட்டார்.

10 வருடங்களில் 47 பேர் மட்டுமே!
கடந்த 10 வருடங்களில், எம்எஸ் படிப்புகளுக்காக 2,320 மாணவர்கள் சென்னை ஐஐடி-யில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
ஸ்வராஜ் வித்வான்
ஸ்வராஜ் வித்வான்
உணவுத் தொழில்நுட்பத்தில் இளநிலை, முதுநிலை, முனைவர் பட்ட கல்வி வாய்ப்புகள்!

"சென்னை ஐஐடி-யில் இருக்கும் பட்டியல் சமூக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் சூழல் மிகவும் கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது. இன்றளவும் ஐஐடி-யின் ஆசிரியர் நியமனம் மற்றும் மாணவர்கள் சேர்க்கைக்கான இட ஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின்படி. கடந்த 10 வருடங்களில் எம்எஸ் படிப்புகளுக்காக 2,320 மாணவர்கள் சென்னை ஐஐடி-யில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடிகள் சமூகத்தைச் சேர்ந்தவர்களில் வெறும் 6 பேர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "முனைவர் பட்ட ஆய்வுகளுக்காகக் கடந்த 10 ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட 3,846 பேரில் வெறும் 213 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பழங்குடிகள் சமூகத்திலிருந்து 21 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்படியென்றால், மீதம் சேர்க்கப்பட்டவர்கள் எந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டார்கள் என்கிற கேள்வி எழுகிறது. இது, அபாய எச்சரிக்கையாக இருக்கிறது" என்றார்.

சென்னை ஐஐடி
சென்னை ஐஐடி

மாணவர்கள் சேர்க்கையில் மட்டுமல்ல, ஆசிரியர்கள் சேர்க்கையிலும் இதுபோல பாகுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன என்று அதற்கான ஆதாரங்களையும் முன்வைத்தார். "அவுட்சோர்ஸிங் வழியாக ஊழியர்களை எடுத்துக்கொள்ளும் ஐஐடி-யில் இடஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. இன்றளவும் சென்னை ஐஐடி பட்டியல் சமூக ஊழியர்கள் நலச்சங்கத்தை அங்கீகரிக்கப்பட்ட சங்கமாகக் கருதவில்லை. பட்டியல் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த சென்னை ஐஐடி ஊழியர்கள், மனரீதியாக உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். ஏதேனும் பிரச்னையை எழுப்பினால், மெமோ கொடுத்துவிடுவார்களோ என்கிற அச்சத்தில் எப்போதும் இருக்கிறார்கள். இதையெல்லாம் மீறி, அங்கே பாகுபாடு நிலவுகிறது. ஒருவேளை பட்டியல் சமூக ஊழியர்களின் குறைகேட்பு கமிட்டி சரிவர செயல்பட்டிருந்தால், இந்தப் பிரச்னைகள் நிலவியிருக்காது. அதனால் சரிவர இயங்கும் கமிட்டியை அமைப்பது உடனடித் தேவையாக இருக்கிறது" என்றார்.

தான் இதுவரை மூன்று ஐஐடி-க்களைப் பார்வையிட்டுள்ளதாகவும், சென்னை ஐஐடி-யில்தான் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் ஸ்வராஜ் தெரிவிக்கிறார். பட்டியல் சமூகம் என்று இல்லாமல் அனைத்து தரப்பு மாணவர்களுமே அங்கே நிர்வாகத்தால் பல சிக்கல்களைச் சந்தித்துவருவதாக ஸ்வராஜ் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருப்பதை சுட்டிக்காட்டி பேசிய அவர், "இவர்களில் எத்தனை பேர் கல்வி மறுக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவில்லை. இந்த தற்கொலைகள் குறித்து நிர்வாகம் அக்கறை எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. இதன் உண்மையான காரணத்தைக் கண்டறிய அவர்கள் முனைப்புக் காட்டவில்லை" என்றார்.

கனவைக் கலைத்த கல்வி வளாகம்!

மேலும், ஐஐடி-யின் இந்தத் தொடர் மரணங்கள் குறித்து குடியரசுத்தலைவர், பிரதமர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் எனப் பல தளத்திலும், தனிப்பட்ட அளவில் இந்தப் பிரச்னையை எடுத்துச்செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் இதற்குத் தீர்வுகாணும் வரை ஓயப்போவதில்லை என்றும் அவர் தனது சந்திப்பில் குறிப்பிட்டார்.