`துணைவேந்தர் பதவிகள்...
ஆளுநருக்கு ஐந்து
ஒன்றிய ஒதுக்கீட்டில்!
முதல்வருக்கு மூன்று
மாநிலப் பங்கில்!
அமைச்சர்களுக்கு ஐந்து
அரசியல் தளத்தில்!
அதிகாரிகள்
அனைத்துச் சாதிகள்
கணக்குப் போட்டால்...
இன்னும் பல
பல்கலைக்கழகங்கள்
ஆரம்பிப்பது அதிஅவசியம்!'
- இது, இந்தியாவில் துணைவேந்தர் தேர்வு பற்றிய ஒரு வேதனைக் கவிதை!
கல்வி மற்றும் கல்லூரிகளின் தரம் பற்றிய விவாதங்கள், நம் நாட்டில் ஓரளவுக்காவது முன்னெடுக்கப்படுகின்றன - பல தளங்களில். ஆனால், கல்லூரிகளை வழிநடத்தும் துணைவேந்தர்களின் தரம், தகுதி, நியமனம், பற்றிய விவாதம்... கிட்டத்தட்ட இல்லவே இல்லை என்கிற சூழல்தான் நிலவுகிறது. துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்வதா.. ஒன்றிய அரசு நியமனம் செய்வதா என்கிற விவாதம் மட்டுமே நடக்கிறது.
அப்படியானால் துணைவேந்தர்கள் எல்லாம் தகுதியானவர்களாக நியமனம் செய்யப்படுகிறார்களா? ஒவ்வொரு பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கையில் வைத்திருக்கக்கூடிய, துணைவேந்தர் எனும் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களின் செயல்பாடுகள், ஊழல்கள் பற்றியெல்லாம் அடிக்கடி பத்திரிகைகளில் வரும் செய்திகளே இதற்குச் சாட்சி.

உலகத்தரத்தில் ஒன்று கூட இல்லை!
இந்தியாவில் சுமார் 800 பல்கலைக்கழகங்கள் இருந்தும், ஒன்றுகூட உலகத் தரவரிசையில் 200 எண்ணிக்கைக்குள் வரவில்லை என்பதுதான் கொடுமை. இந்தக் கொடுமைக்குக் காரணம்... 'துணைவேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு பணம் புரள்கிறது' என்பதுதான். இதைச் சொன்னது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இல்லை, கல்வியாளர்கள் இல்லை, சமூக ஆர்வலர்கள் இல்லை, துணைவேந்தர்களை நியமனம் செய்யக்கூடிய அதிகாரம் படைத்த மாநிலத்தின் ஆளுநர் ஒருவரே வாய்விட்டுச் சொன்ன உண்மைதான் இது.
ஊழலுக்கே முதலிடம்!
பல்கலைக்கழகங்களில் அலுவலக ஆரம்பகட்ட ஊழியர்கள் முதல் பேராசிரியர் வரை நியமனம் செய்ய பணம் வசூல் நடக்கிறது. பணம் பெற்றுக்கொண்டு தகுதி இல்லாத ஊழியர்கள் நூற்றுக்கணக்கில் தேர்வுசெய்யப்படுகின்றனர். கல்லூரி முதல்வர்கள், கல்விநிலையங்களின் துறைசார் இயக்குநர்கள் நியமனங்களில் எல்லாம் முறைகேடுகள்தான் மலிந்துகிடக்கின்றன. 'தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குவதில் பல கோடி ஊழல், சாதிய அடிப்படையில் பதவிகள் பங்கு பிரிப்பு, புதிய பாடப்பிரிவுகள் தொடங்க லஞ்சம் பெற்ற துணைவேந்தர், பாலியல் வழக்கில் முன்னாள் துணைவேந்தர் கைது, லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகத் துணைவேந்தர் சிக்கினார்' இப்படிப்பட்ட செய்திகள் அடிக்கடி செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் அடிபடுகின்றன. இத்தகையக் குற்றங்களில் சிக்கியவர்களுக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்புகளும் அவ்வப்போது வந்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.
ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனமே தவறு என கீழமை நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. மேல்முறையீடு செய்து தடைபெற்ற அந்தத் துணைவேந்தர், இறுதிவரை பதவியில் இருக்கின்றார். ஒரு துணைவேந்தர் இரண்டுமுறை பதவியில் இருந்துவிட்டு, 70 வயதைக் கடந்த பின் மூன்றாவது முறையாகத் தொடர முயல்கின்றார். பொதுநல வழக்குத் தொடர்ந்து அவரை வீட்டுக்கு அனுப்பும் அளவுக்குத்தான், துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டங்கள் இருக்கின்றன.

தங்கம் கடத்தியவரெல்லாம் துணைவேந்தர்!
துணைவேந்தர்கள் நியமனத்துக்கு முன்பாக, அந்தப் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர்கள் மீதான புகார்கள், ஊழல்குற்றச்சாட்டுள் என்று பலவும் செய்திகள் ஊடகங்களில் வரும். ஆனாலும், அவர்களே துணைவேந்தர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். அதற்குப்பின் அவர்பற்றிய செய்திகள் எதுவும் வெளியில் வராது.
தங்கம் கடத்தியவர், மரம் வெட்டி விற்றவர், கட்டடம் கட்டுவதில் ஊழல் செய்தவர், பெண்களிடம் தவறாக நடந்துகொண்டவர், நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி, அமைச்சருக்கு வேண்டியவர், முன்னாள் அமைச்சரின் மருமகள் என்கிற தகுதிகளோடு தேர்வு செய்யப்படுபவர்கள் இங்கே அதிகம். துணைவேந்தராகப் பொறுப்பேற்றவுடன், அவர் மீது வைக்கப்பட்ட எல்லாக் குற்றங்களும் மறக்கப்பட்டு, திறமையான, தகுதியான துணைவேந்தர் என்கிற பாராட்டுகள் குவியும். அவருடைய சுயகுறிப்புகள் அடிப்படையில் மட்டுமே ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படும். அந்தப் பதவிக்கு அவருடன் போட்டியில் இருந்தவர்களின் தகுதி, திறமை பற்றியெல்லாம் யாரும் எடுத்துக்கூறமாட்டார்கள், யாருக்கும் தெரியாது... துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்காகக் கவர்னரால் நியமிக்கப்படும் தேடல் குழுவைத் தவிர.
23-ம் புலிகேசிகள்!
'துணைவேந்தராக இவரை நியமிக்கக்கூடாது. இவர் ஒரு ஊழல் பேர்வழி' என்று போர்க்கொடி தூக்கிய பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களே, பிறகு பொன்னாடை போர்த்தி சல்யூட் அடிக்க ஆரம்பித்துவிடும். மூன்று ஆண்டுக் காலத்துக்கு அவர் முடிசூடிய மன்னர். ஒவ்வொரு துணைவேந்தரும் அவருக்கான ஆட்களை, முதல்வர்களாக, இயக்குநர்களாக நியமனம் செய்துகொள்வார்கள். அவருக்கு என்று ஒரு கூட்டம் உருவாகிவிடும். அவரும் துணைவேந்தர் ஆனதும் எல்லாத் தகுதிகளும் தனக்கு வந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு செயல்பட ஆரம்பித்துவிடுவார். பல துணைவேந்தர்களின் செயல்பாடுகளைக் கேட்டால், இம்சை அரசன் 23 -ம் புலிகேசி திரைப்படம் போல பல படங்கள் எடுக்கலாம்.

சில துணைவேந்தர்களின் நடவடிக்கை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நினைவுபடுத்தும் அளவுக்கு இருக்கும். அவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும். தன்னை ஒரு பெரிய அறிவாளியாகக் காட்டிக்கொள்ள எப்போதும் ஐபேட் அல்லது லேப்டப்புடன் இருப்பது... புதுப்புது விவரங்களைப் பேசுவது என்று சொல்லிமாளாது, அவர்களுடைய அலட்டல்களை! அத்தகையோரின் அடிவருடிகளாக மாறி, கொடுத்த காசுக்கு மேல் கூவும் கூட்டம் ஒன்று துணைவேந்தர்களைச் சுற்றி நிற்க ஆரம்பித்துவிடும்.
ஒரு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு ஆளுநர் வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாதையின் இரண்டு பக்கங்களிலும் இருந்த சில பொருட்களை எடுத்துவிடும்படி கூறினார், அதன் துணைவேந்தர். அப்படியே பாதையோரம் இருந்த தென்னை மரத்தை உற்றுப்பார்த்தார், துணைவேந்தர். 'அதை வெட்டிடலாம் சார்' என்று அவருடன் வந்த ஓர் இயக்குநர் சொல்லக்கேட்டதும், பதறிவிட்டார் துணைவேந்தர். 'அய்யயோ... நான் சும்மாதான் பார்த்தேன். மரத்தை வெட்டிவிடாதீர்கள்' என்று அழுத்தமாகச் சொன்னார்.
காற்றில் பறக்கும் விதிமுறைகள்!
அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணம்... துணைவேந்தர்களின் தேர்வு முறைதான். தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்குப் பதில், தேர்வு செய்யப்பட வேண்டியவர்கள் என சிலர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, அதன்பிறகு அவர்கள் தகுதியானவர்களாக மாற்றப்படுகின்றனர். அதற்கான வழிமுறைகள் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன.

துணைவேந்தர்கள் தகுதியானவர்களாக, தலைமைப்பண்பு கொண்டவர்களாக, பல சிறப்புத் தகுதி பெற்றவர்களாக, சிறந்த கல்வியாளர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக, அதற்கென ஒரு புதிய வழிமுறையை, பல்கலைக்கழக மானியக்கழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம், அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் போன்றவை வரையறை செய்துள்ளன. இந்த நிறுவனங்கள்... பேராசிரியர், இயக்குநர், முதல்வர் போன்றோருக்கு என்ன தகுதியோ, அதேபோல துணைவேந்தருக்கும் கல்வி மற்றும் ஆராய்ச்சித் தகுதிகள் உள்ளிட்டவற்றைப் பரிந்துரை செய்துள்ளன.
பத்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும்; இருபது ஆண்டுகள் கல்லூரிப் பணியிலிருந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தகுதிகள் உள்ளன. அனைத்தையும் பலர் போலியாகத் தயார்செய்து உள்ளே நுழைந்து விடுகின்றனர். தங்களுக்கு வேண்டியவர்களைத் துணைவேந்தர் பதவியில் நியமிப்பதற்காக, ஆளுநர்கள், முதல்வர்கள், அமைச்சர்களால் தகுதிகள் எல்லாம் காற்றில் பறக்கவிடுவதும் நடக்கிறது.
ஊழலுக்காகவே அரசாணைகள்!
தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்காமலிருக்க, அவ்வப்போது அரசாணைகள் போடுவதும் நடப்பதுண்டு. 'முனைவர் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் ஐந்து பேருக்கு, ஒரு பேராசிரியர் வழிகாட்டி என்கிற பொறுப்பில் இருக்கவேண்டும்' என அரசு ஆணைக் கொண்டுவரப்பட்டது. பல துறைகளில், முனைவர் பட்ட மாணவர்களே இருக்கமாட்டார்கள். ஒருவர் பல புத்தகங்கள் எழுதியிருப்பார், பல கண்டுபிடிப்புகளைச் செய்திருப்பார், ஆனால்... இவர்கள் கேட்கும் இந்தத் தகுதி இல்லாததால் நிராகரிக்கப்படுவார்.

துணைவேந்தர் தேர்வு எப்படி நடக்கிறது?
துணைவேந்தர் தேர்வின் தொடக்கம், தேடல்குழு அமைப்பதில் இருந்தே தொடங்குகிறது. இக்குழுவில் பல்கலைக்கழகங்களுக்கு ஏற்ப மூன்று முதல் நான்கு பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் தேடல்குழு அமைக்க விதிமுறைகள் மாறுபட்டாலும், அதன் செயல்பாடுகள் ஒன்றாகவே இருக்கும். இரண்டு உறுப்பினர்கள்... கல்விக் குழு /சிண்டிகேட்/ செனட்/ மேலாண்மைக் குழு ஆகியவை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஓர் உறுப்பினர், ஆளுநர் மூலம் நியமனம் செய்யப்படுவார். இவரே தேடல்குழுவின் தலைவராகவும் செயல்படுவார். தேடல்குழு உறுப்பினராக வருவது துணைவேந்தர் பதவியைப் பிடிப்பதைவிடக் கடினமான ஒன்றே! (அதற்கு ஏன் அவ்வளவு போட்டி என்பது இன்னும் புரியாத ஒரு புதிர்தான். அதற்கு ஏதாவது காரணம் இருக்கும்).
இந்தத் தேடல்குழுவில் யாரைக் கொண்டுவரவேண்டும் என்பதிலேயே, துணைவேந்தர் பதவிக்கு ஆசைப்படும் நபரின் பணி, தொடங்கிவிடுகிறது. தங்களுக்குத் தோதான நபர்களை தேடல்குழு உறுப்பினர்களாக நியமிக்கும் வகையில், அவர்களுடைய சுயவிவரங்களை எடுத்துக்கொண்டு, மேல்மட்டத்திலிருக்கும் ஒவ்வொருவரையும் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். சிலர் அதிகாரிகள் மூலமும், சிலர் அரசியல்வாதிகள் மூலமும், சிலர் ஆளுநர்/ஆளுநர் அலுவலகம் மூலமும் முயற்சி செய்வார்கள். யாரெல்லாம் தனக்குச் சாதகமான தேடல்குழு உறுப்பினர்களை உள்ளே கொண்டுவருகின்றார்களோ, அவர்கள் நிச்சயம் துணைவேந்தர் பட்டியலுக்கான இறுதி செய்யப்படும் மூவரில் ஒருவராக இடம்பிடித்துவிடுவார்கள்.
துணைவேந்தரைவிட தேடல் குழுவுக்கு மரியாதை!
தேடல்குழுவில் உறுப்பினராக வருவதற்கென்றே, முன்னாள் துணைவேந்தர்கள் சிலர் எப்போதும் அலைந்துகொண்டே இருப்பார்கள். அண்ணா பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தராக இருந்த சிலர், இதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இதற்காகவே தொடர்ந்து ஆளும் அரசின் கொள்கைகளை ஆதரித்து அவ்வப்போது அறிக்கைவிட்டுக் கொண்டே இருப்பார்கள். எப்போதும் தங்களின் பெயர் ஊடகங்களில் வருமாறு பார்த்துக்கொள்வார்கள். சில காலமாக முன்னாள் ஆட்சிப் பணியாளர்களையும் உறுப்பினர்களாக நியமனம் செய்வதும் நிகழ்கிறது. மாநில அளவில் இருந்தால் மற்றவர்கள் அவர்களை பிடித்துவிடக் கூடும் என்பதால், இப்போதெல்லாம் வெளிமாநிலத்தவர்களை தங்களுக்கான உறுப்பினர்களாகக் கொண்டுவரும் முயற்சியும் நடக்கிறது.

80 வயதுக்கும் மேல் ஆனவர்கள், நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள், பேஸ்மேக்கர் வைத்துக்கொண்டுள்ளவர்கள், நடக்கவே மற்றொருவரின் துணைவேண்டும் என்பவர்கள் என இன்றைய அறிவியல் தொழில்நுட்ப உலகுக்கே அறிமுகம் இல்லாதவர்களே பெரும்பாலும் தேடல்குழுவில் உறுப்பினர்களாக வருவதுதான் வேடிக்கை. அவர்கள், எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள், அவருடைய ஆள் துணைவேந்தராக்கப் படவேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருப்பார்கள். ஓர் அமர்வு அல்லது இரண்டு, மூன்று அமர்வுகளில் முடிவு செய்வார்கள்.
தேடல்குழு நியமனம் என்பதே பத்து ஆண்டுகளுக்கு முன்வரை ரகசியமாக வைக்கப்பட்டு, பிறகே ஊடகங்களில் செய்தி மட்டும் வெளியிடும் வழக்கமிருந்தது. தகுதியுள்ளவர்கள், விண்ணப்பிப்பார்கள். ஏதேனும் ஓர் உறுப்பினருக்கு விண்ணப்பித்தால் போதும். அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்து, அதில் மூவரைத் தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்பிவிடும் தேடல்குழு. அதில் ஒருவரைத் தேர்வு செய்வர், ஆளுநர்.
பணம் என்னும் மெஷினுடன் கவர்னர் மகன்!
கோடிகளை, சி என்று சுருக்கமாக சொல்வது நம் நாட்டின் பாரம்பர்ய வழக்கம். தொடக்கத்தில் ஆளுநர்கள், மாநில அரசின் ஆலோசனைப்படி தேர்வு செய்தனர். இடையில், இந்த 'சி' எனும் கோடிகள் மீது சில ஆளுநர்கள் ஆசைப்பட்டதால், அவர்களே துணைவேந்தரை தேர்வு செய்ய ஆரம்பித்தனர். ஓர் ஆளுநர், இதற்கு என்றே ஒரு கூட்டத்தை உருவாக்கி வைத்திருந்த கதைகளும் உண்டு. சென்னையில் தன் மகனுக்கு ஒரு அப்பார்ட்மென்ட் வீடு எடுத்துக் கொடுத்து, 'சி' என்கிற பெயரில் அதில், பணம் எண்ணும் இரண்டு, மூன்று மெஷின்களை வைத்து, பணத்தை எண்ணி எண்ணி தன்னுடைய மாநிலத்துக்கு அனுப்பிய கவர்னர் பற்றிய கதைகூட இங்கே ஒரு காலத்தில் ஓடிக் கொண்டிருந்தது. மாநில அரசின் உறவுக்கு ஏற்ப, ஒன்றிய அரசும் சில ஆளுநர்கள் மூலம் தங்களுக்கு வேண்டியவர்களை நியமனம் செய்வதுண்டு.

எப்படி வந்தாலும் ஏதோ ஒரு 'சக்தி'யின் பரிந்துரையோடுதான் வரமுடியும். இதில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என சில கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேட்டும், எழுதிக்கொண்டும் இருக்கின்றனர். அதனால் இப்போது, தேடல்குழு போடப்பட்டதும், அந்தக் குழுவே ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து, அதில் முகவரியும் கொடுத்து, அதற்கு ஒரு தொடர்பாளரையும் அறிவித்து, விண்ணப்பிக்கச் சொல்வார்கள். வரும் விண்ணப்பங்களில் வடிகட்டி தகுதியானவர்களாகப் பத்து பேர்களை நேர்முகத்தேர்வுக்கு அழைப்பார்கள். அதில் மூன்று பேர்களைத் தேர்வுசெய்து ஆளுநருக்கு அனுப்புவார்கள். அதில் ஒருவர் துணைவேந்தராக ஆளுநரால் தேர்வு செய்யப்படுவார்.
டம்மிகளாக்கப்படும் திறமைகள்!
தேடல் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தொடக்கத்தில் இருந்தே தங்களுக்கான நபர், உள்ளே வரும்படி பார்த்துக்கொள்வார்கள். அதற்கு ஏற்பவே மூவரும் சேர்ந்து தகுதிகளைத் தீர்மானிப்பார்கள், இதில் மற்றவர்கள் உள்ளே வரக்கூடாது. அதேசமயம் இவர்களின் ஆட்கள் வெளியே போகக் கூடாது. இதில்தான் தேடல்குழு தனது முழுத் திறனையும் காட்டும். சில நேரங்களில் ,தப்பித்தவறி துணைவேந்தருக்கான மூவர் பட்டியலில் தகுதியானவர்களும் வருவதுண்டு. இதுதான் வெளிப்படைத்தன்மை என எல்லோரும் பாராட்டுவார்கள். அவர்கள் டம்மிகள் என்பது தேடல்குழுவுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவர்களுக்கு ஒரு போதும் துணைவேந்தர் பதவி கிடைக்கவே கிடைக்காது.

ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களே, துணைவேந்தர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள் என்பது தொடர்குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. மாநில அரசு ஒன்றிய அரசுடன் சுழூகமாக இருக்கும்வரை இவ்வாறுதான் நிகழும். இரண்டு அரசுகளும் நல்உறவில் இல்லாதபோது, ஒன்றிய அரசின் பரிந்துரையை ஏற்று, துணைவேந்தர்களை நியமனம் செய்வார் ஆளுநர். அவ்வாறு வரும் துணைவேந்தர்கள் பாடு திண்டாட்டம்தான். மாநில அரசிடம் நிதி பெறுவதில் இருந்து, அனுமதிகள் வாங்குவது வரை விழி பிதுங்கிவிடும்.
சசிகலா வீட்டுக்குப் படையெடுத்த 'திறமைசாலிகள்'!
மாநில அளவில் ஆட்சி மாற்றம், ஏற்படும் போதும் வீட்டுக்கு அனுப்புவது நடக்கும். இதற்குக் காரணம் துணைவேந்தர்களாக வருபவர்கள், ஏதேனும் ஓர் அரசியல் கட்சியைச் சார்ந்தவராகவோ... அனுதாபியாகவோ... இருப்பதுதான். அமைச்சர்களின் உதவியாளர்களாக இருந்தவர்கள்கூட துணைவேந்தர்களாக ஆன வரலாறுகள் உள்ளன.

இந்த இடத்தில் ஒரு நிகழ்வை நினைவுபடுத்தலாம். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சசிகலா முதல்வராக வர வாய்ப்புள்ளது என்றதும், துணைவேந்தர் பதவிக்கு ஆசைப்பட்ட சிலர் அவருடைய இல்லத்துக்குப் படை எடுத்தனர். இவர்களில் சிலர் துணைவேந்தர்களாகவும் வந்தனர். ஒருவேளை, சசிகலா அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். வருங்காலங்களில் அவருடைய செல்வாக்கைப் பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை துணைவேந்தர் பதவிக்கு வருவதற்கும் அந்தச் சந்திப்பு உதவியிருக்கலாம்.
தேடல்குழு தகிடுதத்தம்!
துணைவேந்தர் தேர்வுக்காக தேடல்குழு அமைப்பது, விண்ணப்பித்தவர்களின் பட்டியலை வெளியிடுவது, பத்து பேர்களைத் தேர்வுசெய்வதை ஊடகங்களில் வெளியிடுவது, ஆளுநருக்கு அனுப்பும் பட்டியலை வெளியிடுவது என்பதைத்தான் இப்போது வெளிப்படைத் தன்மை எனக் கூறிக்கொள்கின்றனர். இந்தத் தேடல்குழுவே கண்துடைப்பு என்பது பலருக்குத் தெரிவதில்லை. பல நேரங்களில் ஆளுநர்கள், தங்களுக்கான நபரின் பெயர் இல்லாதபோது, தேடல்குழுவைக் கலைத்துவிட்டு புதிய குழுவை அமைப்பதே, இந்தக் குழுவின் அதிகாரத்தைத் தெளிவாக்கும்.

சில பல்கலைக் கழகங்களுக்கான நியமனத்தில் பணப்பட்டுவாட நடந்துள்ளதாகப் பலமுறை ஊடகங்களில் செய்திகள் வந்ததுண்டு. ஒரு 'சி' முதல் மூன்று 'சி' வரையும் பரிமாற்றம் நடந்ததாக எழுதுவார்கள். இதற்கான நிதியை ஏற்பாடு செய்வதற்கென்றே நிறுவனங்கள், ஆட்கள் உள்ளனர். துணைவேந்தராக வந்த பின் அந்தப்பணத்தை எப்படிச் சாம்பாதிப்பது என்ற வழிகாட்டுதலையும் அவர்களே கொடுப்பார்கள்.
இதில் இன்னோர் வேடிக்கையும் உண்டு, ஒருமுறை துணைவேந்தராக வந்தவர்கள், மீண்டும் இரண்டாவதாக வருவது சுலபமாக நடக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. வருவதற்கான வழிமுறையைத் தெரிந்திருப்பது, இரண்டாவது, முதல் முறையில் சம்பாதித்து சேர்த்த பணம். துணைவேந்தர்களிடம் இருந்து ஒரு சில அமைச்சர்கள், அரசியல்வாதிகள் கட்சிக்குப் பணம் என வசூல் செய்வார்கள். சிலர் கல்லூரிகளில் இடம் வழங்குவது, ஊழியர்களுக்கு இடமாற்றம் கொடுப்பது போன்றவற்றின் மூலம் வசூல் செய்வார்கள்.

எதிர்காலச் சந்ததியர்களை உருவாக்கும் பல்கலைக்கழகங்களின் தலைவர்கள், தகுதியானவர்களாக, திறமையானவர்களாக இருக்கவேண்டும் என்பதைவிட நேர்மையான முறையில் தேர்வு செயப்படவேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறம். ஆனால், நடப்பதோ முற்றிலும் தவறான ஒன்றாக உள்ளது. பல கோடி இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை, உயர்கல்வியை அளிக்கும் பல்கலைக்கழகங்களின் கையில் விடப்பட்டுள்ளது. ஆனால், ஒரு நட்டின் வளத்தைத் தீர்மானிக்கும் மனிதவளத்தை உருவாக்கும் பல்கலைக்கழகங்களின் உண்மை நிலை... நாம் மேலே அலசிய நிலையில் இருக்கிறது என்பது நிதர்சனம். இதனால் ஏற்படும் பாதிப்புகள் எண்ணில் அடங்கா.
ரத்தம் சிந்தி உழைத்து, பல லட்சங்களைக் கட்டணமாகக் கொட்டிக் கொடுத்து தங்களின் பிள்ளைகளை உயர்கல்வி பெறுவதற்காக அனுப்பும் பெற்றோர்கள், இந்த அவலத்தை அறியாமலே இருப்பதுதான், நம் இதயத்தை வலிக்கச்செய்கிறது.
- கட்டுரையாளர் முனைவர் ப.வெங்கடாசலம் (இவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர், தனியார், வேளாண்மைக் கல்லூரியின் முதல்வர் போன்ற பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர். தற்போது, தனியார் வேளாண் கல்லூரி ஒன்றின் ஆய்வுத்துறை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.)