Published:Updated:

`பாழடைந்த மண்டபம்போல் இருந்தது; இன்று சிறந்த பள்ளி!’ சிவகங்கை அரசுப் பள்ளியின் கதை

பாகனேரி அரசுப் பள்ளி
பாகனேரி அரசுப் பள்ளி

பாழடைந்த மண்டபம்போல மாறிய ஓர் அரசுப் பள்ளி, இப்போது மாணவர்களை ஈர்க்கும்வகையில் மாறியிருக்கிறது. எப்படி நடந்தது இந்த மாற்றம்?

மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு, உள் கட்டமைப்பு மேம்பாடு செய்தமைக்காக சிவகங்கையில் உள்ள 4 அரசுப் பள்ளிகளுக்கு சமீபத்தில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிவகங்கை, பாகனேரி அரசு மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. இந்தப்பள்ளிக்கு காமராஜர் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பின்னோக்கி சென்ற, இந்த அரசுப் பள்ளியை மேம்படுத்திய தலைமை ஆசிரியருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

சிவகங்கை மாவட்டம், கல்லலை அடுத்துள்ளது பாகனேரி. இங்குள்ள ஓ.இ.ஆர்.எம் அரசு மேல்நிலைப் பள்ளி இப்பகுதி கிராமங்களுக்கு கல்வி ஒளி வழங்கி வருகிறது. 1965-ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி பல்வேறு வெற்றியாளர்களை வளர்த்தெடுத்துள்ளது.

பாகனேரி அரசுப் பள்ளி
பாகனேரி அரசுப் பள்ளி

இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் மருத்துவத்துறை, நீதித்துறை, பொருளாதாரத்துறை, அரசியல் துறை எனப் பல்வேறு துறையில் வளர்ந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் பள்ளியில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்தது. தற்போது மீண்டும் புத்துயிர் பெற்று அரசு விருதைப் பெறும் அளவிற்கு வளர்ந்துள்ளது.

இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் பிரிட்டோவிடம் பேசினோம். ``எங்கள் பள்ளியில் பின்தங்கிய ஏழை, எளிய மாணவர்கள்தாம் அதிகளவு பயிலுகின்றனர். இதனால் மிகவும் பொறுப்புணர்வோடு கற்பித்து வருகிறோம்.

ஓ.இ.ஆர்.எம் அரசு மேல் நிலைப்பள்ளி
ஓ.இ.ஆர்.எம் அரசு மேல் நிலைப்பள்ளி

பாழடைந்த மண்டபம்போல மாறிய பள்ளி, இப்போது மாணவர்களை ஈர்க்கும்வகையில் மாறியிருக்கிறது. தொடக்கத்தில் பள்ளியில் மின்சார வசதி இல்லை. ஒவ்வொரு வகுப்பறைக்கும் முதல்கட்டமாக மின்சார வசதிகளை ஏற்படுத்தினோம். பேன், லைட் வைத்து மேம்படுத்தினோம். பள்ளியில் குப்பைபோல கிடந்த மரங்களை அறுத்து டேபிள், பெஞ்சாக மாற்றினோம். இதனால் எந்த மாணவர்களும் தரையில் அமராத வகையில் வகுப்பறைகள் மேம்படுத்தப்பட்டன.

வகுப்பறையின் தரைகளை மேம்படுத்தினோம். அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியால் 20 கம்ப்யூட்டர்கள் வாங்கினோம். ஏ.சி வசதியும் கொண்டுவந்தோம். ஆய்வகங்களில் ஃபால்ஸ் சீலிங் ஏற்படுத்தினோம். பள்ளியில் 8 சிசிடிவி கேமரா அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

பொங்கல் விழா
பொங்கல் விழா

பல ஆண்டுகள் பெயின்ட் அடிக்காமல் கிடந்த பள்ளி கட்டடத்தை மேம்படுத்தி வண்ணமயமாக்கினோம். பள்ளியின் மொத்த பரப்பளவு 15 ஏக்கர். இதனால் சுற்றுச்சூழல் மேம்பாடு, கழிப்பறை, ஆர்.ஓ வாட்டர் எனப் பல அடிப்படை வசதிகளைக் கொண்டுவந்தோம்.

இதனால், பள்ளியின் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு மாணவர்களின் சேர்க்கை 2 மடங்கு உயர வாய்ப்புள்ளது. எங்கள் பள்ளியில் தீபாவளி, பொங்கல் ரம்ஜான், கிறிஸ்துமஸ், தேச தலைவர்கள் பிறந்தநாள் என எல்லா விழாக்களையும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் கொண்டாடுகிறோம்.

மாணவிகள் கோலப்போட்டியில்
மாணவிகள் கோலப்போட்டியில்

இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் ஊக்கமடைந்துள்ளனர். இப்போது சிவகங்கை மாவட்டத்தில் சிறந்த மேல்நிலைப் பள்ளிக்கான விருதை எங்கள் பள்ளி பெற்றுள்ளது. இதனால், தற்போது பள்ளிக்கு கூடுதல் பெருமை சேர்ந்துள்ளது. இது பள்ளிக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல மாணவர்கள், ஆசிரியர்கள், பாகனேரி மக்கள், பள்ளிக்கு உதவிய சமூக ஆர்வலர்கள் என்று பலருக்கும் இதில் பங்குண்டு” என மகிழ்ச்சி தெரிவித்தார் அவர்.

அடுத்த கட்டுரைக்கு