Published:Updated:

புதிய கல்விக் கொள்கைக்கான கூட்டத்தை ரகசியமாக நடத்துவதா? - கொதிக்கும் ஆர்வலர்கள்

இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்

புதிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரகசியமாக நடத்துவதாக கம்யூனிஸ்ட் அமைப்புகள் குற்றம் சாட்டின.

கருத்துக் கேட்பு
கருத்துக் கேட்பு

புதிய கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரகசியமாக நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டம் நடந்த இடத்தை முற்றுகையிட்டனர்.

கூட்டம்
கூட்டம்

புதிய கல்விக் கொள்கை குறித்து பொதுமக்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக கருத்துக் கூறுபவர்கள், ஆளுங்கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர்.

இது ஒருபுறமிருக்க, கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்தும் ரகசியமாக நடைபெற்றுவருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், புதிய கல்விக் கொள்கை குறித்த மண்டல அளவிலான கூட்டம் நடைபெற்றது. மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் முத்து பழனிச்சாமி, இணை இயக்குநர் ஜெயக்குமார், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட சுமார் 150 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டம்
கூட்டம்

இந்தத் தகவலறிந்த இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற அமைப்பினர், கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனர். அப்போது,`` பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களிடம் தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கிறது. நாங்களும் கருத்துக் கூற வேண்டும்'' என அவர்கள் தெரிவித்தனர். ஆனால், `இது பொதுமக்களுக்கான கூட்டம் இல்லை' என கூறி, அங்கே இருந்த உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜா தலைமையிலான ஏராளமான காவல்துறையினர் உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். நீண்ட வலியுறுத்தலுக்குப் பின், உள்ளே இருந்த அதிகாரிகளை காவல்துறையினர் அழைத்துவந்தனர்.

அப்போது, எதிர்கால தலைமுறையினரின் வாழ்க்கையைத் தீர்மானிக்க உள்ள கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ஏன் ரகசியமாக நடத்துகிறீர்கள் என வெளியே இருந்தவர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், இது ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பணிமனைக் கூட்டம் தான். புதிய கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டமல்ல என அதிகாரிகளும் தெரிவித்தனர்.

கூட்டம்
கூட்டம்

இதேபோலத்தான் கோயம்புத்தூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் அனைத்தும் ரகசியமாகவே நடத்தப்பட்டுள்ளன. ''கருத்துக்களைப் பதிவுசெய்ய இன்னும் 4 நாள்கள்தான் உள்ளது. அதற்குள் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவீர்களா? கருத்துக் கேட்பு கூட்டங்கள் முழுவதும் ஏன் ரகசியமாகவே நடக்கின்றன'' என்று கேள்வி எழுப்பினர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்டச் செயலர் கார்த்திக் கூறும்போது, ''பணிமனைக் கூட்டம் என்ற பெயரில் அதிகாரிகளைக் கொண்டு புதிய கல்விக் கொள்கைக்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை ரகசியமாக நடத்துகின்றனர். வழக்கமாக எந்தக் கூட்டமாக இருந்தாலும் மாவட்டத் தலைநகரங்களிலேயே நடைபெறும். ஆனால், அங்கே நடந்தால் கடும் எதிர்ப்புகள் இருக்கும் என்பதால், 40 கி.மீ தொலைவில் கூட்டம் நடக்கிறது.

கூட்டம்
கூட்டம்

அதிகாரிகளுக்கான கூட்டம்தான் என்றால், இவ்வளவு காவல்துறை பாதுகாப்பு தேவை இல்லை. இதில் ஏதோ ரகசியம் உள்ளது. ஜூலை 30-ம் தேதிக்குள் மாணவர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்களிடம் மத்திய, மாநில அரசுகள் கருத்துக்களை கேட்க வேண்டும். கருத்துக் கேட்புக் கூட்டங்கள் முழுவதும் ரகசியமாகவே நடக்கின்றன'' என்றார்.