கல்லூரியில் பாதி, ஓப்பன் யுனிவர்சிட்டியில் பாதி...! - படித்து பட்டம் பெறுவது சாத்தியமா? #DoubtOfCommonMan

இளநிலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள், முதல் இரண்டு ஆண்டுகள் ரெகுலர் கல்லூரியில் படித்து, மூன்றாமாண்டு கல்லூரி செல்வதில் சிக்கல் ஏற்பட்டால், தொலைநிலைக் கல்வி மூலம் படிக்க வாய்ப்பு உள்ளது.
பள்ளியில் 12 ஆண்டுகள் படித்தபிறகு, மாணவர்கள் கல்லூரிக்கு வருகிறார்கள். பள்ளிக்கோ கல்லூரிக்கோ செல்ல முடியாதவர்களும் படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஓப்பன் ஸ்கூல், ஓப்பன் யுனிவர்சிட்டி என்று பல வாய்ப்புகளை அரசுகள் உருவாக்கி வைத்திருக்கின்றன.
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ஃபரூக் என்ற வாசகர் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். "நான், நேரடியாகக் கல்லூரிக்குச் சென்று பி.எஸ்சி படித்துவந்தேன். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் குடும்பச்சூழலால் கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை. இறுதி ஆண்டு மட்டும் தொலை தூரக் கல்வியில் சேர்ந்து படிக்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சென்னையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்துப் பேசினோம்.
"இளநிலைப் பட்டம் படிக்கும் மாணவர்கள், முதல் இரண்டு ஆண்டுகள் ரெகுலர் கல்லூரியில் படித்து, மூன்றாமாண்டு கல்லூரி செல்வதில் சிக்கல் ஏற்பட்டால், தொலைநிலைக் கல்வி மூலம் படிக்க வாய்ப்புள்ளது. ஒரு மாணவர், 10, 11,12 ஆகிய வகுப்புகளை முறையாகப் படித்துத் தேர்ச்சிபெற்று, ரெகுலர் கல்லூரியில் பட்டப் படிப்பு சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும்போது, ஏதேனும் சூழ்நிலை காரணமாக இறுதியாண்டு அங்கு படிக்க முடியவில்லை என்றால், தொலைநிலைக் கல்வியில் அந்த பட்டப்படிப்பை முடிக்கலாம்.

அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. ஏற்கெனவே, இரண்டு ஆண்டுகள் படித்திருக்கிறார் என்று 'கிரடிட் வெயிட்டேஜ்' கொடுத்தால் சேர்த்துக்கொள்ளப்படுவார். அப்படியான சேர்க்கையை 'கிரடிட் டிரான்ஸ்ஃபர்' என்று சொல்வோம்.
இரண்டு ஆண்டுகள் படித்தவர், அதுவரையிலான அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். ஒருவேளை அரியர் வைத்திருந்தால் அவற்றை எழுதி, தேர்ச்சிபெற்ற பிறகே தொலைநிலைக் கல்வி முறையில் படிக்க விண்ணப்பிக்க முடியும். மாணவரின் கல்விச் சான்றிதழ்களை இணைத்து, அஞ்சல் வழியாகக்கூட இதற்கு விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பத்தை எங்களின் குழு ஆராய்ந்து, அவரைச் சேர்த்துக்கொள்வது குறித்து இறுதி முடிவு எடுக்கும். அந்த மாணவர், கல்லூரியில் படித்த பாடங்களுக்கும் எங்களின் பாடங்களுக்கும் சின்ன மாற்றம் இருக்கக்கூடும். ஏனென்றால், அங்கிருந்து எங்களிடம் வரும்போது, பல்கலைக்கழகம் மாறிவிடுகிறது. அதனால், எங்கள் பாடத்திட்டத்தில் அவர் முடிக்காத பகுதிகளையும் சேர்த்து தேர்வு எழுத வேண்டியிருக்கலாம்" என்றார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவுசெய்யுங்க!