Published:Updated:

ஆந்திரா: பள்ளிகள் திறப்பு... 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள் ( representative image )

``நவம்பர் 4-ம் தேதி, நான்கு லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால் 262 மாணவர்களுக்கு மட்டுமே நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது 0.1% கூட இல்லை’’- ஆந்திர பள்ளிக் கல்வித்துறை.

ஆந்திராவில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2-ம் தேதி திறக்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட மூன்று நாள்களுக்குள், 575 மாணவர்களும், 829 ஆசிரியர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. கடந்த எட்டு மாதங்களாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தன.

இந்தநிலையில், நவம்பர் 2 ம் தேதி ஆந்திர மாநிலத்தில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக 40 சதவிகித மாணவர்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வரத் தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

கொரோனா
கொரோனா

ஆந்திரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் பரவாமலிருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், பள்ளிக்கு வருகை தந்த 829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அச்சுறுத்தும் கொரோனா 2-வது அலை... பள்ளிகள் திறக்கும் முடிவைத் திரும்பப் பெறுமா தமிழக அரசு?

ஆந்திர கல்வித்துறை புள்ளிவிவரங்களின்படி, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 9.75 லட்சம் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள். கடந்த நவம்பர் 4-ம் தேதி அவர்களில் 3.93 லட்சம் மாணவர்களும், 1.11 லட்சம் ஆசிரியர்களில், 99,000 ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தந்திருக்கிறார்கள். நவம்பர் 5-ம் தேதி, மாநிலத்தில் 99.2 சதவிகித உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதாகவும், 89.92 சதவிகித ஆசிரியர்கள் வகுப்புகளுக்குச் சென்று பாடம் எடுக்கத் தொடங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இது குறித்துப் பேசிய, பள்ளி கல்வித்துறை ஆணையர் வி.சின்ன வீரபத்ருடு (Chinna Veerabhadrudu), ``பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்தப் புள்ளிவிவரங்கள் ஆபத்தானவை அல்ல. கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வகுப்பறையில் 15-16 மாணவர்கள் மட்டுமே குழுவாக இருக்கிறார்கள்.

நவம்பர் 4-ம் தேதி, நான்கு லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால் 262 மாணவர்களுக்கு மட்டுமே நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது 0.1% கூட இல்லை. 1.11 லட்சம் ஆசிரியர்களில், சுமார் 160 ஆசிரியர்களுக்கு மட்டுமே நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. பள்ளிகளுக்கு வருவதால் மட்டுமே அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்வது சரியானதல்ல. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கை எங்களுக்கு முக்கியம்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
representative image

ஆன்லைன் கல்வியைப் பெற வாய்ப்பில்லாத, பொருளாதாரரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்காகப் பள்ளிகளை மீண்டும் திறப்பது முக்கியம். பள்ளிகள் திறக்கப்படாத சூழல் காரணமாக பழங்குடியினர் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியைவிட்டு வெளியேறவும், திருமணம் செய்துகொள்ளவும் அழுத்தம் கொடுக்கப்படலாம்" என்றார்.

இந்தச் சம்பவம் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதிமுபாலு சுரேஷ் கூறுகையில், ``இது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளியில் இருக்கும்போது வைரஸால் பாதிக்கப்படுவது மிகவும் குறைவு. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மன ஆரோக்கியம் தொடர்பாக ஆலோசனை வழங்கவிருக்கிறோம். அவர்களது மன அழுத்தத்தைப் போக்க மனநலப் பயிற்சியாளர்கள் மற்றும் உளவியல் பேராசிரியர்கள் மூலம் பயிற்சியளிக்கப்படும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு