Published:Updated:

`ஆற்றில் கழுத்தளவு தண்ணீர்; மறுகரையில் மாற்றுத்துணி!’ - நாகை கிராம மக்களின் துயரம்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே ஒக்கூர் கிராமம் அமைந்துள்ளது. இதைச் சுற்றி கடமங்குடி, மூங்கில்குடி, விளாம்பாக்கம், மூலப்படுகை ஆகிய குக்கிராமங்களும் உள்ளன.

பள்ளி மாணவர்கள் அச்சத்துடன்
பள்ளி மாணவர்கள் அச்சத்துடன்

வெட்டாற்று வெள்ளத்தில் இறங்கி தினமும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் அவல நிலைக்கு மாவட்ட நிர்வாகம் உடனே தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பள்ளி மாணவர்கள் அச்சத்துடன்
பள்ளி மாணவர்கள் அச்சத்துடன்

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே ஒக்கூர் கிராமம் அமைந்துள்ளது. இதைச் சுற்றி கடமங்குடி, மூங்கில்குடி, விளாம்பாக்கம், மூலப்படுகை ஆகிய குக்கிராமங்களும் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் அடங்கிய சுமார் 1,500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் வெட்டாற்றில் விளாம்பாக்கம் - கோகூர் இடையே கிராம மக்களே அமைத்திருந்த மரப்பாலம் வழியாகத்தான் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்ல முடியும். இப்பாலம் இல்லையெனில் சுமார் 10 கி.மீ தூரம் சுற்றுவழியில் பயணிக்க வேண்டும்.

எனவே, இப்பகுதி மக்கள் பல காலமாக கான்கிரீட் பாலம் கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், 2017-ல் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6 லட்சம் செலவில் அரசு தரப்பினர் மீண்டும் மரப்பாலமே கட்டித் தந்தனர். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் மேட்டூர் அணை நிரம்பியதால் திறந்துவிடப்பட்ட தண்ணீர் திடீரென வெட்டாற்றில் அதிகமாக வந்ததால் அந்த மரப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அன்றிலிருந்து ஆற்று நீரில் இறங்கிதான் இப்பகுதி மக்கள் பயணிக்க வேண்டியுள்ளது.

river
river

இதுபற்றி அக்கிராமத்தினரிடம் பேசியபோது, ``10 மைல் சுற்றி ஆற்றைக் கடக்க வேண்டிய கஷ்டமிருக்கு. அதனால் எல்லோரும் ஒரு டிரஸைக் கையில் எடுத்துக்கிட்டு அக்கறையில போய் ஈரத்துணியை மாத்திக்கிட்டுப் போவோம். இப்ப மழையால ஆற்றுல தண்ணி கழுத்தளவு போகுது. பள்ளிக்கூடம் போற புள்ளைங்க என்ன செய்யும்... அதனால் தோளில் சுமந்து அக்கறையில் விட்றோம். நீச்சல் தெரியாத புள்ளைகளும் இருக்காங்க. பள்ளிக்கூட யூனிபார்ம் டிரஸை அக்கறையில போய் போட்டுக்கிட்டுப் போறாங்க. செத்து செத்துப் பொழைக்கிறது ஒருநாள் கூத்தல்ல... தினமும் இதான் நடக்குது. எனவே, மாவட்ட நிர்வாகம் தற்போது தற்காலிக பாலம் அமைச்சித் தரணும். கோடைக்காலத்தில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக கான்கிரீட் பாலம் கட்டித்தரணும்" என்றனர்.