Published:Updated:

`மாணவிகள் எதிர்கால இந்தியாவைப் பிரதிபலிக்கிறார்கள்!' - புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் பெருமிதம்

``பல்கலைக்கழகமாக இருந்தாலும் சரி, வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் சரி இறுதியில் நாம் அனைவருமே சமூகத்தின் அங்கம்தான்” என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்திருக்கிறார்.

குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர்

புதுவைப் பல்கலைக்கழகத்தின் 27 வது பட்டமளிப்பு விழா இன்று மதியம் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கில் நடைபெற்றது. இதில் ஜனாதிபதியும், புதுவைப் பல்கலைக்கழக வேந்தருமான ராம் நாத் கோவிந்த் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

புதுச்சேரி பல்கலைக்கழகம்
புதுச்சேரி பல்கலைக்கழகம்

10 மாணவர்களுக்குப் பட்டங்களையும், தங்கப் பதக்கங்களையும் வழங்கிவிட்டுப் பேசிய அவர், ``இன்று நான் வழங்கிய 10 தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்களில் 9 பேர் மாணவிகள். மொத்தமுள்ள 189 தங்கப் பதக்கங்களில் 137 பதக்கங்களை மாணவிகளே பெறுகிறார்கள். மாணவிகள் எதிர்கால இந்தியாவைப் பிரதிபலிக்கிறார்கள்.

2019-20 கல்வியாண்டில் சேர்ந்த 6,500 பேரில் பாதிப்பேர் மாணவிகள்தான். அதில் பெரும்பாலான மாணவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பல்கலைக்கழகமாக இருந்தாலும் சரி, வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் சரி இறுதியில் நாம் அனைவருமே சமூகத்தின் அங்கம்தான். பெரிய நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் ஒரு பகுதியை `சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் செலவிட அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தை முதலாவதாக செயல்படுத்தியதுடன், விரிவான திட்ட அறிக்கையையும் தயாரித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திடம் தந்துள்ளது புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம். இப்பல்கலைக்கழகமும், இணைப்புக் கல்லூரிகளும் 103 கிராமங்களைத் தத்தெடுத்துள்ளன. அவற்றை முன்மாதிரி கிராமங்களாக மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா

கிராம இளைஞர்களுக்கு உதவி செய்ய சமுதாயக்கல்லூரி ஒன்றைத் தொடங்க இருக்கும் இப்பல்கலைக்கழகத்தின் செயல் சிறப்புக்குரியது. முன்னாள் மாணவர்களின் உதவியுடன் அறக்கட்டளை நிதியம் ஒன்றை ஏற்படுத்தியிருப்பது மனசுக்கு நெருக்கமாக இருக்கிறது. அவர்கள் கொடுக்கும் தாராளமான நன்கொடை சிறந்த செயல்களைச் செய்ய பல்கலைக்கழகத்திற்கு ஊக்கமளிக்கும். போட்டி நிறைந்த இவ்வுலகில் இரக்கமும், தாராள குணமும் குறைவாக இருக்கலாம். நீங்கள் அனைவரும் அதிகம் இரக்கமுள்ளவர்களாகவும் தாராளமானவர்களாகவும் இருக்க முயற்சி செய்தால் சமநிலையை நிச்சயமாகக் காணலாம்” என்றார்.