Published:Updated:

`தேர்வுக்குத் தயாராகுங்கள்!’- இறுதியாண்டு செமஸ்டர் விவகாரத்தில் யு.ஜி.சி திட்டவட்டம்

தேர்வுகள்
தேர்வுகள் ( Representational Image )

``மனுதாரர்கள் தங்களது காரணங்களை முன் வைத்து தேர்வுகளை நடத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்தது”

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருந்த தேர்வுகள் பின்னர் நடைபெறுவது தொடர்பான குழப்பங்கள் மாணவர்களிடையே நிலவி வந்தன. வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாகி வந்ததால் உறுதியான முடிவு எடுக்க முடியாமல் மத்திய மற்றும் மாநில அரசுகள் திணறி வந்தன. இறுதியில் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதியாண்டு மானவர்களுக்கான தேர்வுகளை தவிர்த்து மற்ற ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து, வைரஸ் பாதிப்பை கருத்தில் கொண்டு இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

யுஜிசி
யுஜிசி

நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர். கொரோனா பரவல், ஊரடங்கு, வெள்ளம் பாதிப்பு, காஷ்மீரில் நிலவும் இணையதள பிரச்னை போன்ற காரணங்களைக் காட்டி தேர்வுகளை ரத்து செய்ய மனுதாக்கல் செய்யப்பட்டன. உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கின் மீதான விசாரணையானது ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

யுஜிசியானது தேர்வு நடத்துவது தொடர்பாக,``மாணவர்கள் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் தேர்வுகள் நிறுத்தப்படும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் இருக்கக்கூடாது” என்று தெரிவித்துள்ளது. செப்டம் மாதத்தில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வை நடத்த யுஜிசி முடிவு செய்துள்ளது. இதற்கான இறுதியான முடிவுகள் குறித்து நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பக்கவில்லை. மாறாக, விசாரணையை மட்டும் ஒத்தி வைத்துள்ளது. தேர்வுகளை நடத்த கல்வியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகள் ரத்து! - முதல்வர் உத்தரவு  #NowAtVikatan

தேர்வுகளை ரத்து செய்வது தொடர்பாக மனுதாக்கல் செய்தவர்களில் ஒருவரான அபிஷேக் சிங்வி, ``ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்க முடியாது. ஏனெனில், சில பல்கலைக்கழகங்களில் அடிப்படை தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்பதால் ஆன்லைன் வழியாக ஒரே மாதிரி தேர்வுகளை நடத்துவது சாத்தியம் இல்லை. தேர்வுகளை ரத்து செய்தால் வானம் ஒன்றும் இடிந்து விழாது. மாநில அரசுகள் இதுதொடர்பான முடிவுகளை எடுக்க பெரிடர் மேலாண்மை சட்டத்தில் அனுமதி உள்ளது” என்றும் தனது வாதத்தை வைத்தார். இதனையடுத்து, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்கள், இறுதி ஆண்டு தேர்வை ரத்து செய்தது தொடர்பாகவும் விவாதங்கள் எழுந்துள்ளன. யு.ஜி.சி மகாராஷ்டிராவின் முடிவை ஏற்க மறுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மனுதாரர்கள் தேர்வை ரத்து செய்வது தொடர்பான தங்களது காரணங்களை முன் வைத்து தேர்வுகளை நடத்து குறித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டனர். ஆனால், நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்தனர். தேர்வுக்கு வர முடியாத நிலைமையில் உள்ளவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. இறுதியாண்டு தேர்வுகளை நடத்துவது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது. இதற்கு ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதிக்குள் பதிலளிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும், மாணவர்கள் தேர்வுகளுக்கு தொடர்ந்து தயாராகிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனால், மாணவர்களிடையே மீண்டும் குழப்பம் நிலவத் தொடங்கியுள்ளது.

அதிகரிக்கும் இணையவழி நேர்முகத் தேர்வு! - எதிர்கொள்ளும் வழிகள்!
அடுத்த கட்டுரைக்கு