Published:Updated:

தேர்வு: தண்டனை... மார்க்: அவமானம்... கழுத்தை நெரிக்கும் கல்வி!

கழுத்தை நெரிக்கும் கல்வி!
பிரீமியம் ஸ்டோரி
கழுத்தை நெரிக்கும் கல்வி!

நீ என் பிள்ளை. உன்னை மதிப்பெண்களை வைத்து நாங்கள் மதிப்பிடப்போவது இல்லை. என்ன சிரமம் என்றாலும் பெற்றோரான எங்களிடம் சொல்.

தேர்வு: தண்டனை... மார்க்: அவமானம்... கழுத்தை நெரிக்கும் கல்வி!

நீ என் பிள்ளை. உன்னை மதிப்பெண்களை வைத்து நாங்கள் மதிப்பிடப்போவது இல்லை. என்ன சிரமம் என்றாலும் பெற்றோரான எங்களிடம் சொல்.

Published:Updated:
கழுத்தை நெரிக்கும் கல்வி!
பிரீமியம் ஸ்டோரி
கழுத்தை நெரிக்கும் கல்வி!

‘ஐயாம் சாரி... ஐயாம் டயர்டு!’ - ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியிருக்கிறது இந்த இரண்டு வலிமிகுந்த வார்த்தைகள். ‘நீட்’ தேர்வு அச்சம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஜோதிஶ்ரீ துர்காவின் வாக்குமூலக் கடிதத்திலுள்ள வார்த்தைகள்தாம் இவை. ‘மன்னித்துவிடுங்கள்... நான் களைத்துப் போய்விட்டேன்!’ என்பது ஜோதி என்கிற ஒற்றை மாணவியின் உணர்வு மட்டுமல்ல, இன்றைய மாணவர்களின் ஒட்டுமொத்த மனதின் குரல். ஒரே நாளில், அடுத்தடுத்து மூன்று மாணவர்களைப் பறிகொடுத்திருக்கிறோம். தமிழகத்தில், கல்வி அழுத்தம் சார்ந்த தற்கொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மரண ஓலம் ஓய்ந்தபாடில்லை... கலங்கிக்கிடக்கிறது கல்வி உலகம்!

“நல்லாப் படிச்சிருக்கேன்... ஆனாலும் பயமாயிருக்கு!”

மதுரையைச் சேர்ந்தவர் ஜோதிஶ்ரீ துர்கா. அப்பா முருகசுந்தரம், காவல் துறையிலும் அம்மா அபிராமி, வேளாண்மைத்துறையிலும் பணியாற்றுகிறார்கள். ஜோதியை மருத்துவராக்க வேண்டும் என்பது இந்தக் குடும்பத்தின் லட்சியக் கனவு. அதற்காகக் கடுமையாகப் படித்து வந்திருக்கிறார் ஜோதி. கடந்த வருடம் நீட் தேர்வு எழுதி வெற்றிபெற முடியாத சூழலில், இந்த ஆண்டு எப்படியாவது வெற்றிபெற்றே தீர வேண்டும் என்கிற முனைப்புடன் படித்து வந்திருக்கிறார்.

செப்டம்பர் 12-ம் தேதி, இரவு தூங்கச் செல்லும் முன்பாக அப்பாவிடம், “நல்லா படிச்சிருக்கேன். ஆனாலும் பயமாருக்கு...” என்று சொல்லியிருக்கிறார் ஜோதி. “நீ நல்லாப் படிச்சிருக்க... பயப்படாம இரு!” என்று தேற்றியிருக்கிறார் அவரின் அப்பா. முதல் வருடத் தோல்வி... எழுதப்போகும் தேர்வின் மீதான பயம்... பெற்றோரின் எதிர்பார்ப்பு... கல்விக்கு அவர்கள் செய்திருக்கும் செலவு... என மனம் முழுக்க அழுத்தம் ஆக்கிரமிக்க, இரவில் தான் படித்துக்கொண்டிருந்த அறையிலேயே மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார் ஜோதி. காலையில் தன் மகளுக்கு டீ போட்டுக்கொண்டு எழுப்பப் போன அப்பா கதவு பூட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ந்தார். எவ்வளவு தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. எல்லோரும் கூப்பிட்டும் அறைக்குள்ளிருந்து பதில் இல்லை. கழுத்தை நெரித்து முறித்துப்போட்டிருந்தது கல்வி... அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார் உயிரற்ற ஜோதி!

தேர்வு: தண்டனை... மார்க்: அவமானம்... கழுத்தை நெரிக்கும் கல்வி!

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக, ஏழு பக்கத்துக்கு ஜோதி எழுதியுள்ள உருக்கமான கடிதம் இன்று நாடு முழுமைக்குமாக மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ‘என்னை நன்றாக வளர்த்த அப்பா அம்மாவுக்கும் ஆசிரியர்களுக்கும் வணக்கம். என்னைப் பெரிய ஆளாக்க முயற்சி செய்தீர்கள். எனக்கு நல்ல வழிகாட்டியாக இருந்த அப்பாவும் அதிகமான அன்பு காட்டிய அம்மாவும் என்னை மன்னித்து விடுங்கள். என்மீது அதிக எதிர்பார்ப்புடன் இருக்கிறீர்கள். நானும் அதை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வுக்கு நன்றாகத் தயார் செய்திருக்கிறேன். ஆனாலும், பயமாக இருக்கிறது. மெடிக்கல் காலேஜில் சீட் கிடைக்காவிட்டால் நாம் எடுத்த முயற்சிகள் வீணாகிவிடும். அதனால், இந்த முடிவைத் தேடிக்கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள். அப்பா... உங்கள் உடல் நிலையை நன்றாகக் கவனித்துக்கொள்ளுங்கள். எப்போதும்போல் மகிழ்ச்சியாக நீங்கள் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். தம்பியை நல்லாப் படிக்க வைங்க. பைபை ஶ்ரீதர்... ஐ லவ் யூ அம்மா. சாரி அப்பா, ப்ளீஸ் ஹெல்த்த நல்லா பார்த்துக்கோங்க. நீங்க ஹார்ட் பேஷன்ட். என்னைப் பத்தி ரொம்ப கவலைப்படாதீங்க. ஐயாம் சாரி... ஐயாம் டயர்டு!’ - ஜோதியின் கடிதத்தை முழுமையாக வாசிக்கும் யாரும் கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.

அந்த மாணவிக்கு எல்லாமே புரிந்திருக்கிறது. அவர் சிறுமி அல்ல. தான் செய்வது தவறு. ஆனால், தேர்வுகள் எதிர்பார்ப்புகள் தோல்விகளிலிருந்து தப்பிக்க மரணம் ஒன்றே ‘வழி’ என்று முடிவுசெய்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘பரீச்சைக்கு நேரமாச்சு... என் குழந்தையை விடுங்கடா!’’

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா. விவசாயக் கருவிகளை விற்பனை செய்யும் மணிவண்ணன்-ஜெயசித்ரா தம்பதியின் ஒரே மகன். ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வு எழுதியிருக்கிறார் ஆதித்யா. மூன்றாவது முறையாகத் தேர்வுக்குத் தயாராகிவந்தவர், அடுத்த நாள் தேர்வு என்கிற பதற்றத்திலும் மீண்டும் தோல்வியடைந்தால் என்னாகும் என்கிற பயத்திலும் கலங்கிப்போயிருக்கிறார். நள்ளிரவு நேரம், எல்லோரும் தூங்கிய பிறகு, தன் அம்மாவின் சேலையை மின்விசிறியில் முடிச்சிட்டு தூக்குப்போட்டுக்கொண்டுள்ளார். காலையில் விஷயமறிந்த பெற்றோர் துடித்துப் போனார்கள்.

தேர்வு: தண்டனை... மார்க்: அவமானம்... கழுத்தை நெரிக்கும் கல்வி!

‘நீட் தேர்வுக்கு நிரந்தரத் தடைவிதிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம்’ என்று மருத்துவமனை முற்றுகையிடப்பட்டதால், ஆதித்யாவின் உடல் வைக்கப்பட்டிருந்த அரசு மருத்துவமனை பதற்றமாக இருந்தது. பரிதவித்துக்கொண்டிருந்த மணிவண்ணன், ‘‘என் மகனை அவன் விரும்பம்போல படிக்க வெச்சேன். என் சக்திக்கு மீறி, கஷ்டப்பட்டு ஒவ்வொரு வருஷமும் 2.5 லட்சம் ரூபாய் செலவு செஞ்சு படிக்க வெச்சேன். ரெண்டு தடவையும் பாஸ் பண்ணினான். கட் ஆஃப் மார்க் பத்தல, மெடிக்கல் சீட் கிடைக்கல. இந்த வருஷமும் ஒரு கோச்சிங் சென்டர்ல சேர்த்தேன். இந்தவாட்டி ‘ஆல் இந்தியா அளவில ஃபர்ஸ்ட் வருவேன்’னு சொன்னான். எக்ஸாம் முடிஞ்ச உடனே புது போன் வாங்கித் தரணும்னு கேட்டிருந்தான். போன் வாங்க, கடன் வாங்கி காச கையில வெச்சிருக்கேன். இப்படி செஞ்சிட்டுப் போயிட்டானே... இதுவரை ஒருதடவைக்கூட அவனை அடிச்சதில்ல. இப்ப கத்தியால கிழிச்சு ஆம்புலன்ஸுல போட்டிருக்காங்களே’’ என்று தலையில் அடித்துக்கொண்டு கதறி அழுதார். உறவினர்கள் அவரைத் தேற்ற முடியாமல் தவித்தார்கள்.

மகனை இழந்த அதிர்ச்சியில், மனம் கலங்கிப் போயிருந்த ஆதித்யாவின் தாய் ஜெயசித்ரா, ‘‘பரீச்சைக்கு நேரமாச்சு... என் குழந்தையை விடுங்கடா... நான் குழந்தையைக் கூட்டிட்டுப் போகணும்’’ என்று மீண்டும் மீண்டும் அதையே சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென வலிப்பு வந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவம் படிக்க விரும்பிய ஒரு மாணவன், தன் மரணத்தால் மருத்துவமனையையே ஸ்தம்பிக்க வைத்திருந்தான். அவனின் உறவினர்களுக்கும் போலீஸுக்கும் பேச்சுவார்த்தை தீவிரமாகிக் கொண்டிருக்க, அவனோ தேர்வு பயமின்றி ஆம்புலன்ஸுக்குள் நீண்ட உறக்கத்திலிருந்தான்.

‘‘நல்லகாலம் பக்கத்துல இருக்கிறப்ப போயிட்டியே!’’

திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் - கோமதி தம்பதியின் மூத்த மகன் மோதிலால். மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதவிருந்தார். 12-ம் தேதி இரவு, தேர்வு குறித்து அதுவரை இணையத்தில் தேடிப் படித்துக்கொண்டிருந்த மோதிலால், மனதில் என்ன ஓடியதோ... ‘எப்படி தற்கொலை செய்வது?’ என யூடியூபில் தேடியிருக்கிறார். தூக்குப்போடுவது என முடிவுக்கு வந்து, தொட்டில் கட்டும் கொக்கியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மோதிலாலின் அப்பா முருகேசன் பேசும் நிலையில் இல்லை. உறவினர் பழனிவேலுவிடம் பேசினோம். ‘‘மோதிலாலுக்கும் சரி, எங்களுக்கும் சரி, அவன் டாக்டராக வேண்டுமென்பது கனவு. மோதிலாலின் அப்பா, பல லட்சம் செலவுசெய்து கோச்சிங் சென்டரில் படிக்கவெச்சார். முதல்முறை நீட்ல 180 மார்க்கும், இரண்டாவது முறை 373 மார்க்கும் எடுத்தான். ‘இந்த முறை எப்படியும் மெடிக்கல் சீட் வாங்கிடுவேன்’னு உறுதியா சொல்லிக்கிட்டிருந்தான். ‘ரெண்டு வருஷத்த வீணாக்கிட்டோமே’னு அவனுக்கு வருத்தம் இருந்துச்சு. ‘என் கூட படிச்சவங்கெல்லாம் பி.இ முடிக்கப் போறாங்க. நான் இன்னும் எதுவும் முடிக்கல’னு சொல்லுவான். இந்தவாட்டியும் தோத்துட்டா அப்பாவை ஏமாத்துன மாதிரி ஆகிடுமேனு நினைச்சானோ என்னமோ... இப்படி அநியாயமா உயிரை விட்டுட்டான்’’ என்று கலங்கினார்.

மோதிலாலின் தாய் கோமதி, அழுவதற்கும் சக்தியில்லாமல் அரற்றிக்கொண்டிருந்தார். ‘‘கஷ்டப்பட்ட நேரத்துலயெல்லாம் எங்ககூட இருந்து கஷ்டப்பட்டியே சாமீ... நீ படிச்ச படிப்புக்கு பாஸாயிருப்பியே... நல்லகாலம் பக்கத்துல இருக்கிறப்ப எங்களை விட்டுட்டு போயிட்டியே...’’

மோதிலால், தன் அம்மாவின் குரல் கேட்காத தூரத்துக்குச் சென்றுவிட்டார்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெற்றோர் - ஆசிரியர் - அரசு யார் பொறுப்பு?

போதுமான அளவு போராடியாகிவிட்டது. நிரந்தரமான அரசுத் தரப்பு தீர்வுகளுக்குக் காத்திராமல் உடனடியாக நாம் செயல்பட வேண்டிய நேரமிது. ஏனென்றால், எதைவிடவும் நமக்குப் பிள்ளைகள் முக்கியம். ‘தேர்வுகளும் மதிப்பெண்களும் மட்டுமே மனித வாழ்க்கையைத் தீர்மானிப்பவை அல்ல. அவை வாழ்க்கையின் ஒரு சிறு பகுதி மட்டுமே!’ - இந்த எளிமையான விஷயத்தை இளைஞர்களுக்கு யார் சொல்லித் தருவது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் பரஸ்பரம் மாறி மாறி கைகாட்டிக்கொள்வதால் பிரச்னை தீரப்போவதில்லை.

தேர்வு: தண்டனை... மார்க்: அவமானம்... கழுத்தை நெரிக்கும் கல்வி!

நீட் தேர்வு என்றில்லை... எல்லாவகையான தேர்வுகளுமே தண்டனையைப்போலத்தான் நடத்தப்படுகின்றன. குறைந்த மதிப்பெண்கள் அவமானத்துக்குரியவையாகப் பார்க்கப் படுகின்றன. பள்ளிகள் தங்களின் ‘ஸ்டாண்டர்டு’ என்ற பெயரில் செய்யும் கேலிக்கூத்துகள் மோசமானவை. பெற்றோர்கள், தாங்கள் செலவழிக்கும் கல்விச் செலவுகளுக்கான ‘ரிட்டனாக’ பிள்ளைகளிடம் மார்க்கை எதிர்பார்ப்பது அநியாயம். பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, குடும்பத்தின் பொருளாதார இழப்பு, ஆசிரியர்கள் தரும் அழுத்தம், சக மாணவர்களின் வெற்றி, எதிர்காலம் குறித்த பயம் என மொத்தமும் மூளையில் வந்து இறங்கும்போது, பாரம் தாங்காமல் பயந்துவிடுகிறார்கள் மாணவர்கள். ஒப்பிட்டுப் பார்க்கும்போது கல்வியைவிட மரணம் எளிதாகத் தெரிகிறது!

இறந்துகிடக்கும் உடலை நோக்கி “அய்யா சாமி, முடியலன்னா சொல்லியிருக்கலாமே... உன் உசுரவிடவா எங்களுக்கு மார்க் முக்கியம்!” என்று பெற்றோர்கள் கதறி அழுவதைப் பார்க்கிறோம். “வெற்றியோ தோல்வியோ... விடு சாமி பாத்துக்கலாம். வேற ஏதாவது படிக்கலாம்... வேற ஏதாவது வேலை பாத்துக்கலாம்... வாழ்றதுதான் முக்கியம். நாங்க இருக்கோம்’’னு சொல்லி வளர்க்கலாமே!

கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் செய்வதில், பெற்றோர் - ஆசிரியர் - அரசு மூவரும் ஒன்றுதான். கல்வி வணிகமல்ல... மாணவர்கள் சரக்குகளும் அல்ல... அவர்கள் உயிர்ப்புள்ள இந்த உலகத்தின் எதிர்காலம்!

உணர்ச்சிபூர்வமான ப்ளாக்மெயில்!

மனநல மருத்துவர் சிவபாலனிடம் இந்தப் பிரச்னைகள் குறித்துக் கேட்டோம்... ‘‘இந்தத் தற்கொலைகளைத் தனிப்பட்ட ஒரு மாணவரின் பிரச்னையாகவோ, பெற்றோர் கொடுத்த அழுத்தம் அல்லது அதீத எதிர்பார்ப்பினாலோ நடைபெற்ற துயரம் என்று சுருக்கிப் பார்த்துவிட முடியாது. ‘நாம் இதுவரை படித்த பாடத் திட்டத்துக்குத் தொடர்பே இல்லாமலிருக்கிறது ‘நீட்’ தேர்வு. இதற்காகத் தனியே பயிற்சி மையத்தில் சேர்ந்து படிப்பதற்கு பொருள் வசதி வேண்டியிருக்கிறது’ என்று மாணவர்கள் புரிந்துவைத்திருக்கிறார்கள். ஆக, ‘நீட் தேர்வு’ குறித்து மாணவர்களிடையே இருந்துவரும் இந்தக் கூடுதல் அச்சம்தான், அந்தத் தேர்வின்மீதே மிகப்பெரிய அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடுகிறது.

பெற்றோர்களும்கூட, ‘நீ அதிக மார்க் எடுத்துவிடுவாய் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே சில தியாகங்களைச் செய்துகொண்டு, இன்னும் அதீதமாய் நீ உழைக்க வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பை 11-ம் வகுப்பிலிருந்தே பிள்ளைகள்மீது திணிக்கிறார்கள். ஏற்கெனவே தேர்வு மீதான அவநம்பிக்கை, அதோடு சேர்த்து பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பு எனும் அழுத்தங்கள் ஆகியவை ஒன்றுசேர்ந்து பிள்ளைகளைத் தொடர்ச்சியான மன அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றன.

தேர்வுக்கு முந்தைய நாள்களில் பிள்ளைகள் மனச்சோர்வுடன் இருக்கிறார்களா இல்லையா என்பதைப் பெற்றோர்கள்தான் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும். மனச்சிக்கல் உள்ள குழந்தைகளிடம் தாங்களாகவே முன்வந்து பேசி, அவர்களைச் சிக்கல்களிலிருந்து வெளிக்கொணரும் முயற்சிகளைச் செய்ய வேண்டும். மாறாக, ‘கொஞ்சநாள்தான் இந்தச் சிரமங்கள் எல்லாம்... எப்படியும் நீ நினைத்த மதிப்பெண்களை வாங்கிவிடுவாய்... அப்புறம் பிரச்னைகளே இல்லை’ என்றெல்லாம் மறைமுகமான அழுத்தம் கொடுத்து குழந்தைகளை மேலும் சிக்கலுக்குள் தள்ளிவிடக் கூடாது.

‘நீ என் பிள்ளை. உன்னை மதிப்பெண்களை வைத்து நாங்கள் மதிப்பிடப்போவது இல்லை. என்ன சிரமம் என்றாலும் பெற்றோரான எங்களிடம் சொல். உட்கார்ந்து பேசி நல்ல முடிவெடுக்கலாம். நீ எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் என் பிள்ளைதான். உன்னால் முடிந்த அளவு படி. கிடைக்கக்கூடிய மதிப்பெண்களை வைத்துக்கொண்டு, அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று நாம் சேர்ந்து முடிவெடுப்போம்’ என்று பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு, ‘நீ கேட்பதையெல்லாம் உனக்கு வாங்கித் தருகிறேன். இதற்காக அப்பா எவ்வளவு கஷ்டப்படுகிறேன் பார்...’ என்று பேசுவது நிச்சயமாக சரியான விஷயம் அல்ல. அது உணர்ச்சிபூர்வமான ப்ளாக்மெயில்தான்! இதனாலேயே அதிக மன அழுத்தத்துக்கு பிள்ளைகள் ஆளாகிவிடுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால்... ‘வெற்றியோ தோல்வியோ பெற்றோராகிய நாங்கள் எப்போதும் உனக்குத் துணையாக நிற்போம்’ என்ற நம்பிக்கையைப் பிள்ளைகளிடத்தில் ஏற்படுத்துவது தான் எல்லா பிரச்னைகளுக்குமான ஒரே தீர்வு!’’ என்றார்.

‘மருத்துவம்’ படிப்பது மட்டும்தான் வாழ்க்கையில் ஜெயிக்க ஒரே வழியா?

சமூகக் கல்வியாளர் ‘நெடுஞ்செழியன்’ சில முக்கியமான புள்ளிகளைக் குறிப்பிட்டுப் பேசினார்... ‘‘ ‘ஒரு வகுப்பில், குதிரை, குரங்கு, மீன் எனப் பலதரப்பட்ட உயிரினங்கள் இருக்கின்றன. அதில், மீனின் திறமை என்பது நீச்சலில் மட்டும்தான். ஓட்டப்போட்டியில் அதனால் வெற்றிபெற முடியாது. அதனாலேயே ‘மீனுக்குத் திறமை கிடையாது’ என்று சொல்லிவிட முடியுமா என்ன?’ ஐன்ஸ்டீன் கேட்ட இந்தக் கேள்விக்கான விடையை இன்னமும்கூடத் தமிழகம் உணர்ந்துகொள்ளவில்லை என்பதைத்தான் தற்போதைய கல்விச் சூழல் உணர்த்துகிறது. இங்கே, ‘மருத்துவம் மட்டுமே உயர்ந்த படிப்பு. மருத்துவராவதுதான் வாழ்க்கையை ஜெயிக்க ஒரே வழி என்பதாக பிம்பம் கட்டமைக்கப்படுகிறது’. பாவம்... மாணவர்களும் பெற்றோர்களும் இதை நம்புகிறார்கள். மருத்துவத்தை மட்டுமே முன்னிறுத்தி, மற்ற துறைகளைப் புறந்தள்ளுகிற சூழல், தமிழகத்தில் தற்போது அதிகரித்துவருகிறது. இதனால், ‘நீட் தேர்வு’ என்ற ஒற்றைப் போட்டியில் மட்டுமே ஒட்டுமொத்த மாணவர்களும் திணிக்கப்படுகிறார்கள்.

வாழ்க்கையில், ‘ஒருவனிடம் என்ன திறமை இருக்கிறது’ என்பதைக் கண்டுபிடிக்கக்கூடிய மிகப்பெரிய களமாக, கூடமாகப் பள்ளிகள் மட்டுமே இருக்கின்றன. எனவே ஓவியம், இசை, கட்டுரை, பேச்சு என அனைத்துவிதப் போட்டி களையும் மாணவர்களுக்கு ஏற்படுத்தித்தரும் தளமாகத்தான் பள்ளிகள் இருக்க வேண்டும். ஆனால், பணத்துக்காக ஒரு குறிப்பிட்ட துறையை மட்டுமே மாணவர்களுக்கும் - பெற்றோர்களுக்கும் பூதாகரமாகக் காட்டி பணம் பறிக்கிற தவறான பாதைகளில் பள்ளிகள் பயணிக்க ஆரம்பித்து விட்டன.

இன்றையச் சூழலில், கல்வித்துறை முழுக்க அரசியலும் பின்னிப் பிணைந்துவிட்டதால், இன்றைக்கு மாணவர்களை மாணவர்களாகப் பார்க்காமல், வெறும் மதிப்பெண்களாகப் பார்க்கத் தொடங்கிவிட்டோம்! எனவே, அரசுதான் இதைத் தீவிரமாகக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் கோச்சிங் வகுப்புகளில், குழந்தைகளுக்கு 8 மணி நேரத் தூக்கத்துக்குக்கூட இடம் கொடுக்காத வகையில், அடுத்தடுத்த டெஸ்ட்டு களிலேயே குழந்தைகளின் வாழ்க்கையைக் குதறி எடுத்துவிடுகிறார்கள். தூக்கம் தடைபடும்போது, ஒரு மாணவனின் கற்றல் திறன் 40 சதவிகிதம் பாதிக்கப்படுகிறது. ஆக, தூக்கத்தைக்கூட சமரசம் செய்துகொண்டு, ஒரு மாணவனிடம் மதிப்பெண்ணை எதிர்பார்ப்பதுதான் இன்றையக் கல்வி முறையின் முதல் குறைபாடு. வன்முறையும்கூட!

உடல்ரீதியாக குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்போது, மனரீதியான ஆரோக்கியமும் இருக்கும். ஆனால், நிறைய பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்புகளே நடத்தப்படுவது இல்லை. விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போதுதான் ‘வெற்றி - தோல்விகள் சகஜம்’ என்ற மனநிலை குழந்தைகளுக்குள் ஏற்படும்.

நீட் தேர்வு மனச்சுமையால், தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகளின் பின்னணி என்ன, இவர்கள் எங்கே படித்தார்கள், அங்கே இவர்களது நடத்தை எப்படியிருந்தது, எந்த மாதிரியான மனச்சுமையில் இருந்தார்கள் என்பதையெல்லாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்து கண்டறிந்தால் மட்டுமே இனிவரும் தற்கொலை களை யாவது தடுக்க முடியும்’’ என்றார் ஆதங்கத்தோடு.

போதும்... வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தயார் செய்கிறோம் என்கிற பெயரில் மாணவர்களை மரணத்தை நோக்கித் தள்ளியது போதும். உலகம் பெரிது... துறைகள் ஆயிரம்... வாய்ப்புகள் ஏராளமானவை... ஜெயிப்பதற்கு காலமோ எல்லையோ இல்லை... உன் கனவுகள் வெல்வதற்கு உடன் நிற்கிறோம் என்ற வார்த்தைகள் போதும். அவர்கள் வெற்றிபெறுவார்கள்.

‘உங்கள் குழந்தைகள்

உங்களுடன் இருந்தாலும் அவர்கள்

உங்களுக்கு உரியவர்களல்லர்.

அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்;

எண்ணங்களை அல்ல.

அவர்களுக்கென்று சுய சிந்தனைகள் உண்டு.

அவர்களுடைய உடல்களை

நீங்கள் சிறைப்படுத்தலாம்;

ஆன்மாக்களை அல்ல.

கனவிலும் நீங்கள் நுழைய முடியாத

எதிர்காலக் கூட்டில்

அவர்களது ஆன்மாக்கள் வசிக்கின்றன.’

என்கிற கலீல் ஜிப்ரானின் கவிதை இந்தச் சுழ்நிலைக்கு மிகப் பொருத்தமானது.

கல்வியால் இனி ஒரு மரணம் நிகழாதிருக்கட்டும்!

அட்டை ஓவியம்: ஆர்.பாலகிருஷ்ணன்

தேர்வு: தண்டனை... மார்க்: அவமானம்... கழுத்தை நெரிக்கும் கல்வி!
தேர்வு: தண்டனை... மார்க்: அவமானம்... கழுத்தை நெரிக்கும் கல்வி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism