Published:Updated:

`ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் குளறுபடியா?!' - கல்வித்துறை சர்ச்சையும் விளக்கமும்

அன்பில் மகேஷ் - பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் அகில இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழகக் கல்வித்துறையில் குளறுபடிகள் குவிந்துகிடப்பதுடன், ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்காக லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

`ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வில் குளறுபடியா?!' - கல்வித்துறை சர்ச்சையும் விளக்கமும்

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் அகில இந்திய அளவில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் தமிழகக் கல்வித்துறையில் குளறுபடிகள் குவிந்துகிடப்பதுடன், ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்காக லட்சக்கணக்கில் வசூல் வேட்டை நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்திருக்கின்றன.

Published:Updated:
அன்பில் மகேஷ் - பள்ளிக் கல்வித்துறை

தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பிறகு சீரமைப்புக்கு உள்ளாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட துறைகளில் ஒன்று கல்வித்துறை. காரணம் கடந்த பத்து ஆண்டுகளாக அந்தத் துறையில் நடைப்பெற்றுவந்த நிர்வாகக் குளறுபடிகள் அப்படி. வருகைப் பதிவேடு தொடங்கி பணிமாறுதல் கலந்தாய்வு வரை அனைத்திலும் குழப்பங்கள். மாணவர் சேர்க்கை, மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப் பதிவேடு, வரவு செலவு மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றை கணினி மயமாக்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு கல்வித்துறையால் தொடங்கப்பட்டதுதான் எமிஸ் (EMIS - Educational Management Information System) என்று சொல்லக்கூடிய கல்வி மேலாண்மை தகவல் மையம். கல்வித்துறையின் கீழ் தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அவர்களின் பள்ளிகள், வகுப்பு விவரங்கள் போன்றவை இந்த தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. தற்போது ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வும் இந்தத் தளத்தில்தான் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

EMIS - கல்வி மேலாண்மை தகவல் மையம்
EMIS - கல்வி மேலாண்மை தகவல் மையம்

அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஆண்டு, டிசம்பர் 31-ம் தேதி தொடங்கி இந்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி முடிக்கப்படும் என்று அறிவித்தது கல்வித்துறை. ஆனால் EMIS தளத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் விண்ணப்பம் பெறும் தேதி ஜனவரி 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஜனவரி 24-ம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வரை பணியிட மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் இருக்கும் குளறுபடிகளைப் பட்டியலிடுகிறார்கள் ஆசிரியர்கள்.

தனது பெயரைக் குறிப்பிட வேண்டாமென்று நம்மிடம் பேசிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், ``தினமும் காலையில் பள்ளி தொடங்கியதும் மாணவர்களுக்கு வருகைப் பதிவேட்டில் அட்டெண்டன்ஸ் எடுத்து முடித்ததும், ஆன்லைனிலும் அட்டெண்டன்ஸ் எடுக்க வேண்டும். ஆசிரியர்கள் அட்டெண்டன்ஸிலும் இதுதான் நடைமுறை. சிக்கலே இங்கதான் ஆரம்பிக்குது. ஆசிரியர்கள், மாணவர்கள் ரெண்டு பேரோட அட்டெண்டன்ஸையும் காலைல 9 மணியில இருந்து 9:30-க்குள்ள க்ளோஸ் பண்ணிடணும்னு சொல்றாங்க. அந்த அரை மணி நேரத்துல தமிழ்நாட்டுல இருக்கற அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் எல்லாமே ஆன்லைன்லதான் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரே நேரத்துல அத்தனை பள்ளிகளோட என்ட்ரியையும் தாங்குற திறன் கல்வித்துறையோட சர்வருக்கு இல்லை. அதனால அந்த நேரத்துல EMIS போர்ட்டல் `ஹேங்க்’ ஆகி, குறிப்பிட்ட நேரத்துக்குள்ள அட்டெண்டன்ஸை குளோஸ் பண்ண முடியாம போயிடும். பல பள்ளிகள்ல இன்னும் இன்டர்நெட் கனெக்‌ஷனே கொடுக்காம இருக்காங்க. சில இடத்துல கனெக்‌ஷன் இருந்தாலும் சிக்னல் கிடைக்கலை. நடைமுறையில் இருக்கற இந்தச் சிக்கல்களை புரிஞ்சுக்காமலும், அதைச் சரி பண்ணாமலும் ஏன் அட்டெண்டன்ஸ் வெக்கலைன்னு அதிகாரிங்க எங்களை மிரட்டுறாங்க. அதேபோல பள்ளி நிதியிலிருந்து செலவுக்குப் பணம் எடுத்தால் அதை உடனே EMIS-ல பதிவு பண்ணணும்னு சொல்றாங்க. அது நல்ல விஷயம்தான். ஆனால் இன்னைக்கு தேதியைப் போட்டு நான் பணத்தை எடுத்துட்டா ரெண்டே நாள்ல அதுக்கான பில்லை ஏத்திடணும். அதுவும் ஜி.எஸ்.டி பில்லா இருக்கணும்னு சொல்றாங்க. எல்லா வேலைகளுக்கும் எப்படி ரெண்டே நாள்ல பில்லைக் கொடுக்க முடியும்? இந்தச் செலவுக் கணக்கை என்ட்ரி பண்றது எப்படின்னு இதுவரைக்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சியே குடுக்கலை” என்றார் விரக்தியுடன்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள்  பணியிட மாறுதல்  கலந்தாய்வு
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பணிமாறுதல் கலந்தாய்வில் இருக்கும் குழப்பங்கள் குறித்து நம்மிடம் பேசிய ஆசிரியர் ஒருவர், ``ஆசிரியர்களின் ஆன்லைன் பணி மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் தொடர்பா 12 டிசம்பர், 2020 அன்று தமிழக அரசு அரசாணை எண்:176-ஐ வெளியிட்டது. அந்த அரசாணைப்படி 30 டிசம்பர், 2021 அன்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்ட கலந்தாய்வு அட்டவணையில், மறுநாள் 2021, டிசம்பர் 31-ம் தேதியிலருந்து EMIS-ல் ஆசிரியர்களே நேரடியா அப்ளை பண்ணணும், 2022, ஜனவரி 7-ம் தேதிக்குள் அதை முடிக்கணும்னும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அப்ளிகேஷனை நாங்களே ஏத்துறதுக்கான வசதி EMIS-ல இல்லை. பள்ளிக் கல்வித்துறை ஆணையரோட அந்த அறிவிப்பு எங்களுக்கு துறை மூலமா வரலை. ஏதொவொரு வாட்ஸ்அப் குழு மூலம்தான் தெரிஞ்சுக்கிட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதை எப்படி அப்லோடு செய்யணும்னு எங்களுக்குப் பயிற்சி குடுக்கலைங்கறது ஒருபக்கம் இருந்தாலும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குக்கூட அதைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அதனால வேற வழியில்லாம சில ஆசிரியர்கள் தனிப்பட்ட முறையில் EMIS-ஐ தொடர்புகொண்டு பிரச்னைகளைக் கூறியதையடுத்து, ஜனவரி 5-ம் தேதி மதியம் பதிவேற்றும் வசதி தரப்பட்டது. அதுக்கப்புறம்தான் குளறுபடிகள் இன்னும் அதிகமாச்சு. யாருக்கு யார் ஒப்புதல் தருவது என்பதில் தொடங்கி குழப்பங்கள் ஒண்ணு ஒண்ணா வந்ததால இறுதிக் காலக்கெடுவைத் தாண்டி ஜனவரி 12-ம் தேதி வரைக்கும் குளறுபடிகளோட அப்லோடு பண்ணி முடிச்சாங்க. இந்த ஆன்லைன் மாறுதல் கலந்தாய்வு புதுசு கிடையாது. கடந்த பத்து வருஷமா நடைமுறையில் இருக்கறதுதான். ஆனால் எங்ககிட்ட இருந்து அப்ளிகேஷன்களை வாங்கி மாவட்ட அளவில் அதிகாரிகள் ஆன்லைன்ல பதிவு செய்வாங்க. இப்போ ஆசிரியர்களே நேரடியா பதிவு பண்ணணும்னு சொல்றாங்க. அது மட்டும்தான் புதிய நடைமுறை. அதனால் வசூல் வேட்டை நடத்துவதற்காக வேண்டுமென்றே இந்தக் குளறுபடிகளை ஏற்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறோம்.

கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

சில இடங்களில் 5 லட்சம் ரூபாய் வரை பேரமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாடே கொரோனா புதிய அலையால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை ஒரே இடத்துல கூட்டி, கொரோனா விதிகளை மீறி பயிற்சியை நடத்திக்கிட்டிருக்கு கல்வித்துறை.

ஒன்றரை வருஷமா மூடிக்கிடந்த பள்ளிகளைத் திறந்ததும், மாணவர்களுக்கு கலைத்திட்ட கற்பித்தலை போதிக்காமல் புத்தாக்கப் பயிற்சிகள் நடத்துங்கள் என்று கல்வித்துறை கூறியிருந்ததால் ஆசிரியர்களும் அப்படியே செஞ்சாங்க. ஆனால் பள்ளிகள் தொடங்கிய மூணே வாரத்துல மாணவர்களின் கற்றல் அடைவைச் சோதிக்க மண்டல அளவிலான ஆய்வுகளை நடத்தியது கல்வித்துறை. கலைத்திட்டக் கற்பித்தலே நடைபெறாத அந்த மூன்று வாரத்தில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் மாணவர்களுக்கான கற்றல் அடைவை ஆசிரியர்கள் சரியாக போதிக்கவில்லை என்று சொன்ன கல்வித்துறை, இப்போ ஆசிரியர்களுக்கு கற்றல் அடைவு பயிற்சிகளை வழங்குகிறோம்னு சொல்வது வேடிக்கையாக இருக்கு.

நடத்தாத பாடத்தில் கற்றல் அடைவை எப்படிச் சோதித்தார்கள் என்பது கல்வித்துறை அதிகாரிகளுக்கே வெளிச்சம். வகுப்புக்கு 20 மாணவர் என்ற விகிதத்தில் சூழற்சி முறையில் தொடக்க நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டுவந்தன. ஆனால் கொரோனா பரவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறி, மாணவர்களின் அந்த நேரடி வகுப்புகளை நிறுத்திய அரசு, தற்போது இல்லம் தேடிக் கல்வி என்ற பெயரில் அதே மாணவர்களை அதே பள்ளியில் அமரவைக்கும் கூத்தை என்னவென்று சொல்வது? அதேபோல தமிழுக்கும் தமிழ்வழிக் கற்றலுக்கும் முக்கியத்துவம் தரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசில் வெளியிடப்பட்ட அரசாணை எண்:176-ல் ஒரு வார்த்தைகூட தமிழில் இல்லை. அரசு நிர்வாகத்தில் தமிழ் மொழியின் பயன்பாட்டை உறுதிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட தமிழ் வளர்ச்சித்துறை இருக்கிறதா என்று தெரியவில்லை. கள நிலவரத்தை உணர்ந்துகொள்ள முடியாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் கல்வித்துறையின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சென்றதுதான் இவ்வளவு குழப்பங்களுக்கும் காரணம்” என்று நொந்துகொள்கிறார்.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ``தற்போதைய நிலவரப்படி. அனைவரும் EMIS-ஐ பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இன்டர்நெட் கனெக்‌ஷன் இல்லை என்று கூறும் இடங்களில் அந்த வசதியைச் செய்து கொடுத்துவருகிறோம். எங்கெல்லாம் அந்தக் குறைபாடுகள் இருக்கின்றனவோ அதைக் கண்டறிந்து, சரிசெய்து EMIS-ல் 100% துல்லியத்தைக் கொண்டுவரும் பணிகளைச் செய்துவருகிறோம். குழந்தைகள் மகிழ்ச்சியுடன் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் முக்கிய நோக்கம். ஒரு லட்சம் யூனிட்டில் இல்லம் தேடிக் கல்வி செயல்படுகிறது. ஒரு பள்ளி வளாகத்தில் 1,000 மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கும் ஒரு லட்சம் ஏக்கர் இடத்தில் 12, 15 பேர் அமர்ந்து படிப்பதற்கு வித்தியாசம் இருக்கிறது. அதனால் அந்த விஷயத்தில் யாரும் பயப்படத் தேவையில்லை.

பணியிடை மாறுதல் விவகாரத்தில் விகடன் மூலமாக அனைத்து ஆசிரியர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது, இந்த ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கும்படி முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அதில் முக்கியமானது ஆசிரியர்களின் பணியிடை மாறுதல். மாறுதல் கலந்தாய்வில் 100% தகுதியின் அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படும். அதனால் யாரும் எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும்னு சொல்லி பணம் கேட்பவர்களிடம் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism