Published:Updated:

`துணைவேந்தர்கள் மீதான ஊழல் வழக்குகள் கவலையளிக்கிறது!’ - உயர் கல்வி மாநாட்டில் ஆளுநர் வேதனை

துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது ஊழல் வழக்கு தொடரப்படுவது எனக்குக் கவலையளிக்கிறது. இது நம்முடைய நாகரிகத்தின் மீதுள்ள கறையாகும் என ஊட்டியில் நடந்த துணை வேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் கவலை தெரிவித்தார்.

Higher education conference
Higher education conference

சென்னை ராஜ்பவன் மற்றும் திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் இணைந்து `வேந்தரின் இலக்கு 2030 தொழில்துறை சகாப்தம் 4.0 புதுமையான கல்விமுறை’ என்ற உயர் கல்வி மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார். மாநாட்டில் தமிழகத்தில் உள்ள 20 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Higher education conference
Higher education conference

விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், "உலகளாவிய கல்வியில் இந்தியா ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. 993 பல்கலைக்கழகங்களையும் 39,931 கல்லூரிகளையும் கொண்டு, இந்தியா, உயர் கல்வி நிறுவனங்களின் மிகப்பெரிய வலைப்பின்னல்களில் ஒன்றாக விளங்குகிறது.

அதில், தமிழ்நாடு, உயர் கல்வியில் பெருமை கொள்ளத்தக்க நிலையில் உள்ளது. மாணவர் சேர்க்கை விகிதம், தேசிய சராசரியான 25.8 சதவிகிதம் உடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் 48.6 சதவிகிதமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 59 பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு சுமார் 8.64 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறுகின்றனர்.

Higher education conference
Higher education conference
Arun.K

18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், உலகில் எந்திர உற்பத்தி வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதிக அளவு பொருள்கள் உற்பத்தியில், தொழிலாளர்களுக்கு உதவுவதற்கென நீர் மற்றும் நீராவியில் இயங்கும் எந்திரங்கள் உருவாக்கப்பட்டன. இது தொழில் 1.0 யுகத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.

20-ம் நூற்றாண்டின் இறுதி 10 ஆண்டுகளில், தொழில் துறைகளில் தானியங்கி இயந்திரங்கள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டன. 1990-களில் இணைய மற்றும் தொலைத்தொடர்புத் துறைகளின் முன்னேற்றத்தால், நாம் தொடர்புகொண்டு தகவல் பரிமாற்றம் செய்யும் முறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு தொழிற்புரட்சி 4.0 உருவானது.

நமது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மாறி வரும் உலகுடன் பொருந்தும் தன்மையையும் புதுமையையும் முறையாக வளர்க்க வேண்டும் என்கிற, நாட்டின் தெளிவான அழைப்புக்கு விடையிறுக்கும் வகையில், திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனமும் ஆளுநர் மாளிகையின் தலைமைச் செயலகமும் இணைந்து இந்த இரு நாள்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் முயற்சியை எடுத்துள்ளன.

Higher education conference
Higher education conference

இரண்டு முன்னாள் துணைவேந்தர்களின் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சோதனை, பதவியிலிருந்த துணைவேந்தர் கைதுசெய்யப்பட்டது மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் முன்னாள் பதிவாளரின் தற்கொலை ஆகிய நிகழ்வுகள் கவலையளிக்கின்றன.

இது நம்முடைய நாகரிகத்தின் மீதுள்ள கறையாகும். நான் ஆளுநராகப் பதவியேற்ற பிறகு, துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தினோம். அனைத்து துணைவேந்தர் நியமனங்களிலும் கடைப்பிடிக்கப்படும் வெளிப்படைத்தன்மை உயர்கல்வித்துறையின் அனைத்து நிலையிலும் அறியப்பட்டிருப்பதால், தற்போது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக, மாணவ சமுதாயத்தின் மத்தியில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அதீத ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படுதல் வேண்டும், ஊழலற்றதாக மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது" என்றார்.