``மூன்றாண்டுகளாகப் போராடுகிறோம்... அதிக மதிப்பெண் பெற்றும் மாசு கட்டுப்பாடு வாரியப் பணியில் சேரமுடியவில்லை; உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் எங்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்காமல், அவசர அவசரமாகக் காலிப் பணியிடங்களை நிரப்பியிருக்கிறது மாசு கட்டுப்பாடு வாரியம். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு எங்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும்!" எனக் குமுறுகிறார்கள் கோவை வேளாண் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவர்கள்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நடந்தது என்ன?
கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் சுற்றுச்சூழல் விஞ்ஞானி உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. அதில் தேர்ச்சி பெற்ற கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும், நேர்காணலுக்காகவும் அழைக்கப்பட்டு சென்றிருக்கிறார்கள். அப்போது, வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள Master of Science in Environmental Science பட்டத்துக்கு பதிலாக உங்களின் பட்டம் Master of Science (Agriculture) Environmental Science என்றிருப்பதாகக் கூறி, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அவர்களை நிராகரித்திருக்கிறார்கள்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஆனால், அந்த மாணவர்களோ, ``இரண்டும் ஒரே பட்டம்தான். ஒரே பாடத்திட்டம்தான்; வேளாண் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பட்டம் என்பதால்தான் எங்களுக்கு இப்பட்டத்தின் முன்னொட்டில் Agriculture எனச் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், மற்றபடி தாங்கள் படித்த Discipline - Environmental Science-தான்!" எனக் கூறி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் பதிவாளர் வழங்கிய நிகர் சான்றிதழ், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் ஆவணங்களை வாரியத்திடம் சமர்பித்திருக்கிறார்கள். அதை அதிகாரிகள் ஏற்க மறுக்கவே, நீதிமன்றம் வரைக்கும் சென்றிருக்கிறார்கள் மாணவர்கள்.

அதைத் தொடர்ந்து, அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவர்கள் பட்டப்படிப்பு, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி பணி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்த பட்டத்துக்கு நிகரானதா என ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி, மாணவர்களின் பட்டப்படிப்பு சுற்றுச்சூழல் விஞ்ஞானி பதவிக்குத் தகுதியானது எனக் கூறி அறிக்கை சமர்ப்பித்தது.

அதன் விளைவாக, கடந்த 2021, மார்ச் 2-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் தலைமையினான அமர்வு, `சுற்றுச்சூழல் விஞ்ஞானி பதவிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு வேளாண் பல்கலைக்கழக மாணவர்களையும் பரிசீலிக்க வேண்டும் எனவும், அதற்கு எந்தவோர் இடையூறும் இல்லை எனவும், ஆட்சேர்ப்பு பணிகளைத் தொடர்ந்து, விரைந்து முடிக்க வேண்டும் எனவும்' தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு வலியுறுத்தி, வழக்கை முடித்துவைத்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால், ``அப்போதும்கூட எங்களை ஒரு நேர்காணலுக்கும் அழைக்காமல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனைத்து சுற்று நேர்காணலையும் நடத்தி முடித்து, தற்போது எங்களைத் தவிர்த்த மற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறது. இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது!" எனத் தெரிவிக்கிறார் பாதிக்கப்பட்ட வேளாண் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர் ஜி.கே.தினேஷ்.

இது குறித்து மேலும் பேசிய அவர், ``இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர், சுற்றுச்சூழல் துறைச் செயலர், சுற்றுச்சூழல்துறை அமைச்சர்கள் என அனைவருக்கும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் அனுப்பினோம். ஆனால், எந்தவிதமான பதிலும் வரவில்லை. மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்துக்கு எங்கள் பல்கலைக்கழகப் பதிவாளர் மின்னஞ்சல் வாயிலாகவும், தபால் வாயிலாகவும் எங்களுக்கு நேர்முகத் தேர்வை நடத்த கோரிக்கை விண்ணப்பம் விடுத்தார். அதற்கும் பதில் இல்லை. எனவே, நாங்கள் கடந்த 2022 ஏப்ரல் 25-ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரிய தலைமை அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்றோம்; ஆனால், எங்களை அனுமதிக்கவில்லை. அடுத்த நாள் (26.04.2022) மாலை மீண்டும் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவரைச் சந்திக்கச் சென்றோம். முன் அனுமதி பெற்றிருந்தும் எங்களை உள்ளே அனுமதிக்காமல் காத்திருக்க வைத்தனர்!
அதற்கு அடுத்த அரை மணி நேரத்தில் அவசர அவசரமாக ஏற்கெனவே, தயாரித்துவைத்திருந்த நியமனப் பட்டியலை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டது. அந்த நொடி எங்கள் ஒவ்வொருவர் தலையிலும் இடி விழுந்தது போன்று இருந்தது. பின்னர் அடுத்த ஐந்து நிமிடத்தில் மாசு கட்டுபாடு வாரியத்தின் மேலாளர் எங்களை அழைத்து, எங்களுக்கான அரசாணை குறித்தும், நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் ஒன்றுமே அறியாதவர்போல பேசிச் சமாளித்தார். மேலும், அதற்கு மறுநாளே (27.04.2022) பணி நியமன ஆணையை நேர்முகத் தேர்வு நடந்த மற்றவர்களுக்கு அனுப்பியிருக்கிறார்கள். இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ மெய்யநாதனை அன்றிரவே சந்தித்துப் பேசினோம். ஆனால் அவரும், `தன்னால் எதுவும் செய்ய முடியாது' எனக் கூறிவிட்டார்!" என தனது வருத்தத்தைப் பதிவு செய்தார் மாணவர் ஜி.கே.தினேஷ்.
அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மற்றொரு மாணவியான ச.இந்து பரமேஸ்வரியிடம் பேசியபோது, ``எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், இந்தப் பணிக்குத் தேவையான தகுதியான படிப்பைப் படித்திருந்தும், அதை மேலும் நீதிமன்றத்தின் மூலம் உறுதிப்படுத்தியும், முன்னாள் முதல்வர் கலைஞரால் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற தமிழக அரசின் மாநில வேளாண் பல்கலைக்கழகமான கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்ற எங்கள் 12 பேரையும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நிராகரித்திருக்கிறது.

சான்றிதழ் சரிப்பார்ப்புக்காக நாங்கள் சென்றது முதல் தற்போது மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவரைப் பார்க்க அனுமதி வழங்காதது வரை தொடர்ந்து எங்களை மாசு கட்டுப்பாடு வாரியம் புறக்கணித்துவருவது கடும் மனஉளைச்சலையும் வேதனையையும் தருகிறது. இந்தச் செயல்கள் யாவும் எங்களது சமநீதியைப் பறிப்பதாக இருக்கின்றன. இந்த ஒரு வேலைக்காக எங்கள் வாழ்வின் மூன்று ஆண்டுகளை அர்ப்பணித்திருக்கிறோம்!" எனத் தனது வேதனையைப் பதிவுசெய்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களிடம், தமிழக அரசுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை என்னவென்று கேட்டபோது, ``சுற்றுச்சூழல் அறிவியல் பயின்ற எங்களைப் போன்ற பட்டதாரிகளுக்கு இந்தத் துறை சார்ந்த வேறு பணி வாய்ப்புகள் இல்லாததால், இதே பணியிடங்களுக்கு இந்த அறிவிப்பிலேயே நேர்முகத் தேர்வை மிக விரைவில் நடத்தி எங்களுக்குத் தகுந்த நீதியை விரைவில் வழங்கிட வேண்டும்!" என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து, நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள் பாதிக்கப்பட்ட மாணவர்கள். அரசு செவி சாய்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!