Published:Updated:

`சம்ஸ்கிருதத்தில் வைத்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை!' - சேலம் பெரியார் பல்கலைக்கழக சர்ச்சை

பெரியார் பல்கலைக்கழகம்
பெரியார் பல்கலைக்கழகம் ( எம். விஜயகுமார் )

`இந்தியாவில் 80 சதவிகிதம் பேர் இந்துக்களாக இருக்கும்போது, இந்து மதத்தின் சிந்தனையாளராக நான் ஏன் இருக்கக் கூடாது? இந்து மதச் சிந்தனையாளராக இருப்பதில் அப்படி என்ன தவறு இருக்கிறது?'

பெரியார் பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் ரத யாத்திரை, துணைவேந்தர் இல்லாதபோது அவருடைய அறையில் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஆலோசனை செய்தது, பட்டமளிப்பு விழாவில் பெரியார் சிலையை மறைத்து இந்து மதச் சின்னங்கள் வைத்தது, சமீபத்தில் துணைவேந்தர் அறையை வாஸ்து சாஸ்திரப்படி மாற்றி அமைத்துவருவது என பெரியார் பல்கலைக்கழகம் மாறி வருவதாகப் பெரியார் சிந்தனையாளர்கள் கொதித்துவருகின்றனர்.

பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம்

இந்த நிலையில், தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது இருந்த தமிழ் பெயர்ப்பலகையை நீக்கியிருப்பது கொந்தளிப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இதுபற்றி திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் கேட்டதற்கு, ``அண்ணா பல்கலைக்கழகத்தைப்போல எதிர் காலத்தில் பெரியார் பல்கலைக்கழகத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அல்லாத பிற மாநிலத்தவர்கள் துணை வேந்தர்களாக ஆவதற்கும், வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேர்வதற்காகவும் தமிழ் பெயர்ப்பலகை நீக்கப்பட்டுள்ளது. பிற மாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு தமிழ் தேவையில்லை என்பதற்கும், ஆங்கிலம் மட்டும் போதும் என்பதற்காகவும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்ப் பலகை வைத்துவிட்டு, தமிழ் பெயர்ப்பலகையை நீக்கி இருக்கிறார்கள்.

கொளத்தூர் மணி
கொளத்தூர் மணி

`தமிழக மாணவர்கள் மேற்படிப்பு படிக்கவா போகிறார்கள்?அப்படிப் படித்தாலும், நாங்கள் படிக்கவைக்கவாபோகிறோம்?'. என்ற நோக்கத்தில் பெரியார் பல்கலைக்கழகத்தில் படிப்படியாக இந்துத்துவா சிந்தனை மேலோங்கிவருகிறது. குறிப்பாக, தற்போதைய துணைவேந்தர் குழந்தைவேலு, இந்துத்துவா சிந்தனையாளர். அவர், தமிழுக்குப் பதிலாக சம்ஸ்கிருதத்தில் பெயர்ப்பலகை வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இதை தொடர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோம். துணை வேந்தரை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்'' என்றார்.

``பிஸியா இருக்கிறோம்; நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை!''-நோட்டீஸுக்குப் பெரியார் பல்கலைக்கழகம் பதில்

இதுபற்றி பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குழந்தைவேலுவிடம் கேட்டதற்கு, ``தமிழ் எழுத்துகள் உடைந்து கீழே விழுந்ததால், தமிழ் பெயர்ப்பலகையை அகற்றச் சொன்னேன். இன்னும் மூன்று மாதத்தில் புதியதாக நுழைவுவாயில் கட்ட இருக்கிறோம். அப்போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை வைக்கப்போகிறோம்.

குழாந்தைவேலு
குழாந்தைவேலு

முதலில், நான் கடவுள் நம்பிக்கை உடையவன். இந்து மதக் கோட்பாடுகளைப் பின்பற்றக்கூடியவன். இந்தியாவில் 80 சதவிகிதம் பேர் இந்துக்களாக இருக்கும்போது, இந்து மதத்தின் சிந்தனையாளராக நான் ஏன் இருக்கக்கூடாது? இந்து மதச் சிந்தனையாளராக இருப்பதில் அப்படி என்ன தவறு இருக்கிறது? பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைபார்க்கிறேன் என்பதற்காக நான் கடவுளை வணங்கக் கூடாதா? என்னுடைய தனிப்பட்ட மத வழிப்பாட்டு உரிமையில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அனைத்து பல்கலைக்கழகத்திலும் விவேகானந்தர் மன்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அந்த மன்றத்தின் சார்பாக நடைபெறும் ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் நான் தலையிட முடியாது'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு