Published:Updated:

"பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கவேண்டும்!"- அரசு ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பள்ளி மாணவர்கள் (மாதிரி படம்)
பள்ளி மாணவர்கள் (மாதிரி படம்)

பள்ளிக்கூடத்தில் ஒரு அறையில் 20 மாணவர்கள் என்றிருப்பதை 30 முதல் 35 மாணவர்கள் வரை என அமரவைக்க வேண்டும். அதேபோல், சுழற்சி முறையை படிப்படியாகக் குறைத்து, மாணவர்கள் நலன் கருதி சனிக்கிழமை அன்று வழக்கம்போல் விடுமுறை அளிக்க வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் தணிந்துள்ளதன் காரணமாக அண்மையில், மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆலோசனைப்படி 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் இயங்கி வருகின்றன. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் போதிலும், நோய்த்தொற்று அச்சம் காரணமாக மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 28-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாகத் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும், இழப்பையும், ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்திருப்பதால், அதனைக் கருத்தில் கொண்டு அடுத்த மாதம் (நவம்பர் 1-ம் தேதி) முதல் அவர்களுக்கும் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள்
பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள்
மாதிரி படம்

அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் சுழற்சி முறை வருகை முறையை நீக்கி, சனிக்கிழமை அன்று மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கடிதம் அனுப்பிய அரசு பள்ளி மாணவி; பாராட்டிய ஐ.நா!

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நலக் கூட்டமைப்பின் தலைவர் அருணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்றே தணிந்துள்ளதை அடுத்து, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் 9, 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. தொடர்ந்து, நவம்பர் மாதம் முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவினை நாங்கள் வரவேற்கிறோம்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை

தமிழகத்தில் தற்போது, பள்ளிகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சுழற்சி முறையில் இயங்கி வருகின்றன. இந்த ஒருமாத காலத்தில் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவேடு தரவுகளை நாம் ஆராய்ந்து பார்க்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அதிகபட்சமாக 90 சதவீதத்திற்கும் மேல் வருகை புரிகின்றனர். ஆனால், சனிக்கிழமை அன்று மட்டும் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே பள்ளிக்கு வருகிறார்கள். சனிக்கிழமை அன்று மட்டும் மாணவர்கள் பள்ளிக்கு வராதது குறித்து அவர்களது பெற்றோர்களிடம் கேட்கையில், 'பிள்ளைகள் சுழற்சி முறையில் பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பதால், எப்போது செல்கிறார்கள், எப்போது அவர்களுக்கு விடுமுறை என்று எங்களுக்குத் தெரிவதில்லை. வாரத்தில் 6 நாள்களும் பள்ளி இருப்பதாக கூறிவிட்டு, நண்பர்களுடன் எங்காவது சென்று விடுகிறார்கள்' என்று கூறுகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலானோர் தினக் கூலிகள் என்பதால் அவர்களால் மாணவர்களைச் சரியாகக் கவனிக்க முடிவதில்லை. சுழற்சி முறை என்பதால் மீதமுள்ள விடுமுறை நாள்களில் வீட்டில் பள்ளிக்குச் செல்வதாகக் கூறி விட்டு, எங்காவது சென்று விடுகிறார்கள். எனவே, கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து கொண்டிருக்கும் இந்தச் சூழலில், பள்ளிக்கூடத்தில் ஒரு அறையில் 20 மாணவர்கள் என்றிருப்பதை 30 முதல் 35 மாணவர்கள் வரை என அமரவைக்க வேண்டும். அதேபோல், சுழற்சி முறையை படிப்படியாகக் குறைத்து, மாணவர்கள் நலன் கருதி சனிக்கிழமை அன்று வழக்கம் போல் விடுமுறை அளிக்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு