Published:Updated:

`விண்ணப்பத்தில் திரு... செல்வி எனக் குறிப்பிட்டால்..! - எச்சரிக்கும் மாணிக்கம் தாகூர் எம்.பி

``பெயருக்கு முன்பாக திரு அல்லது செல்வி என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால் திரு என்பதையும், செல்வி என்பதையும் பெயரின் ஒரு பகுதியாகவே டெல்லியில் உள்ள கல்லூரிகள் கருதுகின்றன.''

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர் ( ஆர்.எம்.முத்துராஜ் )

திரு.செல்வி எனப் பெயருக்கு முன் பயன்படுத்தப்படும் வார்த்தைகளால் டெல்லியில் உள்ள கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக மக்களவையில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் சில நாள்களுக்கு முன் பேசினார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
ஆர்.எம்.முத்துராஜ்

தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரை குறிப்பிடும் போது ஆணாக இருந்தால் பெயருக்கு முன்பாக திரு அல்லது செல்வன் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். பெண்ணாக இருந்தால் திருமதி அல்லது செல்வி போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். சாதிச்சான்றிதழ்களிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், டெல்லியில் உள்ள சில கல்லூரிகளில் இந்த வார்த்தைக்காக தமிழக மாணவர்களுக்கு கல்லூரியில் சேர அனுமதி கிடைக்கவில்லை. இது மாணவர்களுக்குக் கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சமீபத்தில் மக்களவையில் வலியுறுத்தி பேசினார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ``டெல்லியில் உள்ள கல்லூரிகளில் சேருவதற்காக தமிழக மாணவர்கள் ஓ.பி.சி சான்றிதழ் கொடுக்கின்றனர். அந்தச் சான்றிதழில் அவர்களின் பெயருக்கு முன்பாக திரு அல்லது செல்வி என்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. ஆனால், திரு என்பதையும், செல்வி என்பதையும் பெயரின் ஒரு பகுதியாகவே டெல்லியில் உள்ள கல்லூரிகள் கருதுகின்றன. எனவே, விண்ணப்பப் படிவத்திலோ, மற்ற சான்றிதழ்களிலோ திரு அல்லது செல்வி என்ற வார்த்தை இல்லை. ஆனால் ஓ.பி.சி சான்றிதழில் அந்த வார்த்தை உள்ளது எனக் கூறி தமிழக மாணவர்களை கல்லூரிகளில் அனுமதிக்க முடியாது எனக் கூறிவிடுகின்றனர்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
ஆர்.எம்.முத்துராஜ்

இதனால் அதிக மதிப்பெண் பெற்று டெல்லிக்குப் படிக்க வரும் தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.