Published:Updated:

‘தகுதியற்றவருக்கு ஆசிரியர் பணி; 10 ஆண்டுகளில் ரூ.40 லட்சம் சம்பளம்!’- ஆம்பூரில் 7 பேர் சிக்கினர்

ஆம்பூரில், தகுதியற்றவருக்குப் பட்டதாரி ஆசிரியர் பணி வழங்கியதாக 7 பேர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த ஆசிரியருக்கு, 10 ஆண்டுகளாக சம்பளம் வழங்கியதில் மட்டும் 40 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

வேலூர் மாவட்டம், ஆம்பூர் பி.கஸ்பா புதுமனை முதல் தெருவைச் சேர்ந்தவர், நரேந்திரன் மகன் சுரேந்திரகுமார் (35). வழக்கறிஞரான இவர், ஆம்பூர் கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமீபத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல்செய்தார். அதில், ‘‘ஆம்பூரில் உள்ள அரசு நிதியுதவிபெறும் ‘இந்து’ மேல்நிலைப் பள்ளியில் ஹேமமாலினி (45) என்பவர் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். 2010 ஆம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி, நேரடி நியமனம் மூலம் அவர் பணியமர்த்தப்பட்டார். அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2010 முதல் அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம்
பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம்

ஆனால், ஹேமமாலினி ‘டெட்’ தேர்வு எழுதுவதற்கே தகுதியற்றவர். அவரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, பட்டதாரி ஆசிரியராக நியமித்துள்ளனர். ‘ஆங்கில மொழிப் பாடத்தில் பட்டம் பெற்றவர்’ எனக்கூறிதான் அவரை பணியில் சேர்த்துள்ளனர். ஆனால், அவர் ஆங்கிலப் பாடத்தில் மூன்றாண்டு பட்டப்படிப்பை படிக்கவும் இல்லை. பட்டம் பெறவும் இல்லை. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் 1999-2002ல் ஓராண்டு பி.காம் மற்றும் 2002-2004ல் ஓராண்டு எம்.காம் பட்டப்படிப்பை முடித்துள்ளார். பிறகு, வாணியம்பாடியில் உள்ள வாணி கல்வியியல் கல்லூரியில் 2008-2009ல் வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியலை விருப்பப் பாடங்களாகக் கொண்டு பி.எட் படித்தார். 

இதே கல்வியாண்டில், மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகம் மூலம் பி.ஏ ஆங்கிலம் ஓராண்டு பட்டப்படிப்பை முடித்துள்ளார். ‘டெட்’ எழுதுவதற்கு இந்த ஓராண்டு படிப்பு தகுதி கிடையாது. இவற்றையெல்லாம் மறைத்துத்தான் ஹேமமாலினி ‘டெட்’ தேர்வு எழுதியிருக்கிறார். இந்த மோசடிக்கு, திருப்பத்தூர் கல்வி மாவட்ட அதிகாரிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு உடந்தையாகச் செயல்பட்டுள்ளனர். 2010 முதல் தற்போது வரை ஹேமமாலினிக்கு மோசடியாகச் சம்பளம் வழங்கியதில் மட்டும் சுமார் 40 லட்ச ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, போலி பட்டதாரி ஆசிரியர் ஹேமமாலினி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

முதல் தகவல் அறிக்கை
முதல் தகவல் அறிக்கை

அவரை பணிநியமனம் செய்வதற்கு ‘இந்து’ கல்விச் சங்க முன்னாள் செயலர் சுரேஷ்பாபு (55), திருப்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலராக இருந்து ஓய்வுபெற்ற ராஜமாணிக்கம் (65), திருப்பத்தூரிலிருந்து பணி மாறுதலாகிச் சென்ற பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலர் சாம்பசிவம் (55), திருப்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலகத்தில் பணியாற்றிவரும் எழுத்தர் பரமேஸ்வரி (45) மற்றும் கண்காணிப்பாளர் சிவக்குமார் (45), சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குநரக அலுவலகத்தில் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிவரும் கிரீணிவாசன் (45) ஆகியோர் கையூட்டு பெற்றுள்ளனர்.

இதுதொடர்பாக, கடந்த 13.5.2019 தேதியிட்ட பதிவுத் தபாலில் வேலூர் எஸ்பி அலுவலகத்துக்குப் புகார் அனுப்பினேன். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்கிறார்கள். இந்த முறைகேடு குறித்து, நான் மேற்குறிப்பிட்ட ஆசிரியர் ஹேமமாலினி உட்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். நீதிமன்றம் உடனே வழக்குப்பதிய, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது. 

வேலூர் எஸ்.பி அலுவலகம்
வேலூர் எஸ்.பி அலுவலகம்

இதையடுத்து, ஆசிரியர் ஹேமமாலினி உட்பட ஏழு பேர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, அது தொடர்பான முதல் தகவல் அறிக்கையை ஆம்பூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். மேலும், ஆசிரியர் ஹேமமாலினியிடமிருந்து விசாரணையைத் தொடங்கியிருப்பதாக காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள். இந்தச் சம்பவம், கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.