சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?
பிரீமியம் ஸ்டோரி
News
ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

34 ஆண்டுகளுக்குப் பிறகு, உருவாக்கப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

து.விஜயலெட்சுமி

அரசுப்பள்ளி ஆசிரியர், திருவண்ணாமலை மாவட்டம்

``ஏற்கெனவே நம் கல்விமுறையில் பெரிய பாகுபாடு இருக்கிறது. புதிய கல்விக்கொள்கை, அதைக்களைந்து சமவாய்ப்பு அளிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இது மேலும் பாகுபாட்டை அதிகப்படுத்துகிறது. நான் 20 ஆண்டுகளுக்குமேல் கிராமப்புறப் பள்ளிகளில் பணியாற்றிவருகிறேன். எட்டாம் வகுப்போ, பத்தாம் வகுப்போ ஃபெயிலானால் பெண்கள் பேன்ஸி ஸ்டோருக்கும், பையன்கள், அப்பா நடத்தும் தொழிலுக்கும் சென்றுவிடு்வார்கள். தொழிற்கல்வி என்ற பெயரில் அதிகாரபூர்வமாகவே அந்த நிலையை ஏற்படுத்துகிறார்கள்.”

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

செ.மணிமாறன்

அரசுப்பள்ளி ஆசிரியர், திருவாரூர் மாவட்டம்

``மாணவர்கள் பள்ளியில் 8 மணி நேரம்தான் இருக்கிறார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் விரும்பியதைக்் கற்றுக்கொள்கிறார்கள். பள்ளியில் தொழிலைக் கற்றுக்கொடுப்பது அவர்களை வெளியேற்றும் செயலாக மாறிவிடும். இப்போதிருக்கும் முறையில் மாணவர்கள் தொழிற்கல்வி படிக்க விரும்பினால் பத்தாம் வகுப்புக்குப் பிறகு, ஐ.டி.ஐக்கோ, பாலிடெக்னிக்குக்கோ செல்லலாம். எட்டாம் வகுப்பிலேயே அவர்களுக்குத் தொழிற்கல்வியைத் திணிப்பது நல்லதல்ல.”

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

சுடரொளி

அரசுப்பள்ளி ஆசிரியர், திருவள்ளூர் மாவட்டம்

``கல்வியில் இருக்கிற ஒட்டுமொத்தப் பிரச்னைகளையும் இந்தக் கல்விக்கொள்கை நன்கு ஆய்வு செய்திருக்கிறது. ஆனால், தீர்வாக முன்வைக்கும் விஷயங்கள் தான் குழப்பத்தை உருவாக்குகின்றன. குழந்தைப் பருவத்தில் பலமொழி களைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது நடைமுறைக்குப் பொருந்தாது. ஒரு ஆசிரியையாக இதை நான்அனுபவபூர்வமாக உணர்ந்தி ருக்கிறேன். பேச்சுமொழியாக எது இருக்கிறதோ அதை மட்டுமே குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்.”

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

பா.ராதாகிருஷ்ணன்

சிறப்பாசிரியர், சென்னை மாவட்டம்

``புதிய கல்விக்கொள்கை குழந்தைகள்மேல் மேலும் மேலும் தேர்வுகளைத் திணிக்கிறது. கல்வியென்பது பள்ளியில் வழங்கப்படுவது மட்டுமல்ல; சமூகத்திலும் பொது வெளியிலும் குழந்தைகள் நிறைய கற்றுக் கொள்கிறார்கள். அதையும் கருத்தில் கொள்ள வேண்டும். மாற்றுத் திறனாளி, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான கல்விகுறித்து இந்தக் கொள்கையில் தெளிவாகப் பேசப்படவில்லை.

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஸதி

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர், கோவை மாவட்டம்

``அங்கன்வாடியை வகுப்பறைக் கல்வியாக மாற்றுவது நல்ல விஷயம். மதிய உணவோடு சத்தான காலை உணவும் தரப்படும் என்கிறார்கள். இதனால் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் பாதிக்கப்படுவது குறையும். ஆசிரியர் நியமனத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிச்சுமை குறையும்.”

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

பிரியசகி

ஆசிரியர், சென்னை

“20 சதவிகிதம் குழந்தைகள் ஏதோவொரு கற்றல் குறைபாட்டோடு இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன. அந்தக் குழந்தைகளை அடையாளம் கண்டு மேம்படுத்துவது குறித்து கல்விக்கொள்கையில் விளக்கம் இல்லை. தரம்... தரம்... தரம் என்று பல இடங்களில் பேசப்படுகிறது. குழந்தைகளை ஒரே தரத்தில் உருவாக்குவது என்பதே சரியான அணுகுமுறை இல்லை. நகர்ப்புறத்தில் வசதியான குடும்பத்தில் இருக்கும் குழந்தையையும் பழங்குடி சமூகக் குழந்தையையும் ஒரே தராசில் வைப்பது நியாயமல்ல.”

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஈ.பாலகுருசாமி

முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம்

“ஐ.நா சபை, உலகப் பொருளாதார மன்றம் போன்ற அமைப்புகள் 21-ம் நூற்றாண்டில் இளைஞர்களுக்கு கிரியேட்டிவிட்டி, கிரிட்டிக்கல் திங்கிங் ஆகிய இரண்டு திறன்களும் அவசியம் என்று வலியுறுத்துகின்றன. ஆனால், இப்போதிருக்கும் நம் கல்விமுறை, மாணவர்களுக்கு இந்த இரண்டு திறன்களையும் வளர்க்கும் விதத்தில் இல்லை. அதனால்தான் நாம் கண்டுபிடிப்புகளில் பின்தங்கியிருக்கிறோம். இந்தக் கல்விக்கொள்கை அந்தத்திறன்களை வளர்க்கும் விதத்தில் பல திட்டங்களை வைத்திருக்கிறது.

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

இன்னும் 15 ஆண்டுகளில் பல்கலைக்கழக இணைப்பு என்பதே இருக்காது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 600 கல்லூரிகள் இருக்கின்றன. இந்தக் கல்லூரிகளைக் கண்காணிப்பது, ஆய்வு செய்வதென்றே பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் நேரம் போகிறது. ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடவே முடியவில்லை. தவிர, நிறைய முறைகேடுகளுக்கும் இந்த இணைப்பு வழிசெய்கிறது. அதனால், இந்தக் கல்விக்கொள்கை, கல்லூரிகளை தன்னாட்சி பெற்ற நிறுவனங்களாக மாற்றிவிட்டு பல்கலைக்கழகங்களை முழுமையாக ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்துகிறது. மும்மொழிக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்ப்பது துரதிர்ஷ்டம். உலகமே, சிறு கிராமமாகச் சுருங்கிவிட்ட காலத்தில் பல மொழிகளைக் கற்றுக்கொள்வது மிகவும் நல்லது.”

ஆசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்?

பிரேம்ஆனந்த் சேதுராஜன் கல்வியாளர்

“புரிந்து படிக்கும் தன்மை நம் கல்விமுறையில் இல்லை. அதனால்தான் தொழிற்கல்வியைக் கொண்டு வருகிறார்கள். இதை நான் வரவேற்பேன். காரணம், எனக்கே இதில் நிறைய அனுபவங்கள் உண்டு. பள்ளி விடுமுறை நாள்களில் என் தந்தை எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களைச் சரிசெய்்யும் கடையில் கொண்டுபோய் விடுவார். அங்கு கிடைத்த அனுபவங்கள்தான் பின் என் கரியரைத் தேர்வுசெய்ய உதவின. இந்தத் தொழிற்கல்வியால் கொஞ்சம் மாணவர்கள் கல்வியிலிருந்து இடைநிற்க வாய்ப்பு இருக்கவே செய்கிறது. அதை எப்படிச் சரிசெய்வது என்றுதான் பார்க்கவேண்டும். 9-ம் வகுப்பில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களைத் தேர்வு செய்வதும் நல்ல விஷயம். ஆனால், அந்த வயதில் விருப்பப் பாடங்களைத் தேர்வுசெய்யும் வகையில் தகுதிப்படுத்த வேண்டும். இது மிகவும் சவாலான விஷயம்தான். ப்ளஸ்டூவுக்குப் பிறகு உயர்கல்விக்குப் பொது நுழைவுத்தேர்வு என்பதை நான் எதிர்ப்பேன். எல்லோருக்கும் சமமான கல்வியை எப்போது கொடுக்கிறோமோ அப்போதுதான் அதுகுறித்து சிந்திக்கவேண்டும். ஆராய்ச்சியை ஊக்கப்படுத்த 4 ஆண்டு பட்டப்படிப்புகளைக் கொண்டு வருவதும் முக்கியமானது. ஆவணமாக இதில் நிறைய நல்ல விஷயங்களைப் பார்க்கிறேன். இதை எப்படிச் செயல்படுத்தப்போகிறோம் என்பதில்தான் மாற்றம் அடங்கியிருக்கிறது.

புதிய கல்விக்கொள்கை பற்றிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்களின் விரிவான கருத்துகளைப் படிக்க https://bit.ly/NEPOpinion என்ற லிங்கை கிளிக் பண்ணுங்க!