Published:Updated:

`கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்கும் சூரப்பா!'- அண்ணா பல்கலைக்கழக 16 இயக்குநர்களுக்கு கெடு

எஸ்.மகேஷ்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து ஒவ்வொரு துறைக்கும் கொடுக்கப்பட்ட பணத்துக்கு 16 இயக்குநர்கள் கணக்குக் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவரும் ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சிகரமாகவே இருந்துவருகிறது. தேர்வு முறைகேடு, ஊழல் என அடுத்தடுத்த குற்றச்சாட்டுக்களில் அண்ணா பல்கலைக்கழகம் சிக்கிவருகிறது. தற்போது 16 இயக்குநர்கள் மீதான தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற நிதிக்கு கணக்குகளைச் சமர்ப்பிக்காத 16 துறை இயக்குநர்களுடன் துணைவேந்தர் சூரப்பா சமீபத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, ஒரு மாதத்துக்குள் கணக்குகளைச் சமர்ப்பிக்க அவர் கெடு விதித்துள்ளார்.

துணைவேந்தர் சூரப்பா
துணைவேந்தர் சூரப்பா

இதுகுறித்து நம்மிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர், ``அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒவ்வொரு துறைக்கும் ஆண்டுதோறும் நிதி வழங்கப்படுவது வழக்கம். கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து 2018-ம் ஆண்டு மார்ச் வரை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடம் காலியாக இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டார். துணைவேந்தர் இல்லாததால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்தக் கமிட்டியில் அப்போதையை உயர்கல்வித் துறை செயலாளர் அப்போதைய பதிவாளர், டீன், ஐ.ஏ.எஸ். அதிகாரி என 4 பேர் இருந்தனர். இந்தக் குழு மூலம் பல்கலைக்கழகம் நிர்வகிக்கப்பட்டது. அப்போது பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகளுக்குத் தேவையான நிதி, துறை இயக்குநர்களுக்கு வழங்கப்பட்டன. திட்ட மதிப்பீடு அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

நிதியைப் பெற்ற துறை இயக்குநர்களில் சிலர் மட்டுமே அதற்குரிய கணக்கை சமர்ப்பித்துள்ளனர். பெரும்பாலான இயக்குநர்கள் கணக்குகளைச் சமர்ப்பிக்கவில்லை. குறிப்பாக 16 துறை இயக்குநர்கள், பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற நிதிக்கான செலவுக் கணக்கை சமர்ப்பிக்காமல் இழுத்தடித்து வரும் தகவல் துணைவேந்தர் சூரப்பாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட துறை இயக்குநர்களை அழைத்து அவர் ஆலோசனை நடத்தினார். அதில், பல்கலைக்கழகத்திலிருந்து கொடுக்கப்பட்ட நிதி குறித்த கணக்குகளை ஏன் இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்று கேள்வி கேட்டுள்ளார். மேலும், ஒரு மாதத்துக்குள் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று கெடுவிதித்துள்ளார். தவறும்பட்சத்தில் துறை இயக்குநர்களின் சம்பளத்திலிருந்து பணம் பிடித்தம் செய்யப்படுவதோடு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார்" என்றனர்.

கணக்குகளைச் சமர்ப்பிக்காத சில இயக்குநர்களின் பின்னணி

கணக்குகளைச் சமர்ப்பிக்காத 16 துறை இயக்குநர்களில் 5 பேர் ஓய்வுபெற உள்ளனர். மேலும், பல்கலைக்கழகத்தில் பிரபலமான விநாயகா பிரதர்ஸ் டீமைச் சேர்ந்த சில இயக்குநர்கள் கணக்குகளைச் சமர்ப்பிக்கவில்லை.

பல்கலைக்கழகத்தில் நடந்த வேறு குற்றச்சாட்டுக்காக இந்த இயக்குநர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னொருவர், ஐ.ஐ.டி-யில் பிஹெச்.டி முடித்தவர். இவர் வேலைக்குச் சேர்ந்தது தொடர்பாக விஜிலென்ஸ் விசாரணை வளையத்துக்குள் சிக்கியவர். இவரும் துணைவேந்தரும் ஐ.ஐ.டி என்பதால், அவர் மீதான குற்றச்சாட்டுகளை துணைவேந்தர் அலுவலகத்தில் கண்டுகொள்ளப்படுவதில்லை.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

பல்கலைக்கழகத்தின் முக்கியப் பதவியில் இருந்த இவரின் பதவி பறிக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே அவருக்கு இயக்குநர் பதவி வழங்கப்பட்டது. அவரும் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்ற நிதிக்கான கணக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. போதையின் பெயரை முதல் எழுத்தாக கொண்ட இயக்குநர் ஒருவரும் கணக்குகளைச் சமர்ப்பிக்காத இயக்குநர் பட்டியலில் உள்ளார்.

பல்கலைக்கழகத்தில், மைதானத்தில் மணல் கொட்டிய முறைகேட்டில் சிக்கிய இயக்குநர்கள் இருவரும் கணக்குகளை சமர்ப்பிக்கவில்லை. இதில் ஒருவர் மீது ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்கள் இருந்தபோதிலும் சிலரால் அவர் காப்பாற்றப்பட்டுவருகிறார். பெண் இயக்குநர் ஒருவரும் கணக்குகளைச் சமர்ப்பிக்கப்படவில்லை. இவரும் பல்கலைக்கழகத்தில் இரண்டு முக்கியப் பதவியில் இருந்துவருகிறார். இவர் சார்ந்துள்ள துறையின் ஊழல் விவகாரம் விரைவில் வெளிவரவுள்ளது.

துணைவேந்தர் சூரப்பா
துணைவேந்தர் சூரப்பா

துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதிலிருந்து அமைச்சர் தரப்புக்கும் சூரப்பாவுக்கும் ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. இதனால் துணைவேந்தர் சூரப்பா குறித்த தகவல்கள் உடனுக்குடன் அமைச்சர் அலுவலகத்துக்கு தெரிவிக்க ஒரு டீம் செயல்பட்டுவருகிறது. அந்த டீமுக்கு துணைவேந்தர் அலுவலகத்தில் உள்ள பெண் ஒருவர் உறுதுணையாக உள்ளார். இதனால் அவரையும் இடமாற்ற துணைவேந்தருக்கு ஒரு தரப்பு ரிப்போர்ட் கொடுத்துள்ளது. இருப்பினும் துணைவேந்தர் அமைதியாக இருப்பதாகத் அந்தத் தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

துணைவேந்தர் சூரப்பாவுக்கு தமிழ் தெரியாததால் சில தகவல்கள் அவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை. எனவே, புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் (பொறுப்பு) கருணாமூர்த்தி, கறைபடிந்தவர்கள் குறித்த தகவல்கள், செய்திகளை துணைவேந்தர் சூரப்பாவின் கவனத்துக்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.