Election bannerElection banner
Published:Updated:

இனி கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு... இதன் பின்னணி என்ன?!

நுழைவுத் தேர்வு | Entrance Exams
நுழைவுத் தேர்வு | Entrance Exams

செவிலியர், உயிரி அறிவியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் கலை, அறிவியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு குறித்த இந்த அறிவிப்பு மேலும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

நாடு முழுவதும் கலை, அறிவியல் படிப்புகள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்விப் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (AICTE) தலைவர் அனில் சகஸ்புரத்தே தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கையின்படி அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்ற திட்டத்தை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அனில் சகஸ்புரத்தே | Anil Sahasrabudhe
அனில் சகஸ்புரத்தே | Anil Sahasrabudhe

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே கடந்த ஐந்து ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், 2021-2022 கல்வியாண்டு முதல் இளங்கலை செவிலியர், இளங்கலை உயிரி அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பே கடும் விமர்சனங்களைக் கிளப்பியிருந்த நிலையில் கலை, அறிவியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு குறித்த இந்த அறிவிப்பு மேலும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

இனி நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்... பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கண்டனம்!

புதிய கல்விக் கொள்கையின் வரலாறு என்ன?

முதன்முதலில் 1968-ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின் 42-வது திருத்தத்தின்படி, 1976-ம் ஆண்டு பொதுப்பட்டியலில் கல்வி சேர்க்கப்பட்டது. பின்னர், 1986-ம் ஆண்டிலும், 1992-ம் ஆண்டிலும் கல்விக் கொள்கைத் திருத்தப்பட்டது. 2016-ம் ஆண்டு டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் குழுவானது கல்விக் கொள்கையில் சில திருத்தங்களைச் செய்தது. பிறகு, 2017-ம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழுவால் தயாரிக்கப்பட்ட ‘புதிய கல்விக் கொள்கை’க்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.

கலை, அறிவியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு குறித்து சமூகக் கல்வியாளர் நெடுஞ்செழியனிடம் பேசினோம்.

“இந்தியாவில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 26.3 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள சுமார் 73 சதவீத குழந்தைகள் உயர்கல்வியை எட்டுவதில்லை. உயர்கல்விக்கான வாய்ப்புகளை அரசியல் வர்க்கம் உருவாக்கித் தருவதில்லை; மாறாக இருக்கும் வாய்ப்புகளையும் காலி செய்வதுதான் அவர்கள் திட்டம். குழந்தைகள் படிக்கக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். படித்தால் கேள்வி கேட்பார்கள், கேள்வி கேட்டால் அரசியல் செய்ய முடியாது. எனவே, அரசியல் வர்க்கத்தின் எண்ணங்கள் எல்லாம் உயர்கல்விக்கான வாய்ப்புகளைச் சிக்கலாக்குவதிலேயே உள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, வேறு எங்கும் இல்லாத வகையில் முன்னேறுவதற்குத் தேவையான மனிதவளம் இந்தியாவில் இருக்கிறது. ஆனால், அதை மூலதனமாக்குவதற்கான வழிகளை அரசு உருவாக்கவில்லை” என்று பிரச்னையின் அடிப்படையை விளக்குகிறார்.

மேலும், “எல்லாவற்றுக்கும் நுழைவுத் தேர்வுகளைக் கொண்டுவருகிறார்கள்; ஆனால் அரசியலுக்கு மட்டும் நுழைவுத் தேர்வு கிடையாது. தேர்தலில் நிற்கும் ஒருவருக்கு அரசியலமைப்பு குறித்த புரிதல், சமூக விழிப்புணர்வு, உலகளாவிய சிந்தனை போன்றவை இருக்கின்றனவா என்பதை அறிய நுழைவுத் தேர்வு ஏன் கூடாது? இவை பற்றிய புரிதல் இல்லாத அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுப்பதன் விளைவுதான், இதுபோன்ற கொள்கைகள் உருவாவதற்குக் காரணம் என்பது என்னுடைய கருத்து” என்கிறார் நெடுஞ்செழியன்.

கல்வியாளர் நெடுஞ்செழியன்
கல்வியாளர் நெடுஞ்செழியன்

தொடர்ந்து பேசிய அவர், “உடனே, அன்றைய தலைவர்கள் எல்லோரும் படித்தவர்களா என்ற கேள்வி எழலாம். அப்போது நாடும், தலைவர்களும் இருந்த சூழல் வேறு. நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் எல்லா தலைவர்களுக்கும் இருந்தது. அன்றைக்கு இத்தனை தகவல்கள், வசதிகள் இல்லாத காலகட்டத்தில் அவர்களின் உலகப் பார்வை அவ்வளவு ஆழமாக, விரிவாக இருந்தது. அதுவே இந்தியாவை வளர்ச்சியை நோக்கிச் செலுத்தியது. ஆனால், காலப்போக்கில் அந்த வளர்ச்சி எல்லாம் தேக்கநிலையை அடைந்திருக்கிறது. மருத்துவக் கல்விக்கு நுழைவுத்தேர்வு அவசியம் என்றால், அதைவிட முக்கியமான நாட்டைக் காப்பாற்றும் பொறுப்புக்கு நுழைவுத் தேர்வு அவசியம் இல்லையா? விண்வெளி ஆராய்ச்சியில் நாம் எவ்வளவுதான் சாதித்தாலும், அதைக் கொண்டாடக் கூடிய அளவுக்கு, அரசியல், அறிவியலையோ, கல்வியையோ புரிந்துகொள்ளவில்லை,” என்றார்.

“சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்குத் தேர்வு நடத்துவதைவிட, அந்தக் குழந்தைக்குக் கல்வியைக் கொடுப்பதுதான் கொள்கையில் முதன்மையாக இருக்க வேண்டும். உயர்கல்வி சேர்க்கை விகிதம் 26 சதவீதம் மட்டுமே இருக்கும் நிலையில், அதை எப்படி மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்தாமல், இருக்கும் வாய்ப்புகளை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை அரசியல் வர்க்கம் மேற்கொண்டிருக்கிறது. அனைத்திந்திய நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்குக்கூட பெரும்பாலான குழந்தைகளிடம் பணம் கிடையாது; நகரத்துக்கு வந்து தேர்வு எழுதுவதற்கு, எழுதாமலேயே தவிர்த்துவிடுவார்கள். நுழைவுத் தேர்வு என்ற பெயரில் குழந்தைகளிடம் அச்சத்தை உருவாக்குகிறார்கள்,” என்று இந்த நுழைவுத் தேர்வுகள் குழந்தைகளிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நெடுஞ்செழியன் கூறுகிறார்.

கல்லூரி மாணவர்கள்
கல்லூரி மாணவர்கள்

“தேர்தல் வரும்போது அதைத் தருகிறோம், இதைத் தருகிறோம் என்கிறார்கள். அவை எதுவுமே வேண்டாம். கல்வி, மருத்துவம், கட்டமைப்பு, சுற்றுச்சுழல் ஆகிய நான்கை மட்டும் இலவசமாகக் கொடுக்க வேண்டும். மற்றவற்றுக்குச் செலவழிக்கும் நிதியை இதற்குச் செலவழிக்கலாம். கல்வி கொடுத்தால் இலவசம் எதுவும் தேவையில்லை. ‘கேடில் விழுச் செல்வம் கல்வி’. எல்லா செல்வத்தையும் அழிக்க முடியும்; கல்விச் செல்வத்தை அழிக்க முடியாது. இந்த ஒரு செல்வத்தைக் கொடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். மக்களிடம் இதைப் புரிந்துகொண்டு கேள்வி கேட்கக் கூடிய தன்மை, சுயமாகச் சிந்திக்கும் தன்மை ஆகியவற்றை இழக்க வைத்துவிட்டார்கள். இதன் பின்விளைவுகள் நீண்ட காலத்தில் சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் எச்சரிக்கிறார் நெடுஞ்செழியன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு