Published:Updated:

அரசுப் பள்ளிகள் மூடல்; மாணவர் சேர்க்கை குறைவு - அன்பில் முன்பிருக்கும் சவால்கள் என்னென்ன?!

அமைச்சர் அன்பில் மகேஸ்

அடிப்படை வசதிகள் குறைவு உள்ளிட்ட காரணங்களால், கடந்த 15 ஆண்டுகளில் 40 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

அரசுப் பள்ளிகள் மூடல்; மாணவர் சேர்க்கை குறைவு - அன்பில் முன்பிருக்கும் சவால்கள் என்னென்ன?!

அடிப்படை வசதிகள் குறைவு உள்ளிட்ட காரணங்களால், கடந்த 15 ஆண்டுகளில் 40 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன என்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
அமைச்சர் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. அரசுப் பள்ளிகளில் போதுமான உள்கட்டுமான வசதிகள் இல்லாதது, ஆசிரியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம்காட்டுகின்றனர்.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

ஒருபுறம் கட்டணம் அதிகமாக இருந்தாலும்... வகுப்பறைகள் வசதியாக இருப்பதாலும், போதுமான ஆசிரியர்கள் இருப்பதாலும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதையே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். இதனால், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றன. அதேநேரத்தில், அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு பிரச்னையால் பலர் வாழ்வாதாரங்களை இழந்தனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள், தனியார் பள்ளிகளில் படித்துவந்த தங்கள் குழந்தைகளுக்குக் கட்டணம் கட்ட வழியில்லாததால், தனியார் பள்ளிகளிலிருந்து டி.சி வாங்கி, அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்தனர். இப்படி, சில லட்சம் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைமீதான விவாதத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துவருவதாகத் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
சட்டமன்றத்தில் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மேலும், ``அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47 லட்சத்திலிருந்து 53 லட்சமாக உயர்ந்திருக்கிறது. ஆறு லட்சம் பேர் அரசுப் பள்ளிகளைத் தேடிவரும் சூழல் உருவாகியிருக்கிறது” என்று அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். மேலும், சிறந்த தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது ஆண்டுதோறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தொல்லியல்துறை வாயிலாக ஆயிரம் ஆசிரியர்களுக்கு மூன்று கோடி ரூபாய் செலவில் பயிற்சி வழங்கப்படும் என்பது உட்பட பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அதேநேரத்தில், பல அரசுப் பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை மோசமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் 22 பள்ளிகளில் ஒரு மாணவர்கூட இல்லை என்றும், 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் பயில்கின்றனர் என்றும் தகவல் வெளியானது. ஒரு மாணவர் மட்டும் 11 பள்ளிகளிலும், 2 மாணவர்கள் 24 பள்ளிகளிலும், 3 மாணவர்கள் 41 பள்ளிகளிலும், 4 மாணவர்கள் 50 பள்ளிகளிலும், 5 மாணவர்கள் 77 பள்ளிகளிலும் இருக்கின்றனர் என்றும், 114 பள்ளிகளில் 6 மாணவர்களும், 95 பள்ளிகளில் 7 மாணவர்களும், 104 பள்ளிகளில் 8 மாணவர்களும், 153 பள்ளிகளில் 9 மாணவர்கள் மட்டுமே படித்துவருவதாகவும் செய்தி வெளியானது.

அரசுப் பள்ளி மாணவிகள்
அரசுப் பள்ளி மாணவிகள்

சென்னை, எழும்பூரில் செயல்பட்டுவரும் டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அந்தப் பள்ளியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 700 குழந்தைகள் வரை படித்திருக்கிறார்கள். தற்போது, 40 மாணவர்கள் மட்டுமே அங்கு படிக்கிறார்கள். அங்கு கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் இருப்பதாகக் காரணம் சொல்லப்படுகிறது.

இன்னொருபுறம், ஆசிரியர் பற்றாக்குறை என்பது பெரிய பிரச்னையாக இருக்கிறது. இதில், ஓராசிரியர் பள்ளி என்கிற பல ஆண்டுக்காலப் பிரச்னை இன்னும் தீர்வுகாணப்படாமலேயே இருக்கிறது. தமிழ்நாட்டில் 3,800 ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன. 3,131 பள்ளிகளில் 60 மாணவர்கள் வரை இருந்தும் தலைமை ஆசிரியர் மட்டுமே ஐந்து வகுப்புகளுக்கான பாடங்களை நடத்தும் நிலை இருக்கிறது.

அரசுப் பள்ளி
அரசுப் பள்ளி

இந்தச் சூழலில், கடந்த 15 ஆண்டுகளில் 40 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாக ஓர் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. அடிப்படை வசதிகள் குறைவு போன்ற காரணங்களால் 22 தொடக்கப் பள்ளிகள், 18 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 40 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது.

இந்தத் தகவல், அரசுப் பள்ளிகள் பலப்படுத்தப்பட வேண்டும், சிறந்த பள்ளிகளாக அவை உருவாக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருப்போர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் பல துறைகளின் அமைச்சர்கள் அடிக்கடி பந்தாடப்பட்டார்கள். பள்ளிக்கல்வித்துறையில், 10 ஆண்டுகளில் பலபேர் அமைச்சர்களாக மாற்றப்பட்டனர். இதைவைத்தே, பள்ளிக்கல்வித்துறை எந்த அளவுக்கு பாதிப்புகளைச் சந்தித்திருக்கும் என்பதை யாராலும் யூகிக்க முடியும் என்கிறார்கள்.

இந்தப் பிரச்னைகளையெல்லாம் முற்றிலும் உணர்ந்தவர், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. பத்தாண்டுக்கால பாதிப்புகளைச் சரிசெய்து, அரசுப் பள்ளிகளைப் பலப்படுத்தவேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. அந்த வகையில், அவர் முன்பாக பல சவால்களும் இருக்கின்றன. கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உறுதிசெய்வது முக்கியம். தரமான, போதுமான கட்டட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பல அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அமர்வதற்கு பெஞ்ச் இல்லை. அது போன்ற குறைகள் தீர்க்கப்பட வேண்டும். முக்கியமாக, ஓராசிரியர் பள்ளிகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும், அனைத்துப் பாடங்களுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்கள், தற்காலிக ஆசிரியர்களாக இல்லாமல், நிரந்தர ஆசிரியர்களாக இருக்க வேண்டும் என்பது கல்விமீது அக்கறைகொண்ட அனைவரின் விருப்பமாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.