Published:Updated:

சத்துணவுத் திட்டத்தின் வரலாறு... `அட்சய பாத்ரா’வின் ஆளுநர் மாளிகை உதயம்... சர்ச்சைகளும் விளக்கமும்! #NotToMiss

அட்சய பாத்ரா

`அட்சய பாத்ரா' அமைப்புக்குச் சென்னை க்ரீம்ஸ் சாலையில் 20 ஆயிரம் சதுர அடி நிலமும், பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் 35 ஆயிரம் சதுர அடி நிலமும் சமையல் கூடம் கட்டுவதற்காக ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. `இது சத்துணவுத் திட்டத்தைத் தனியார்மயப்படுத்தும் முயற்சி' என சர்ச்சை எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்குக் காலை உணவு வழங்குவதற்காக 'அட்சய பாத்ரா' என்ற தனியார் நிறுவனத்திற்கு நிதியும், நிலமும் அளித்திருக்கிறது தமிழக அரசு. 2019-ம் ஆண்டு, 'அட்சய பாத்ரா' நிறுவனத்தின் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். கடந்த ஆண்டு முதல், 5 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கி வந்த 'அட்சய பாத்ரா' நிறுவனம் தற்போது தனது திட்டத்தை விரிவு செய்துள்ளது.

"நாக்பூர், கவுஹாதி முதலான நகரங்களில் அட்சய பாத்ரா நிறுவனத்தின் சேவையையும், கடந்த 20 ஆண்டுகளாக அவர்களின் பணிகளைக் கவனித்து வருவதாலும், இந்தத் திட்டத்தைச் சென்னை மாநகராட்சியில் அமல்படுத்துகிறோம்" என்று விழா நிகழ்வில் பேசினார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். மேலும் அவர், "எனக்கு கல்வியின் மீது நம்பிக்கை இருக்கிறது; குறிப்பாக அடித்தட்டு சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வியில் நம்பிக்கை இருக்கிறது. அவர்களுக்கு உதவுவதற்காக கடவுள் அளித்த வாய்ப்பாக, இந்தத் திட்டத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறேன்" என்று கூறினார்.

அட்சய பாத்ரா நிகழ்ச்சி
அட்சய பாத்ரா நிகழ்ச்சி
DIPR
`தொடக்கம் தந்த சென்னை ; குரலற்றவர்களின் குரல்!’ - நீதியரசர் முரளிதரின் பின்னணி

சமூகத்தில் சாதியின் பெயரால் கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு வரவழைப்பதற்காகவும் கல்வி அளித்து அவர்களை முன்னேற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது சத்துணவுத் திட்டம். இந்தியாவுக்கே முன்னோடியான இந்த மதிய உணவுத் திட்டத்தின் வரலாறு, தமிழ்நாட்டில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. இந்தத் திட்டத்திற்கான முன்னோடிகளாக விளங்கியது நீதிக்கட்சி. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1925ஆம் ஆண்டு, இந்தத் திட்டத்தை அமல்படுத்தினார் சிங்காரவேலர். பிற்காலத்தில் காமராஜர் ஆட்சிக்காலத்தில் 'மதிய உணவுத் திட்டம்' என்று விரிவுபடுத்தப்பட்டு, 1982ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் 'சத்துணவுத் திட்டம்' என்று தனித்துறையாகச் செயல்படத் தொடங்கியது இந்தத் திட்டம்.

பின்னாள்களில் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், இந்தத் திட்டத்தில் முட்டை சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஜெயலலிதாவின் ஆட்சியில், கலவை சாதமாகவும், முட்டையில் வெவ்வேறு வகை உணவாகவும் இது மாற்றம் செய்யப்பட்டது. தற்போது 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்' என்ற பெயரில் இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.

2001ஆம் ஆண்டு, பி.யு.சி.எல் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தது. அதன்படி, இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள சட்டப்பிரிவு 21-ன் படி, 'வாழ்வுரிமை' என்பதன் கீழ், 'உணவுக்கான உரிமை' என்பதும் வருகிறது. அதனால், குழந்தைகளுக்குக் கல்வியோடு உணவும் அளிக்கப்பட வேண்டும் எனக் கோரியது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பில் நடைமுறைபடுத்தப்பட்டது.
சத்துணவுத் திட்டம்
சத்துணவுத் திட்டம்
Vikatan Infographics
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ.5 கோடி நிதி அளித்து இருக்கின்றார். இவ்வாறு அரசு பணத்தை ஒரு தனியார் அமைப்பிற்கு அள்ளிக்கொடுக்கும் அதிகாரம், ஆளுநருக்கு இருக்கின்றதா?
வைகோ

தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மதிய உணவாக சத்துணவு வழங்கப்பட்டு வரும் சூழலில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் அறிவிக்கப்பட்டு, தனியார் நிறுவனமாக 'அட்சய பாத்ரா' அமைப்பிடம் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த பிப்ரவரி 15 அன்று, சென்னையில் 'அட்சய பாத்ரா' நிறுவனத்தின் சமையல் கூடத்திற்கான பூமி பூஜையைத் தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

சென்னை க்ரீம்ஸ் சாலையில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி நிலமும், பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் சுமார் 35 ஆயிரம் சதுர அடி நிலமும் இந்த நிறுவனத்திற்குச் சமையல் கூடம் கட்டுவதற்காக ஒதுக்கியுள்ளது தமிழக அரசு. மேலும், இந்த சமையல் கூடத்திற்கான குடிநீர், மின் இணைப்பு, மின்சாரம் முதலான செலவுகளையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த அறிவிப்பு பல்வேறு தரப்பினரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது. ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்குக் காலை சத்துணவு கொடுக்கும் திட்டத்தை, தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கின்றது. ஆனால், இந்தத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு நடத்தப்போவது இல்லை. அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தை நடத்தி வருகின்ற இஸ்கான் என்ற இந்துத்துவ அமைப்பிடம் இதை ஒப்படைத்து விட்டார்கள். அதற்காக, சென்னை மாநகரின் மையமான கிரீம்ஸ் சாலையில் 20,000 சதுர அடி, பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் 35,000 சதுர அடி நிலத்தை, அந்த அமைப்பிற்கு அரசு தாரை வார்த்துக் கொடுத்து விட்டது. இந்த இடங்களின் மதிப்பு, இன்றைய நிலையில் 500 கோடிக்கும் மேலாகும். இந்தத் திட்டம் குறித்து தமிழக அரசு எந்த முன்னறிவிப்பும் வெளியிடவில்லை. வேறு அமைப்புகள் விண்ணப்பம் தர எந்த வாய்ப்பும் அளிக்கவில்லை. எல்லாமே ரகசியமாகவே நடைபெற்று இருக்கின்றது. இது சட்டத்திற்கு எதிரானது. யாருடைய கட்டாயத்திற்கோ எடப்பாடி அரசு அடிபணிந்து இருக்கின்றது" என்று கடுமையாக தமிழக அரசை விமர்சித்துள்ளார்.

வைகோ
வைகோ
Rajya Sabha TV

மேலும் அவர், "தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ.5 கோடி நிதி அளித்து இருக்கின்றார். இவ்வாறு அரசு பணத்தை ஒரு தனியார் அமைப்பிற்கு அள்ளிக்கொடுக்கும் அதிகாரம், ஆளுநருக்கு இருக்கின்றதா? லட்சக்கணக்கான சத்துணவுப் பணியாளர்களின் உழைப்பில் வெற்றிகரமாகச் செயல்பட்டு, இன்று இந்தியாவுக்கே வழிகாட்டிக்கொண்டு இருக்கின்ற தமிழக சத்துணவுத் திட்டத்தை, முழுமையும் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான தொடக்கம்தான், இந்தப் புதிய திட்டம்" என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

யார் இந்த 'அட்சய பாத்ரா' அமைப்பு?

'உலகின் மிகப்பெரிய லாபம் ஈட்டாத மதிய உணவுத் திட்டம்' என்று தங்களைப் பற்றிய அறிமுகத்தில் குறிப்பிட்டுள்ளது 'அட்சய பாத்ரா'. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் ஏறத்தாழ 13 ஆயிரம் பள்ளிகளில், ஏறத்தாழ 17 லட்சம் குழந்தைகளுக்கு உணவளிக்கிறது இந்த நிறுவனம். இந்து மதத்தையும், கிருஷ்ணரையும் உலகம் முழுவதும் 'ஹரே கிருஷ்ணா' என்ற பெயரில் பரப்புரை செய்யும் இஸ்கான் இயக்கத்தின் பிரிவாகச் செயல்படுகிறது அட்சய பாத்ரா அமைப்பு. கிருஷ்ணர், கீதை, சைவ உணவுப் பழக்கம் முதலானவற்றை மக்களிடம் பரப்பும் இந்த இயக்கம், அமெரிக்காவிலிருந்து செயல்படுகிறது. சங்கராச்சாரியர்களுள் ஒருவரான சுவாமி ஸ்வரூபானந்தா, 2016ஆம் ஆண்டு, "இஸ்கான் கிருஷ்ண பக்தி என்ற பெயரில் வெளிநாடுகளில் மதமாற்றத்தில் ஈடுபடுகிறது; இந்தியர்களின் கறுப்புப் பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி, வெள்ளைப் பணமாக மாற்றி வருகிறது" என்று இந்த அமைப்பு குறித்து கூறியிருந்தார்.

அட்சய பாத்ரா
அட்சய பாத்ரா

'அட்சய பாத்ரா' அமைப்பின் அறங்காவலர்களாக 'இஸ்கான்' அமைப்பைச் சேர்ந்த மது பண்டிட் தாஸா, சஞ்சலபதி தாஸா முதலானோருடன் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும் உள்ளனர். மணிபால் பல்கலைக்கழகக் குழுமத்தின் தலைவரான மோகன்தாஸ் பாய், எக்ஸ்ஃபினிட்டி குழுமத்தின் நிறுவனர் பாலகிருஷ்ணன், ப்ளேங்க் லேப்ஸ் குழுமத் தலைவர் ராஜ் கொண்டூர் முதலானோர் உள்ளனர்.

மேலும், இந்த அமைப்பின் ஆலோசகர்களாக முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ராஜேந்திர பாபு, இன்ஃபினிட்டி தொழில்நுட்பக் குழுமத்தின் தலைவர் ரவீந்திர சமர்லா, ஜிண்டால் குழுமத்தின் சங்கீதா ஜிண்டால், கோகல்தாஸ் ஏற்றுமதி நிறுவனங்களின் முன்னாள் தலைவர் ராஜேந்திர ஹிந்துஜா, நாராயணா மருத்துவமனைக் குழுமங்களின் நிறுவனர் தேவி ஷெட்டி, சிஸ்கோ சிஸ்டம்ஸ் குழுமத்தின் ஷன்னு காவ், ஜனாகிரஹா இயக்கத்தின் நிறுவனர் ரமேஷ் ராமநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அட்சய பாத்ரா அமைப்பு கடந்த ஆண்டு ஏறத்தாழ 170 கோடி ரூபாய் நன்கொடையாகவும், தான் உணவு அளிக்கும் மாநில அரசுகளின் மானியமாக ஏறத்தாழ 204 கோடி ரூபாய் பணமும் வருவாயாகப் பெற்றுள்ளது. ஒரு மாணவரின் ஒரு வேளை உணவுக்கு இந்த நிறுவனம், 11.42 ரூபாய் செலவு செய்கிறது. இதில் 5.63 ரூபாய் அரசு மானியமாகப் பெறப்படுகிறது. முட்டை, வெங்காயம், பூண்டு முதலான சமையல் பொருள்கள் இல்லாமல் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தை விட அதிக பணம் செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்சய பாத்ரா அமைப்பு
அட்சய பாத்ரா அமைப்பு

'அட்சய பாத்ரா' - சர்ச்சைகள்!

இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் இந்த நிறுவனத்தின் கடந்த கால வரலாறு பல்வேறு சர்ச்சைகளை உள்ளடக்கியது. உணவில் பூண்டு, வெங்காயம் முதலானவற்றைச் சேர்த்துக்கொள்வதில்லை என்ற அடிப்படையில் இந்த அமைப்பின் உணவு சமைக்கப்படுவதால் கர்நாடகத்தில் மாணவர்களுக்குச் சுவையில்லாத உணவு பரிமாறப்படுகிறது எனவும், அதை மாணவர்கள் குப்பையில் கொட்டுவிடுவதாகவும், 2018ஆம் ஆண்டில் சர்ச்சை எழுந்தது. மேலும், குழந்தைகள் மீது தங்கள் தனிப்பட்ட மத நம்பிக்கையை உணவுப் பழக்கம் மூலம் விதிப்பதாகவும் கூறப்பட்டது.

கர்நாடகாவில் சர்ச்சை வெடித்ததால், அட்சய பாத்ரா அமைப்பின் உணவு தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்திற்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு முடிவுகளில், அட்சய பாத்ரா அமைப்பின் உணவுகளில் போதிய ஊட்டச்சத்துகள் இருப்பதாகக் கூறப்பட்ட போதும், இதை எதிர்த்து ஏறத்தாழ 90 செயற்பாட்டாளர்கள் 'உணவுகளில் ஊட்டச்சத்து சோதனை நடத்த உத்தரவிட்ட கர்நாடக மாநில அரசு, மாணவர்களிடம் கருத்து கேட்கவில்லை' என்று கடிதம் எழுதினர்.

சத்துணவு
சத்துணவு
`பட்டமளிப்பு உடையில் ஏன் இன்னும் ஆங்கில கலாசாரம்?' - வெங்கைய நாயுடு வலியுறுத்தும் கதர்

தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் அதிகம் வாழும் மாநிலங்களுள் ஒன்றான ஒடிசாவில், 'குழந்தைகளுக்கு உணவுடன் முட்டை வழங்குவது தங்கள் கொள்கைக்கு எதிரானது' என்று கூறியது இந்த அமைப்பு. அதன்பிறகு, பள்ளி நிர்வாகம் குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் எனவும், அந்த முட்டைக்கான பணத்தை 'அட்சய பாத்ரா' அமைப்பு ஏற்றுக்கொள்ளும் எனவும் இந்த சர்ச்சை முடித்து வைக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சோதனை ஒன்றில், அட்சய பாத்ரா அமைப்புக்கு அளிக்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்திற்கான 19.8 டன் அரிசி வெளிநாடுகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அட்சய பாத்ரா அமைப்பு, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கைப்பற்றிய அரிசி, பக்தர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டது எனக் கூறியது. ஆனால் விசாகப்பட்டினம் ஆட்சியர் இதை மறுத்ததோடு, இஸ்கான் நிறுவனம் பணம், காசோலை முதலான பரிவர்த்தனைகளில் மட்டுமே நன்கொடை பெறுவதையும், ரெய்டில் பிடிபட்ட அரிசி அரசு அளித்த மதிய உணவுக்கான அரிசி எனவும் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கிறது.

சத்துணவு
சத்துணவு
கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த போது, தமிழக ஆளுநர் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உணவு வழங்கும் பொறுப்பை அட்சய பாத்ரா நிறுவனத்திடம் அளிக்க வேண்டும் என்று கூறினார். அதன் தொடக்கமாகவே இந்த நடவடிக்கையைப் பார்க்கிறோம்.
சுந்தராம்பாள், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர்

2013ஆம் ஆண்டு, அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந்த புகாரை விசாரிக்க திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கோபிந்த சந்திர நஸ்கர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 9 மாநிலங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கி வந்த அட்சய பாத்ரா நிறுவனமும் அந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. இதில் இஸ்கான் நிறுவனம் சட்டவிரோத முறைகளில் நன்கொடை வசூலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சைவ உணவுகளை மட்டுமே வழங்கும் நோக்கில், குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதை இந்த அமைப்பு மறுப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மதிய உணவுத் திட்டங்களில் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட பணியாளர்களின் வேலைவாய்ப்பு இந்த நிறுவனத்தால் பறிபோவதையும் கணக்கில் கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் சத்துணவுத் திட்டத்தின் குறிக்கோள்களாக, பள்ளிக் குழந்தைகளின் வருகையையும் தேர்ச்சியையும் அதிகரித்தல், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அதிக ஊட்டச்சத்துகளை அளித்தல் முதலானவற்றோடு, இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து சமூகத்தில் அவர்களை முன்னேற்றுதல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அஸ்ஸாம், பெங்களூரு முதலான பகுதிகளில் மதிய உணவுப் பணியாளர்கள் அட்சய பாத்ரா அமைப்புக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டிலும் சத்துணவுப் பணியாளர்கள் அட்சய பாத்ரா அமைப்புக்கு நிலம், நிதி ஆகியவற்றை வழங்கியுள்ளதைக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

சுந்தராம்பாள்
சுந்தராம்பாள்

இதுகுறித்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் சுந்தராம்பாளிடம் பேசினோம். "குழந்தைகளுக்குக் காலை உணவு அளிப்பது குறித்து எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், தொண்டு நிறுவனத்திடம் கொடுப்பதை எதிர்க்கிறோம். சத்துணவுப் பணியாளர்களைப் பகுதிநேர நிரந்தர ஊழியர்களாக நியமித்துள்ளது தமிழக அரசு. எங்களது ஊதியம், ஓய்வூதியம் முதலானவற்றை அதிகரிக்கக் கோரி அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறோம், அதற்கு செவிசாய்க்காத தமிழக அரசு, தற்போது புதிதாக தனியாரிடம் காலை உணவுக்கான பணியைத் தந்திருக்கிறது. தமிழக சத்துணவுப் பணியாளர்களிடம் சமையல் கூடம், குடிநீர், மின்சாரம் முதலான வசதிகள் ஏற்கெனவே இருக்கிறது. குழந்தைகளுக்குக் காலை உணவு அளிக்க உத்தரவிட்டால், அதனையும் செய்திருப்போம். மேலும், கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த போது, தமிழக ஆளுநர் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உணவு வழங்கும் பொறுப்பை அட்சய பாத்ரா நிறுவனத்திடம் அளிக்க வேண்டும் என்று கூறினார். அதன் தொடக்கமாகவே இந்த நடவடிக்கையைப் பார்க்கிறோம்" என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக, சென்னை மாநகராட்சியைத் தொடர்புகொண்டோம். நம்மிடம் பேசிய உயரதிகாரி ஒருவர், "குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்காக அட்சய பாத்ரா அமைப்பு முன்வந்ததால், அவர்களிடம் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு முழுவதும் திருவான்மியூர் பகுதியில் உள்ள பள்ளிகளில், அந்த அமைப்பு உணவு வழங்கிய போது, மாணவர்களிடம் எந்த அதிருப்தியும் எழவில்லை. அரசு நிலம் அளித்திருப்பது, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மட்டுமே. 10 ஆண்டுகளுக்குப் பயன்படுத்துவதற்காக மட்டுமே நிலம் அளிக்கப்பட்டிருக்கிறது. உணவுப் பழக்கம், டெண்டர் இல்லாமல் அளித்தது முதலானவை மாநில அரசின் கொள்கை முடிவுகள் என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆளுநரின் நேரடித் தலையீட்டால், அட்சய பாத்ரா அமைப்புக்கு இந்தத் திட்டம் அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறி முடித்துக்கொண்டார்.

காலையில் குழந்தைகள் உண்ணும் உணவில் பூண்டு, வெங்காயம் முதலானவை பயன்படுத்த வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அவற்றைப் பயன்படுத்தாமலே, ஆரோக்கியமான உணவு தற்போது அளிக்கப்பட்டு வருகிறது.
திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ்

உணவுப் பழக்கத்தில் மதம் தலையீடு முதலான சர்ச்சைகள் குறித்து நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜிடம் பேசினோம். அவர் 'அட்சய பாத்ரா' அமைப்பின் தூதுவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். "நான் ஒரு இந்து அல்ல. 'அட்சய பாத்ரா' இந்து மத அமைப்பின் பின்னணியில் இருக்கும் போதும், அவர்களது மத நம்பிக்கை எனக்கு இல்லை என்பதை முதலில் பதிவுசெய்ய விரும்புகிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக அட்சய பாத்ரா அமைப்பு அளிக்கும் உணவு ஆரோக்கியமானதாகவும், சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுவதாகவும் இருக்கிறது. 'அட்சய பாத்ரா' அமைப்பு எந்த ஒளிவுமறைவுமின்றிச் செயல்படுகின்றது. உணவில் பூண்டு, வெங்காயம் குறித்து சர்ச்சைகள் எழுகின்றன. காலையில் குழந்தைகள் உண்ணும் உணவில் பூண்டு, வெங்காயம் முதலானவை பயன்படுத்த வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அவற்றைப் பயன்படுத்தாமலே, ஆரோக்கியமான உணவு தற்போது அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும் அவர், "தமிழகத்தின் சத்துணவுத் திட்டத்திலும் ஆரோக்கியமான உணவே அளிக்கப்பட்டு வருகிறது. அதை மனதாரப் பாராட்டுகிறேன். இந்த அமைப்புடன் நான் இணைந்து பணியாற்றுவதற்குக் காரணம், இது நமது தமிழ்க் குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுகிறது. இதற்கு மதச்சாயம் பூசுவது நல்லதல்ல. வேறு எந்த மத அமைப்பு, குழந்தைகளுக்கு உணவு அளித்தாலும் அவர்களுடன் நான் பணிபுரிவேன். 'அட்சய பாத்ரா' அமைப்புக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து என்னிடம் கருத்து இல்லை. அதை அரசு தரப்பிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.

அட்சய பாத்ரா நிகழ்ச்சி
அட்சய பாத்ரா நிகழ்ச்சி
DIPR

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்குவது குறித்தும், 'அட்சய பாத்ரா' நிறுவனம் மீதான சர்ச்சைகள் தொடர்பாகவும், அந்த நிறுவனத்திடம் பேசினோம். நமது கேள்விகளை மின்னஞ்சல் செய்யக் கோரி, 'அட்சய பாத்ரா' தரப்பில் பதில் வந்தது. 5 நாள்களுக்குப் பிறகு, 'அட்சய பாத்ரா' அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுதாமா, அவ்வமைப்பின் சார்பாக பதில் அளித்தார்.

"அட்சய பாத்ரா அமைப்பின் காலை உணவுத் திட்டம் என்பது மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. இதில் தனி நபர்களுக்கு உணவு தரப்படுவதில்லை. அதனால் தமிழக அரசு எங்களுக்குத் தேவையானதை செய்து கொடுத்திருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மாநகராட்சி குழந்தைகளுக்குக் காலை உணவு அளிப்பதற்காக மட்டுமே ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. பொது நிலமும், அதன்மீது கட்டப்படும் கட்டடமும் அரசுக்குச் சொந்தமாக நீடிக்கும். எங்கள் நிறுவனம் மாணவர்களுக்கு இலவசமாக காலை உணவு தருவதால், மாநில அரசு அந்த உணவுக்காகக் குடிநீரும், மின்சாரமும் அளிக்கிறது."

மேலும், "அட்சய பாத்ரா அமைப்பு வகுப்பறைகளில் பசியை ஒழிப்பதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது. எங்கள் தற்போதைய திட்டம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் காலை உணவு வழங்குவது மட்டுமே. தமிழ்நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டத்தைக் கைப்பற்றும் திட்டம் எதுவும் எங்கள் நிறுவனத்திற்கு இல்லை" என்றும் கூறியுள்ளார்.

அட்சய பாத்ரா நிகழ்ச்சி
அட்சய பாத்ரா நிகழ்ச்சி
DIPR

'அட்சய பாத்ரா' நிறுவனம் மீதான சர்ச்சைகள் குறித்து கேட்ட போது, "மத்திய மனித வளத்துறையின் மதிய உணவுத் திட்டத்திற்கான ஊட்டச்சத்துப் பரிந்துரைகளை எங்கள் நிறுவனம் பின்பற்றுகிறது. அதற்கேற்ப உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. பூண்டு, வெங்காயம் பயன்படுத்துவதும், பயன்படுத்தாமல் இருப்பதும் மத அடிப்படையின் கீழ் சேராது. கர்நாடகத்தில் மாணவர்களிடமும், பள்ளி நிர்வாகங்களிடம் ஆலோசித்து, அதற்கேற்ப உணவின் தரம், சுவை ஆகியவற்றை அதிகரித்து வருகிறோம். முட்டை, பால் முதலானவை 'அட்சய பாத்ரா' அமைப்பின் மெனுவில் இடம்பெறவில்லை. அவை, ஒடிசா, தெலங்கானா முதலான மாநிலங்களின் மதிய உணவுத் திட்டத்தின் மெனுவில் இடம்பெறுவதால், வெவ்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அவற்றை வழங்குகிறோம். மேலும், இதற்கான அரசு மானியம் அந்த நிறுவனங்களிடம் நேரடியாக வழங்கப்படுகின்றன. விசாகப்பட்டினத்தில் அரிசி கடத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய இஸ்கான் அமைப்பின் 'ஃபுட் ஃபார் லைஃப்' (Food for Life - FFL) என்ற நிறுவனத்தோடு, எங்கள் நிறுவனத்திற்கு எந்தத் தொடர்பும் இல்லை" என்று பதிலளித்துள்ளார்.

மேலும், "நன்கொடைகள் தொடர்பான விவகாரத்தில், 'அட்சய பாத்ரா' அமைப்பு மாநில அரசுகள், மத்திய நிதித்துறை, மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை வகுத்துள்ள சட்டத்தின் அடிப்படையில் செயல்படுகிறோம். நிதி அறிக்கைகளில் எங்களது வெளிப்படைத்தன்மையைப் பாராட்டி ICAI அமைப்பு எங்கள் நிறுவனத்திற்குத் தங்கப் பதக்கம் வழங்கியுள்ளது" என்றும் கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
`அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடலூர் கலெக்டர் வழங்கிய ரூ.1 லட்சம்!' - தஞ்சை நெகிழ்ச்சி
தமிழக அரசோடு இணைந்து, 'அட்சய பாத்ரா' பணியாற்றுவதற்கான திட்டத்தின் தொடக்கப்புள்ளி குறித்து கேட்டோம். "அட்சய பாத்ரா நிறுவனம் தமிழக குழந்தைகளுக்கு உணவு அளிப்பது தொடர்பாக, பல்வேறு அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அப்படியான பேச்சுவார்த்தை ஒன்றில், காலை உணவு அளிப்பதற்கான ஐடியா உருவானது. மேலும், சென்னை மாநகராட்சியும், எங்கள் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவுடன், எங்கள் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் பங்கேற்றார்" என்று முடித்துக் கொண்டார்.

ஜெயலலிதாவின் ஆட்சியில் சத்துணவுத் திட்டத்தின் பெயர், 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்' என்று சூட்டப்பட்டது. அவர் சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். 'அம்மா ஆட்சி' என்று தனது ஆட்சியைச் சுட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'ஆளுநர் ஆட்சியை' அமல்படுத்தியிருக்கிறார்; எம்.ஜி.ஆரின் கனவுத் திட்டமும் தனியாருக்கு அளிக்கப்படுவதற்கான முன்னோட்டமும் தொடங்கியிருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு