Election bannerElection banner
Published:Updated:

"கேமராவைப் பார்த்துக் கொண்டேயிருக்கவேண்டும்!" - அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வும், சர்ச்சைகளும்!

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

ஆன்லைனில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், அதில் பல மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவற்றுள் முக்கியமானது கல்வி. பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுகளை ரத்து செய்தும், ஆல் பாஸ் செய்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்கு சில பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தும் வேறு வழி இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கல்லூரி மாணவர்களுக்கும் கடந்த ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கும் இன்டர்னல் மதிப்பெண்கள் மற்றும் முந்தைய செமஸ்டர்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் பாஸ் செய்யவும் அறிவித்தது தமிழக அரசு. மேலும், கல்லூரித் தேர்வுகளில் ‘அரியர்’ வைத்திருக்கும் முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் ஆல் பாஸ் உறுதி என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்த முடிவு தேசிய அளவில் கல்வியாளர்களிடையே கடும் எதிர்ப்பைப் பெற்றது. தமிழக அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் ‘அரியர்’ மாணவர்களுக்கும் தேர்ச்சி அளித்து மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுவிட்டன.

மாணவர்களின் தேர்வு
மாணவர்களின் தேர்வு

தமிழக அரசின் ஆல் பாஸ் அறிவிப்பு தங்களின் விதிமுறைகளுக்கு எதிரானது எனப் பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC - University Grants Commission) அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும் (AICTE) கண்டனம் தெரிவித்திருந்தன. அதனால் அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கும் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் தமிழக அரசின் 'அரியர் ரத்து' அறிவிப்பை ஏற்க முடியாது, அடுத்த எட்டு வாரங்களுக்குள் அரியர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தி முடிக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு 2020-ம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் மார்ச் 2 வரை நடத்தப்பட்டன. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, இறுதியாண்டு மாணவர்கள் சுமார் 4 லட்சம் பேர் இந்தத் தேர்வில் பங்கெடுத்தனர். ஆன்லைன் மூலமாக நடைபெற்ற இந்தத் தேர்வுக்கென பிரத்யேக செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டது. மொத்த பாடங்களையும் உள்ளடக்கியது இந்தத் தேர்வு என்று பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்தப் பின்னணியில் ஏப்ரல் 11 அன்று வெளியாகியிருக்கும் தேர்வு முடிவுகள் மாநிலம் முழுவதும் உள்ள பேராசிரியர்கள், மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Anna University
Anna University

கடந்த வாரம் வெளியான தேர்வு முடிவுகளில் நிறைய மாணவர்களது முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பொதுவாக தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பது அதன் காரணத்தின் அடிப்படையில் WH99, WHRX, WH1 எனப் பல வகைகளில் வகைப்படுத்தப்படும். இதில் WH1 என்பது முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என்ற அடிப்படையில் நிறுத்தி வைக்கப்படும். தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பலரது தேர்வு முடிவுகள் இந்த WH1 அடிப்படையிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம் ஆன்லைன் தேர்வுகளுக்கான வழிமுறைகளைத் தேர்வுகளுக்கு முன் அறிவித்திருந்தது. அதில் தனியறையில் அமர்ந்து மொபைல் அல்லது லேப்டாப் மூலம் தேர்வுகள் எழுத வேண்டும், தேர்வு எழுதும் அறையில் யாரும் இருக்கக் கூடாது, சந்தேகம் வரும்படி சத்தம் எதுவும் கேட்கக்கூடாது, தேர்வு எழுதும் நேரம் முழுவதும் கேமராவை மட்டுமே பார்க்க வேண்டும் போன்ற வழிமுறைகளைக் கூறியிருந்தது.
மாணவர்கள் தேர்வு
மாணவர்கள் தேர்வு

இந்த வழிமுறைகளை மீறும் பட்சத்தில் அது முறைகேடாகக் கருதப்படுகிறது. மேலும், தொழில்நுட்பக் கோளாறு அல்லது இணையதளக் கோளாறு காரணமாகத் தேர்வு எழுதும் செயலியில் இருந்து வெளியேறினாலும் அதுவும் முறைகேடாகவே கருதப்படுகிறது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பேசும் போது, "எங்க வகுப்பில் இருக்கிற பாதி மாணவர்களுக்கும் மேல் முடிவுகளை நிறுத்தி வச்சுருக்காங்க. என்னென்னவோ காரணங்கள் போட்டிருக்கு. நிறைய பேர் முறைகேடு செஞ்சாங்க, அதுனாலதான் நிறுத்தி வச்சிருக்கோம்னு சொல்றாங்க. இப்போ என்ன பண்றதுன்னு தெரியல" எனக் கூறுகிறார். மற்றொரு மாணவர் பேசும் போது, "எனக்கும் முறைகேட்டுல ஈடுபட்டதால தேர்வு முடிவுகளை நிறுத்தி வெச்சிருக்கு போட்டிருந்தாங்க. ஆனால் நான் இது வரைக்கும் அரியரே வச்சது இல்ல. இந்த முடிவுகள் ரொம்ப மன உளைச்சலைத்தான் கொடுக்குது" என்றார்.

இரண்டாம் தர, மூன்றாம் தர நகரங்கள் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவர்களுக்குத் தனியறை, நிலையான இணையதள வசதி என்பதெல்லாம் சாத்தியம் இல்லை. இந்த நிலையில் அவர்களால் கடும் சத்தத்திற்கு மத்தியிலும், நிலையில்லாத இணையத்திற்கு மத்தியிலும்தான் தேர்வுகளை எழுத முடிந்திருக்கும். இந்தச் சூழ்நிலையில் விரைவில் இது குறித்த நல்ல முடிவை அண்ணா பல்கலைக்கழகம் எடுக்க வேண்டியது அவசியம்.

தேர்வு எழுதிய மாணவர்களில் சுமார் ஒரு லட்சம் பேரின் முடிவுகள் 'நிறுத்திவைப்பு' (With held - WH) என்று தேர்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுமார் 30 ஆயிரம் பேர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 30 சதவிகிதம் பேரும் மிகக் குறைந்த மதிப்பெண் சதவிகிதத்திலேயே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

டாக்டர். அசத்
டாக்டர். அசத்

“அண்ணா பல்கலைக்கழகத்தின் அணுகுமுறை தெளிவாக இல்லை. இது முதல் கட்ட முடிவுகள்தான், இன்னும் இரண்டு, மூன்றாம் கட்டங்கள் இருக்கின்றன என்று தேர்வு முடிவுகள் குறித்து பல்கலைக்கழகம் சொல்கிறது. மாணவர்கள் தேர்வில் முறைகேடு செய்திருப்பது உண்மைதான் என்பதற்கான வலுவான ஆதாரம் அவர்களிடம் இல்லை. அப்படி ஆதாரங்கள் இருந்திருந்தால், ‘நிறுத்திவைப்பு’ விதிகளில் 13 விதிகளை வெளியிட்டிருக்க மாட்டார்கள். சில மாணவர்களுக்கு அந்த விதிகளில் பெரும்பாலானவை பொருந்தவே இல்லை. இதனால் மாணவர்கள் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

வீட்டிலிருந்து தேர்வு எழுத வேண்டும் என்பது விதி, ஆனால், மின் இணைப்பு, இணைய இணைப்பு ஆகியவற்றில் கோளாறுகளால் நிறைய மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்; தேர்வுக் கட்டணம் செலுத்தியவர்களுக்கு செலுத்தவில்லை என்று தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இறுதியாண்டு மாணவர்கள் இதில் மிகக் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளப் போகின்றனர். பொதுவாகவே மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்குத் தேர்வு நடத்துவது என்பது மிகப் பெரிய காரியம். இந்நிலையில் ஆன்லைன் தேர்வு முடிவுகள் ஏற்படுத்தியிருக்கும் பிரச்னை, பல்கலைக்கழகத்துக்குப் பெரிய நெருக்கடியாக இருக்கப் போகிறது” என்கிறார் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி பேராசிரியர் நலச் சங்கத்தின் பொருளாளர் டாக்டர் அசத்.

பாலகுருசாமி
பாலகுருசாமி

“மாணவர்கள் இந்த ஆன்லைன் தேர்வைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. தமிழகத்தின் மற்ற எந்தப் பல்கலைக்கழகத்தைவிடவும் ஆன்லைன் தேர்வு வழிமுறைகள்படி முறையாக அண்ணா பல்கலைக்கழகம்தான் நடத்தியது. மற்ற பல்கலைக்கழகங்கள் வினாத் தாள்களை முன்பே மாணவர்களுக்கு வழங்கிவிட்டன. மாணவர்கள் வீட்டில் அமர்ந்து பார்த்து எழுதியிருக்கின்றனர். இதனால் ஏராளமானோர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் முறையாக நடத்திய தேர்வில், மாணவர்கள் அலட்சியத்துடன் பங்கெடுத்து தோல்வியடைந்திருக்கின்றனர். இந்தக் கணினி வழித் தேர்வில் இருக்கும் வழிமுறைகளைச் சரியாகக் கடைபிடிக்காத மாணவர்கள் ஃபெயிலாகி இருக்கிறார்கள். நேரடியாக நடக்கும் பரிட்சையிலும் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்கள் ஆண்டுதோறும் சுமார் 1000 பேர் வரை தேர்வு விதிமுறைகளின்படி ஃபெயில் ஆக்கப்படுகின்றனர். இந்நிலையில், இந்த முறை ஆன்லைன் தேர்வுகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் வழிமுறைகளை ஆராய வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை" என்றார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஈ.பாலகுருசாமி.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு