Published:Updated:

``இட ஒதுக்கீடு பற்றி மத்திய அமைச்சரைக் கேளுங்கள்....'' - கடுகடுக்கும் தமிழக அமைச்சர்

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்

''மருத்துவப் பட்ட மேற்படிப்பில், பிற்படுத்தப்பட்டோருக்கான உரிய இட ஒதுக்கீடு கிடைக்கப்பெறவில்லையே... இதுகுறித்து நீங்கள் வலியுறுத்துவீர்களா...'' என்ற கேள்விக்கு, ''இட ஒதுக்கீடு பற்றி மத்திய அமைச்சரைக் கேளுங்கள்.... என்னை நோண்டாதீர்கள்...'' என்றார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்.

கொரோனா உயிர்க்கொல்லி நோய்க்கு எதிராக, தங்கள் உயிரையே பணயம் வைத்து மருத்துவத் தோழர்கள் போராடிவரும் இவ்வேளையில், மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கும் செய்தி, சமூக நீதிக்கு சாவு மணி அடித்துள்ளது!

சாதிய ரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியச் சமூகத்தில், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகளில் கோடிக்கணக்கான மக்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்துள்ளன. இந்த அநீதிக்கு எதிராகக் கொதித்தெழுந்த சமூகப் போராளிகளின் தொடர்ப் போராட்டங்களின் வாயிலாகவே, 'இட ஒதுக்கீடு' எனும் சட்ட உரிமை கிடைக்கப்பெற்றது.

ஆனாலும் மாறிவரும் அரசியல் சூழல்களில், இந்த 'இட ஒதுக்கீட்டு முறை'க்கு எதிராக அவ்வப்போது விமர்சனங்கள் எழுவதும், தடைபடுவதும் தொடர் கதையாகிவருகிறது. இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்குத் தகுதித் தேர்வாக மத்திய அரசு கொண்டுவந்த 'நீட் தேர்வு முறை'க்கு நாடெங்கிலும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக, சமூக நீதிக்கான போராட்டத்தில், முதன்மை மாநிலமாகத் திகழ்ந்துவரும் தமிழ்நாடு, 'நீட் தேர்வு' முறைக்கு எதிராக இன்றளவிலும் போராடிவருகிறது!

மருத்துவர்
மருத்துவர்
கொரோனா அழுத்தம், பயிற்சியில்லை... நீட் தேர்வை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் மாணவர்கள்? #KnowNeetNoNeet

இதற்கிடையில், மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ள விவகாரம், நாடெங்கிலும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து 'அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு' பொதுச்செயலாளர் கருணாநிதி பேசும்போது, ''2020-ம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய தொகுப்புக்குரிய இடங்களை மத்திய நல்வாழ்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் மருந்துவக் கலந்தாய்வுக் குழுதான் அறிவிக்கிறது. இதன்படி, 2020-ம் ஆண்டுக்கான மருத்துவ மேற்படிப்பில், அகில இந்தியத் தொகுப்பில் மொத்தம் 9550 இடங்கள் உள்ளன. இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 371 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன; அதாவது வெறும் 3.8 சதவிகித இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன'' என்று குமுறியவர், இதன் பின்னணித் தகவல்களையும் நம்மிடம் விளக்க ஆரம்பித்தார்.

''மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரி இடங்களிலிருந்து அகில இந்தியத் தொகுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களிலிருந்து மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு தரப்படுகிறது. ஆனால், மாநில அரசு நிர்வாகத்தின் கீழ்வரும் மருத்துவக் கல்லூரிகளிலிருந்து அகில இந்திய தொகுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் 50 சதவிகித இடங்களில் ஒரு சீட்கூட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்படுவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து இப்படி உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.

உதாரணமாக, தமிழ்நாட்டிலுள்ள மருத்துவ மேற்படிப்புகளுக்கான மொத்த இடங்கள் 1758. இதில் 50 சதவிகித இடங்களான 879 இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு எடுத்துக்கொள்கிறார்கள். இப்படி எடுத்துக்கொள்ளப்படும் 879 சீட்களில் ஒரு சீட்கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்குத் தரப்படுவதில்லை. இந்த இடங்கள் எல்லாம் மத்திய அரசின் அகில இந்தியத் தொகுப்புக்குத் தரப்படாமல், முன்புபோல் தமிழ்நாட்டிலேயே இருந்திருக்குமானால், பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையின் அடிப்படையில் சுமார் 440 இடங்கள் கிடைத்திருக்கும். ஆக, இது தமிழ்நாட்டிலிருந்து கிடைத்திருக்கவேண்டிய கணக்கு மட்டும்தான். இதேபோல், இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலிருந்து அகில இந்தியத் தொகுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படுகிற ஆயிரக்கணக்கிலான சீட்களில் ஒரு சீட் கூட பிற்படுத்தப்பட்டோருக்கென்று ஒதுக்கப்படுவதில்லை என்பது மாபெரும் சமூக அநீதி.

கருணாநிதி - பாலு
கருணாநிதி - பாலு

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சாதியின் பெயராலேயே உரிமையை இழந்தவர்கள் இம்மக்கள். அதனாலேயே 'இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் 27 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்' என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கிறது. எனவே, சட்டப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய 27 சதவிகித இடஒதுக்கீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால், 2017-ம் ஆண்டில் 3101 இடங்கள் கிடைத்திருக்கும். 2018-ல் 2429 சீட்கள் கிடைத்திருக்க வேண்டும்.

2020-ம் ஆண்டில், மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளிலிருந்து பெறப்பட்ட சீட்களிலிருந்து மட்டும் 27 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில், வெறும் 371 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேசமயம், உயர் சாதி ஏழைகள் என்றழைக்கப்படுபவர்களுக்கு 653 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

எண்ணிக்கையளவில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களாகவும் பொருளாதார ரீதியில் அன்றாடங்காய்ச்சிகளாகவும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, வெறும் 371 இடங்கள் கொடுக்கப்பட்டிருப்பதும், மாதம் 65 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கக்கூடிய உயர் சாதி ஏழைகளுக்கு 653 இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதும் என்னவிதமான சமூக நீதி?'' என்றார் கொதிப்பாக.

இந்நிலையில், பா.ம.க இளைஞரணித் தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், இவ்விஷயத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்துப் பேசுகிற அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் பாலு, ''மருத்துவ மேற்படிப்பில் மட்டுமல்லாது, வேலைவாய்ப்பிலும்கூட இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமைகள் பலவும் தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகின்றன. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 1993-ல் கொண்டுவரப்பட்டது 27 சதவிகித இட ஒதுக்கீடு. ஆனாலும் இன்றைய தேதி வரையில், குரூப் 1, 2, 3 என அனைத்திலும் வெறும் 5.23 சதவிகித இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன.

தற்போது, மருத்துவ மேற்படிப்பில் இழைக்கப்படும் இந்த அநீதிக்கு எதிராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு அமைச்சர் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், 'உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கு நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக முடிக்கப்படாமல் இருக்கும் இவ்வழக்கு, சமூக நீதிக்கு எவ்வகையிலும் வலிமை சேர்க்காது. எனவே, மத்திய அரசு இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இட ஒதுக்கீட்டு உரிமையை உறுதிப்படுத்தவேண்டும். தமிழ்நாட்டில், சமூக நீதி பற்றிப் பேசுகிற அனைத்துக்கட்சிகளும்கூட இதுகுறித்து வெளிப்படையாகப் பேசவேண்டும்'' என்றார்.

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்
நீட் வைரஸ் - 20: வரலாற்றில் இடம் பெறுவாரா முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

'69 சதவிகித இடஒதுக்கீடு' என்றளவில், சமூக நீதியைக் காப்பதில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்வது தமிழ்நாடு. 'சமூக நீதி காத்த வீராங்கனையான ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி நடத்தி வருகிறோம்' என்று பெருமைகொள்ளும் தமிழக அரசு, இவ்விஷயத்தில் எந்தவொரு எதிர்வினையும் காட்டாமல் அமைதி காத்துவருகிறது. இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரான கே.பி.அன்பழகனிடம், 'பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை நிலைநாட்டும் விதமாக மத்திய அரசிடம் இதுகுறித்து வலியுறுத்துவீர்களா....' என்ற கேள்வியைக் கேட்டோம்.

''சமூக நீதி விஷயத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்துவருகிறது என்பது சரி. அதேசமயம், 'மருத்துவ மேற்படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு' என்பது மத்திய சுகாதாரத்துறை அமைச்சரின் கீழ் வருவது. இதில் நான் எப்படி கருத்து சொல்லமுடியும்... அதனால் என்னை நோண்டி நோண்டி கேட்கவேண்டாம். மத்திய அமைச்சரைக் கேளுங்கள்...'' என்றார் 'பொறுப்பாக'.

இதையடுத்து, தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனிடம், 'மருத்துவப் பட்ட மேற்படிப்பில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உரிய இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தர மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை வலியுறுத்துவீர்களா...' என்ற கேள்வியைக் கேட்டோம். ''மத்திய அரசு, நடத்திவருகிற மருத்துவக் கல்லூரிகளிலிருந்து உரிய இட ஒதுக்கீடு இப்போதுவரை அளிக்கப்பட்டே வருகிறது. அதேசமயம் அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்களிலிருந்து பெறப்படும் இடங்களில் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவரும் வழக்கு தடையாக இருக்கிறது.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை, மாநிலங்களிடையே பல்வேறு வேறுபாடுகள் இருந்துவருவதால், இந்தச் சிக்கல் நீடித்துக்கொண்டேயிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழக்கில், தங்களையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக்கொண்டு நல்லதொரு தீர்வுகிடைக்க மாநில அரசுகள் முன்வரவேண்டும். அதேபோல், மத்திய அரசும் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுப்பதற்காக தமிழக பா.ஜ.க தரப்பில் வலியுறுத்துவோம்!'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு