Published:Updated:

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: ஆரம்பக் கல்விக்கு வளர்ச்சியா... வீழ்ச்சியா?

'தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளுக்கு நடப்புக் கல்வியாண்டுமுதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படும்' என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது, பள்ளிக்கல்வித் துறை.

School students
School students ( Representational image )

குழந்தைகளின் ஆரம்பக் கல்வியை உறுதிசெய்யும் விதமாக இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமானது 2009-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில், "ஆரம்பக் கல்வியைப் பூர்த்திசெய்கிற வரையில் எந்தக் குழந்தையையும் பள்ளியைவிட்டு வெளியே அனுப்பவோ, அவர்களை ஒரே வகுப்பில் மீண்டும் படிக்கவைக்கவோ கூடாது” எனச் சொல்லி, எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சி முறையானது அமல்படுத்தப்பட்டது.

DPI
DPI

இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள கட்டாயத் தேர்ச்சி முறையால், மாணவர்கள் மேல்வகுப்புகளுக்குச் செல்லும்போது அவர்களுக்கான கல்வியறிவு முழுமையாகக் கிடைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்தக் கட்டாயத் தேர்ச்சி முறையில் கடந்த ஆண்டு இறுதியில் மாற்றத்தைக் கொண்டுவந்தது. இந்தப் புதிய மாற்றத்தின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதியில் பொதுத் தேர்வானது நடத்தப்படும் என்றும், இதில் தோல்வியுறும் மாணவர்களுக்கு அடுத்த 2 மாதத்தில் மறுதேர்வானது நடத்தப்படும் என்றும், அந்தத் தேர்வில் தோல்வியுறும் மாணவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றமானது, தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படாது எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர்.

School Students
School Students
Representational image

இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகத்தின் தலைவர் வே.மணிவாசகம், "கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக 8-ம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சிமுறை நடைமுறையில் உள்ளதால், இதன்மூலம் தேர்ச்சிபெற்று மேல்வகுப்புகளுக்கு மாணவர்கள் வரும்போது அவர்களுக்குப் போதிய கற்றல் திறன் இருப்பதில்லை.

10-ம் வகுப்பில் பொதுத் தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களில் 80 சதவிகிதம் பேருக்குத் தமிழைக்கூடப் பிழையில்லாமல் எழுதத் தெரியவில்லை. தற்போது அரசு 5, 8-ம் வகுப்புகளுக்குத் தேர்வுகள் வைப்பதன் வாயிலாக மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும்” என்றார்.

School Students
School Students
Representational image

இதுகுறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கச் பொதுச்செயலாளர் ராபர்ட், "இது கிராமப்புறக் குழந்தைகளுக்குப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். கட்டாயத் தேர்ச்சி முறையை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு, ஆரம்பக் கல்வியில் அதிகமான இடைநிற்றல் நிகழ்ந்துகொண்டிருந்தது. இதற்கான காரணம், பல குழந்தைகள் தேர்ச்சிபெறாமல் ஒரே வகுப்புகளில் பல ஆண்டுகள் படித்ததால், அவர்களின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்குப் படிப்பு வராது எனச் சொல்லி பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிடுகின்றனர். அந்தக் குழந்தைகளும் செங்கல்சூளை போன்ற இடங்களில் குழந்தைத் தொழிலாளர்களாக மாறிவிடுகின்றனர். இந்தச் சூழலில்தான் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

100 குழந்தைகள் இருந்தால் அதில் 10 குழந்தைகளுக்குக் கற்கும் திறன் குறைவாக இருக்கும். ஆனால், அந்தக் குழந்தைகளைக் காரணம் காட்டி மற்ற குழந்தைகளுக்கும் தேர்வுவைத்தால் அது பெரும் பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தும், குறிப்பாக, பெண் கல்வியில் பாதிப்பை உருவாக்கும்.

School Students
School Students
Representational image

கல்வி கற்றோர் சதவிகிதத்தில் தமிழ்நாடும் கேரளமும்தான் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால், இந்த ஆரம்பப் பள்ளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ள பொதுத்தேர்வு முறையானது, நம் கல்வித்துறையின் வளர்ச்சியை 15 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடும். அதன் விளைவாக, குழந்தைத் தொழிலாளர்கள் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். வேலைவாய்ப்புகள் கிடைக்காத குழந்தைகள் சமூகக் குற்றவாளிகளாக மாறிவிடுவார்கள். பெண் குழந்தைகள் வீட்டு வேலைக்குச் செல்லும் நிலைதான் ஏற்படும்.

பத்து வயதில் குழந்தைகளுக்குப் பொதுத்தேர்வு பற்றிய புரிதல்கூட இருக்காது. அதேபோல், இந்தத் திட்டங்கள் எல்லாம் நகரத்தை மையப்படுத்தியதாக உள்ளனவே தவிர, கிராமத்துக் குழந்தைகளை உணர்ந்து உருவாக்கப்படவில்லை. தற்போது தமிழகத்தில் முப்பருவக் கல்வி முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது பொதுத்தேர்வு கொண்டுவருவதன் மூலம் மீண்டும் மூன்று பருவப் புத்தகங்களையும் குழந்தைகள் ஒரேநேரத்தில் படிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது, பெற்றோர்களை தனியார் பள்ளிகளை நோக்கி அழைத்துச் செல்ல வழிவகுக்கும்” என்றார் தெளிவாக.

Directorate of School Education
Directorate of School Education

இதுகுறித்து பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கத் தலைவர் வசந்தி தேவியிடம் பேசியபோது, "தேர்வுகள், அதிலும் பொதுத் தேர்வுகள் மாணவர்களுக்குப் பெரும் மன உளைச்சலை அளிக்கும். பேயாக அவர்களை அச்சுறுத்தும் கொடுமை; குழந்தைகள் மேல் ஏவப்படும் வன்முறை; மன்னிக்கவியலா குற்றம். 5, 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தப்படுமானால், மாணவர்களின் இடைநிற்றல்தான் அதிகரிக்கும்" என்றார்.