Published:Updated:

கலை அறிவியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு... மத்திய அரசின் திட்டம்தான் என்ன?

அடுத்த கல்வியாண்டின் பாடங்களை நடத்துவதும் குறித்தும், ஆராய்ந்து அறிக்கை தருமாறு ஹரியானா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹாத் தலைமையில் பல்கலைக்கழக மானியக்குழு குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது.

மருத்துவப் படிப்புக்கான நுழைவு தேர்வான 'நீட்'டை எதிர்த்து தமிழகம் முன்பிருந்தே போராடிவரும் நிலையில், தற்போது மத்திய அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வை நடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தி வருகிறது. கொரோனா பேரிடரால் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகளைத் தொடங்குவது குறித்தும், அடுத்த கல்வியாண்டின் பாடங்களை நடத்துவதும் குறித்தும், ஆராய்ந்து அறிக்கை தருமாறு ஹரியானா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குஹாத் தலைமையில் பல்கலைக்கழக மானியக்குழு குழுவை மத்திய அரசு அமைத்திருந்தது.

அந்தக் குழு தற்போது சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் மருத்துவப் படிப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வைப் போன்று கலை மற்றும் அறிவியல் படிப்புக்கும் தேசிய மற்றும் மாநில அளவிலான நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள்
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள்

இந்தப் பரிந்துரைக்கு கல்வியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் நுழைவுத் தேர்வு குறித்த பரிந்துரைகளை முன்வைத்தபோது அதைக் கண்டித்துப் பேசினேன். தற்போது மீண்டும் கிராமப்புற மாணவர்களின் கல்வியை முடக்கிப் போடுகிற இந்த நுழைவுத்தேர்வைப் பரிந்துரைத்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "கொரோனாவால் மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்று அமைக்கப்பட்ட குழு நுழைவுத் தேர்வை நடத்த பரிந்துரைப்பது அதிகாரத்தை மீறிய செயலாகும்" என்று கண்டித்துள்ளார். இந்த நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வந்தால் என்னென்ன பாதிப்புகள் மாணவர்களுக்கு ஏற்படுத்தும்... இதை நடைமுறைப்படுத்துவதன் நோக்கம் என்ன... என்பன குறித்து கல்வியாளர்களிடம் பேசினோம்.

 ஜவஹர், கல்வியாளர்
ஜவஹர், கல்வியாளர்

மைசூரில் உள்ள ஜே.எஸ்.எஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜவஹர்நேசன் பேசுகையில், "தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சம்தான் கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு. இதை நடைமுறைப்படுத்த தேசிய தேர்வு முகமையை (National Testing agency ) மத்திய அரசு ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அண்மைக்காலமாகக் கல்வி தொடர்பாக ஆரம்பித்துள்ள பெரும்பாலான திட்டங்கள் தேசிய கல்விக் கொள்கையிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டவைதாம். தேசிய கல்விக் கொள்கை இன்னும் விவாதத்தில்தான் இருக்கிறது. ஆனால், அதில் உள்ள ஷரத்துகளை ஒவ்வொன்றையும் மத்திய அரசு மறைமுகமாகச் செயல் வடிவம் கொடுத்து வருகிறது. அந்த அடிப்படையில்தான் தற்போது இந்த நுழைவுத் தேர்வைத் திணிக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

குஹாத் குழுவின் பரிந்துரை
குஹாத் குழுவின் பரிந்துரை
பல்கலைக்கழகங்கள்
பல்கலைக்கழகங்கள்

ஏற்கெனவே பல்கலைக்கழகங்கள் ஒரு நுழைவுத் தேர்வை நடத்தி வருகின்றன. அந்த முறையை நீக்கிவிட்டு ஒட்டுமொத்தமாக தேசிய அளவிலான ஒரு நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். எந்த நுழைவுத் தேர்வை வேண்டும் என்றாலும் மத்திய அரசு நடத்தட்டும். அதில் நமக்கு ஆட்சேபனை இல்லை.

கல்வியின் தரத்தையும், அதன் முறையையும் மேம்படுத்தி அனைவரையும் சமன்படுத்தி விட்டுச் செய்யட்டும். இதைத் தவிர்த்துவிட்டு, ஒரே நேர்கோட்டில் பீகார் மாணவனையும் தமிழக மாணவனையும் ஓட வைப்பது எந்த வகையில் நியாயம்?
ஜவஹர்நேசன் துணைவேந்தர்
மாணவர்களின் எண்ணிக்கை
மாணவர்களின் எண்ணிக்கை

இது எவ்வாறு சமமான நுழைவுத் தேர்வாக இருக்க முடியும்? பீகார் மாணவன் கல்வியில் பின்தங்கியிருப்பது அவனுடைய தவறு இல்லையே.. பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை! மத்திய அரசு ஒற்றைத் தேசம் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நுழைவுத் தேர்வை கையில் எடுத்துள்ளது. அதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்தினால்தானே யாரும் இதைப் பற்றி விவாதிக்கமாட்டார்கள்; கொடிபிடிக்க மாட்டார்கள் என்பது இவர்களுடைய நோக்கம். இது எந்த மாதிரியான ஒரு கோழைத்தனம்" என்றார் ஆவேசமாக.

மருத்துவரும், கல்வியாளருமான அமலோற்பவநாதன் பேசுகையில், "நுழைவுத் தேர்வு என்பதே வடிகட்டுவதற்குத்தானே, அதை எவ்வாறு ஏற்க முடியும்? இது மிகப் பெரிய சமூக அநீதியாகும். பெரும்பாலும் கலை, அறிவியல் பாடங்களை நம்பித்தான் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட கிராமப்புற மாணவர்கள் இருக்கிறார்கள்.

அமலோற்பவநாதன், மருத்துவர்
அமலோற்பவநாதன், மருத்துவர்

இது அவர்களுடைய கல்வியை நசுக்கிற செயலாகும். இப்படியான ஒரு நுழைவுத் தேர்வு நடைமுறைப்படுத்தினால் அதிக அளவில் மாணவர்களின் இடை நிற்றல் ஏற்படும். அவர்களுடைய கல்வியைப் பொசுக்க வேண்டும் என்ற நோக்கத்திலே பரிந்துரைக்கப்பட்ட உள்ளது" என்றார்.

தமிழகத்தில் உள்ள பள்ளிகள்!
 • தனியார் பள்ளிகள் : 12,439

 • அரசுப் பள்ளிகள் : 37,728

 • அரசு உதவிபெறும் பள்ளிகள் : 8,355

 • மற்றவை : 630

 • மொத்த பள்ளிகள் : 59,152

தமிழகத்தில் உள்ள மாணவர்கள்!
 • தனியார் பள்ளி மாணவர்கள் : 52,54,459

 • அரசுப் பள்ளி மாணவர்கள் : 45,75,575

 • அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் : 22,97,501

 • மற்றவை : 51,822

 • மொத்த மாணவர்கள் : 1,21,79,357

இது குறித்து கல்வியாளர் டாக்டர். ஆர்.ராஜராஜன் பேசுகையில், "கொரோனா காரணமாக மாணவர்கள் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பது தெரியாமல் குழப்பமான நிலையில் உள்ளனர். இந்தக் கல்வியாண்டின் வகுப்பு இறுதித்தேர்வுகள்கூட முழுமையடைவில்லை. ஓரிரு நாள்களில் அடுத்த கல்வியாண்டும் தொடங்கப்போகிறது. இந்த நிலையில் போய் அவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்றால் அந்த மாணவர்கள் இதை எவ்வாறு எதிர்கொள்வார்கள்? இது எந்த வகையிலும் சரியான அணுகு முறை இல்லை.

டாக்டர். ஆர் .ராஜராஜன் கல்வியாளர்
டாக்டர். ஆர் .ராஜராஜன் கல்வியாளர்

அவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கான பயிற்சிகளையும் பெற வேண்டும். அப்படி இருக்கும்போது கிராமப்புற மாணவர்கள் எவ்வாறு பயிற்சி பெறுவார்கள். அதனால் இந்த நிலையில் போய் அவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்பது மிகவும் மோசமான ஒரு செயல்பாடாகும். குறிப்பாக இது கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வியைக் கடுமையாகப் பாதிக்கும்" என்றார்.

இந்தியாவில் உள்ள பள்ளிகள்!
 • தனியார் பள்ளிகள் : 3,25,760

 • அரசுப் பள்ளிகள் : 10,83,678

 • அரசு உதவிபெறும் பள்ளிகள் : 84,614

 • மற்றவை : 55,954

 • மொத்த பள்ளிகள் : 15,50,006

இந்தியாவில் உள்ள மாணவர்கள்!
 • தனியார் பள்ளி மாணவர்கள் : 8,39,50,592

 • அரசுப் பள்ளி மாணவர்கள் : 12,84,97,792

 • அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் : 2,75,25,717

 • மற்றவை : 78,79,587

 • மொத்த மாணவர்கள் : 24,78,53,688

இது குறித்து பி.ஜே.பி-யின் தமிழ்நாடு மாநிலப் பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் பேசுகையில், "கல்வி முறையைச் சரிசெய்ய வேண்டும் என்ற கவலை மத்திய அரசுக்கு உள்ளது. அந்த அடிப்படையில் அந்தத் துறையில் உள்ள வல்லுநர்கள் குழுவை அமைத்து கருத்து கேட்டுள்ளது. அதில், ஹரியானா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் குஹாத் தலைமையிலான குழு, கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கு மாநில அளவிலோ, தேசிய அளவிலோ ஒரு நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்று பரிந்துரைதான் செய்துள்ளது. அந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளலாம் அல்லது அதை நிராகரிக்கவும் செய்யலாம். அதனால் நாம் இதை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியே தீரும் என்ற கோணத்தில் எடுக்கத் தேவையில்லை" என்றார்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

இது குறித்து தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசுகையில், "தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் முழுமையாக நடந்து முடிந்துள்ளன. அதில் எந்தக் குழப்பமும் இல்லை. அதனால் நமது பல்கலைக்கழகங்களில் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடைபெறாது. அதை ஏற்கவும் முடியாது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு