Published:Updated:

``10-ம் வகுப்பு தேர்வை நடத்த நிர்பந்திப்பது யார்?''- கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள்

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

'கொரோனா நோய்த்தொற்று பரவும் காலத்தில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை அரசு நடத்தலாமா...' என்ற எதிர்ப்புக்குரல் வலுத்துவருகிறது. இதற்குப் பதில் அளித்துப் பேசும் அமைச்சர் செங்கோட்டையன், ''தேர்வெழுதும் மாணவர்களின் பாதுகாப்புக்கு நான் கியாரன்டி'' என உறுதியளித்துள்ளார்.

'4-வது கட்ட முழு ஊரடங்கு பற்றி 18-ம் தேதிக்குள் அறிவிக்கப்படும்' என்று பிரதமர் நரேந்திர மோடி, வீடியோ வெளியிட்ட அதே நாளில்தான் 'எஸ்.எஸ்.எல்.சி தேர்வு ஜூன் 1-ம் தேதி தொடங்கும்' என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் அறிவித்திருக்கிறார்.

'கொரோனா ஊரடங்கின் 4-வது கட்டம் எப்படியிருக்கப் போகிறதோ...' என்ற எதிர்பார்ப்போடு அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கும்போதே 10-ம் வகுப்பு தேர்வு தேதியை தமிழக அரசு அறிவித்திருப்பது பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்திருக்கிறது. மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள், அரசியல் கட்சிகள் என அனைத்துத் தரப்பினரும், 'தேர்வு தேதியை தள்ளிவைக்க வேண்டும்' என்று ஒருசேர குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையே, 'இயல்பு நிலை திரும்பிய பிறகே தேர்வை நடத்த வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்வெழுதும் மாணவிகள்
தேர்வெழுதும் மாணவிகள்

கடந்த காலங்களில், பள்ளிக்கல்வித்துறையின் இதுபோன்ற பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து வாபஸ் வாங்கப்பட்ட நிகழ்வுகளும் பல உண்டு. அதுபோல் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விடை காண முடியாமல், மக்கள் தவித்துவரும் வேளையில், தேர்வு முடிவு குறித்த அரசின் தன்னிச்சையான முடிவு பல்வேறு கேள்விகளுக்கும் வழிவகுத்திருக்கிறது.

எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் முத்து மாரியப்பன் இதுகுறித்துப் பேசும்போது, ''ஊரடங்கில் முடங்கிக்கிடக்கும் மாணவர்களின் மனநிலை எப்படியிருக்கிறது என்ற அடிப்படைப் புரிதல்கூட இல்லாமல், திடீரென தேர்வு தேதியை அரசு அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.

`காட்டு மரம் மாதிரி இருக்கணும்!’ - காயங்களை உதறி எழுந்த ஸ்மைலி சூப்பர் கிங் பாலாஜியின் கதை!

ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும், இயல்பு வாழ்க்கைக்கு எப்படித் திரும்பப் போகிறோம்... என்பதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை தெரியாமல் பொதுமக்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். நம்மை ஆட்சி செய்துவரக்கூடிய அரசுகளிடம்கூட இந்தக் கேள்விகளுக்கான தெளிவான பதில்கள் இப்போதுவரை இல்லை. இதுபோன்ற பதற்றமான சூழ்நிலையில், மாணவர்கள் மட்டும் கண்ணும் கருத்துமாகப் படித்து முடித்திருக்க முடியும்? மனதளவில் எல்லோருமே பாதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், இப்படியொரு அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கக் கூடாது. எனவே, தயவுசெய்து இவ்வறிவிப்பை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

'மாணவர்களின் எதிர்காலம் கருதியே இந்த முடிவை எடுத்திருக்கிறோம்' என்று அமைச்சர் சொல்கிறார். 10-ம் வகுப்பு தேர்வு என்பது முக்கியம்தான். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், உயிர் அதைவிட முக்கியம் அல்லவா? எனவே, தேர்வு தேதியை அறிவிக்கக்கூடிய காலகட்டம் இதுவல்ல என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது'' என்றார்.

முத்து மாரியப்பன், முத்துச்சாமி
முத்து மாரியப்பன், முத்துச்சாமி

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் முத்துச்சாமி, ''இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் வரிசையில் 3-வது இடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. தற்போதும் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இது எங்கு, எப்போது, எப்படி முடியும் என்றே யாருக்கும் தெரியவில்லை.

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் 'ஜூன் 1-ம் தேதி தேர்வு நடைபெறும்' என்று அரசு திட்டமிட்டிருப்பது சரியான நடமுறை அல்ல. எந்தக் கணிப்பின் அடிப்படையில், தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த எந்தவொரு விஷயத்தையும் அரசு, அறிவிப்பில் சொல்லவில்லை. தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்ற கேள்விக்கே விடை தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் சூழலில், 'மாணவர்களின் எதிர்காலம் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது' என்று அமைச்சர் தெரிவித்துள்ளது வியப்பாக இருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற்கொள்வோர், நெருக்கடியான இந்நேரத்தில் தேர்வு என்ற பெயரில், மாணவர்களை அலைக்கழிக்கக் கூடாது.

சி.பி.எஸ்.இ பள்ளித் தேர்வுகளே ஜூன் மாதக் கடைசியில்தான் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசும்கூட ஜூன் 1-ம் தேதி நிச்சயம் தேர்வை நடத்த முடியாது என்றே நானும் கருதுகிறேன். பள்ளிக் கல்வித்துறையில் எனக்கிருக்கும் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் சொல்வதென்றால், அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும். அதுதான் மாணவர்களுக்கும் அரசுக்கும் நல்லது. ஏனெனில், உடல் நலமும் உயிர் பாதுகாப்புமே தற்போதைய அவசியம்! இதைக் கருத்தில்கொண்டுதான் மத்திய அரசும் தேர்வுகளைத் தள்ளிப்போட்டிருக்கிறது. மாநில அரசும் தேர்வுகளை ஜூலை மாதத்துக்குத் தள்ளிவைக்க வேண்டும்!'' என்றார் உறுதியாக.

தமிழக அரசின் தேர்வு அறிவிப்பின் அரசியல் பின்னணி குறித்துப் பேசுகிற, பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசு, ''10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 3-வது வாரத்தில் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில்தான் கூறியிருந்தார். ஆனால், இப்போது திடீரென 'ஜூன் 1-ம் தேதியே நடைபெறும்' என்று அறிவிக்கிறார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

இவ்வளவு அவசரமாக ஜூன் மாதம் 1-ம் தேதியே தேர்வை நடத்தியாக வேண்டிய கட்டாயம் இப்போது ஏன் வந்தது? அதன் பின்னணி என்ன... அல்லது நிர்பந்தம்தான் என்ன? யாரைக் கலந்தாலோசித்து இப்படி திடீர் முடிவுகளை எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கல்வி சார்ந்த அனைத்து தரப்பினரோடும் கலந்தாலோசித்து அல்லவா தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும்!

4-வது கட்ட முழு ஊரடங்கை எப்படிச் செயல்படுத்தப்போகிறார்கள் என்று யாருக்கும் இதுவரையில் தெரியவில்லை. மே 31-ம் தேதிவரை ரயில், விமான போக்குவரத்தை அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வரே கேட்டுக்கொண்டிருக்கிறார். அப்படியென்றால், பொதுப்போக்குவரத்தே முடங்கிக்கிடக்கும் தற்போதைய சூழ்நிலையில், அவரவர் சொந்த ஊர்களில் தங்கியிருக்கின்ற மாணவர்கள் ஜூன் 1-ம் தேதியன்று தேர்வு மையத்துக்கு எப்படி வந்து சேர முடியும்?

மாணவர்கள் மலைப்பகுதியில் இருந்தாலும்கூட, அவர்களை தேர்வு மையத்துக்கு அழைத்து வர பஸ் வசதி செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். நடைமுறையில் இது எப்படி சாத்தியமாகும்? இதுகுறித்து நிபுணர்களோடு ஆலோசித்தார்களா, மாணவர்கள் தாங்கள் தங்கியிருக்கும் பகுதியின் அருகிலேயே தேர்வு எழுத வசதியாகத் தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த ஏதேனும் முயற்சி எடுத்திருக்கிறார்களா, தேர்வை நடத்தும் ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகள், விழிப்புணர்வுகள் பற்றி அறுவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறதா... இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எந்தப் பதிலையும் சொல்லாத அமைச்சர், 'மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை, தேர்வை நடத்தியாக வேண்டும் எனக் கூறியிருக்கிறது' என்பதை மட்டும் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார்.

பள்ளித் தேர்வை நடத்துவதென்பது மாநில அரசின் உரிமை. இதற்கு ஏன் மத்திய அரசின் விருப்பத்தைக் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்? ஏற்கெனவே மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு களவாடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தேவையே இல்லாத விஷயங்களுக்கும்கூட நாமே முன்வந்து ஏன் மத்திய அரசின் அனுமதியையும் உத்தரவையும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்?

பள்ளி மாணவிகள்
பள்ளி மாணவிகள்

பஞ்சாப் மாநிலம், 10-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வே நடத்த வேண்டாம் என்று முடிவெடுத்து அறிவித்துவிட்டது. 10-ம் வகுப்பில், இதுவரை மாணவர்கள் பயின்றுவந்த 80 சதவிகித பாடங்கள் மற்றும் அவற்றில் மாணவர்கள் பெற்றுவந்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் தேர்வு முடிவை நிர்ணயிக்க அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால், நமது மாநில அரசோ, மத்திய அரசிடம் அனுமதியை எதிர்பார்த்தும் அவர்களது உத்தரவை செயல்படுத்தவும் மட்டுமே முனைப்பு காட்டுகிறது'' என்றார்.

'ஜூன் 1-ம் தேதியே தேர்வு நடத்துவது குறித்து கல்வித்துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டதா, தேர்வில் மாணவர்கள் கலந்துகொள்வதற்காகச் செய்யப்பட்டிருக்கும் வசதிகள் என்னென்ன...' என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கம் பெறுவதற்காகப் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர், தேர்வுத்துறை இயக்குநர் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். இருவருமே நமது அழைப்பை, தொடர்ந்து ஏற்கவில்லை!

இதையடுத்து மாணவர், பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள் எழுப்பும் கேள்விகள் மற்றும் அரசியல் பின்னணி குறித்து எழும்பும் சந்தேகம் என அனைத்துக்கும் விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் பேசினோம்.

''பள்ளிக்கல்வித் துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை ஆலோசித்த பிறகே, 'ஜூன் 1-ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாம்' என்று முடிவெடுத்து அறிவித்திருக்கிறோம். இது முதற்கட்ட அட்டவணை நடவடிக்கை மட்டுமே... வரும் நாள்களில், தேர்வை எப்படி நடத்துவது, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்த எங்களது அடுத்தடுத்த நடவடிக்கைகளை வெளியிடுவோம். ஏனெனில், எங்கள் உயிரைவிடவும் மாணவர்களின் உயிர் எங்களுக்கு ரொம்ப முக்கியம்!

செங்கோட்டையன்
செங்கோட்டையன்
2.14 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போட்ட கொரோனா- கைகொடுக்குமா அரசு?

தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் ஆரம்பித்து, தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்துகிற எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டே தேர்வுகளை நடத்தவிருக்கிறோம். கடந்த 2 வருடங்களில் 1,125 புதிய தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே, மாணவர்களின் வசிப்பிடத்திலிருந்து அதிகபட்சம் 10 கி.மீ தொலைவுக்குள்ளாகவே தேர்வு மையம் செயல்படும். மாணவர்களைத் தேர்வு மையத்துக்கு அழைத்து வருவதற்கும் தேர்வெழுதிய பின்னர், இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்வதற்கும் பேருந்து வசதிகள் செய்யவிருக்கிறோம். எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் பயம்கொள்ளத் தேவையில்லை!

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, பொதுவான சில கொள்கைகளை எல்லா மாநிலங்களுக்குமே அறிவுறுத்துவார்கள்.... அவ்வளவுதான். மற்றபடி தேர்வுகளை நடத்துவதில் ஆரம்பித்து பள்ளிக்கல்வித்துறையின் அத்தனை நடவடிக்கைகளும் நமது முதல்வரின் ஆலோசனையோடுதான் நிறைவேற்றப்பட்டுவருகிறது. இந்தவகையில், தேர்வு மையங்கள் அமையப்பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர்களின் மேற்பார்வையிலேயே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன'' என்கிறார் அமைச்சர்.

அடுத்த கட்டுரைக்கு