Published:Updated:

`தலைவலியால் துடித்த ஆசிரியை; அலட்சியமாக இருந்த அதிகாரிகள்!’ -வேலூரில் பறிபோன உயிர்

வேலூர் பயிற்சி மையத்தில், தலைவலியால் துடித்த ஆசிரியையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அலட்சியமாக இருந்த காரணத்தினால், அந்த ஆசிரியை உயிரிழந்தார். இந்தச் சம்பவம், ஆசிரியர்கள் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூரை அடுத்த நெல்வாய் கிராமம் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜகத் ஜனனி (35). இவர், அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட ஏரிப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றிவந்தார். இவரின் கணவர் பிரேம்குமார். இவர்களுக்கு அகில், முகில், மித்துல் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.

வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி
வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளி

வேலூர் வெங்கடேஸ்வரா பள்ளியில், கற்றல்-கற்பித்தல் தொடர்பாக ஆசிரியர்களுக்கு நடைபெற்றுவரும் `நிஸ்தா’ பயிற்சியில், கடந்த 1-ம் தேதி ஆசிரியை ஜகத் ஜனனியும் பங்கேற்றார். அப்போது, அவருக்கு திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்குச் செல்ல ஆசிரியை ஜகத் ஜனனி, பயிற்சி மைய அலுவலர்களிடம் விடுமுறை கேட்டார்.

விடுமுறை தராமல், தலைவலியால் துடித்த அவரை மாலை 5 மணி வரை பயிற்சி மையத்திலேயே இருக்கச் செய்ததாக கூறப்படுகிறது. அதுவரை மயக்கமடைந்த நிலையில் ஆசிரியை இருந்துள்ளார். பின்னரே, கணவருக்குத் தகவல் கொடுத்தனர். அவர் வந்ததும், வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜகத் ஜனனி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆசிரியை ஜகத் ஜனனி
ஆசிரியை ஜகத் ஜனனி

அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மற்ற ஆசிரியர், ஆசிரியைகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாய் இறந்ததுகூட தெரியாமல் மூன்று குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து உறவினர்களும், ஆசிரியர்களும் கண்ணீர்விட்டு அழுதனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுபற்றி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வேலூர் மாவட்ட தலைவர் மணி, செயலாளர் அமர்நாத், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், ``திறமையான ஆசிரியையை இழந்துவிட்டோம். 8 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றினார். ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவிசெய்பவர்.

அறிக்கை
அறிக்கை

ஆசிரியை ஜகத் ஜனனி இறப்புக்கு முழுக்க முழுக்க பயிற்சி மைய நிர்வாகிகளின் அலட்சியமான, சர்வாதிகாரமான போக்குதான் காரணம். சிகிச்சைக்கு உடனே அனுப்பியிருந்தால் ஆசிரியையின் குடும்பம் நடுத்தெருவில் நின்றிருக்காது. மூன்று சின்னஞ்சிறு குழந்தைகள் தாயை இழந்திருக்க மாட்டார்கள். பயிற்சி மைய நிர்வாகிகள் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தனர்.

இது சம்பந்தமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸிடம் பேசினோம், ``பயிற்சி வகுப்புக்கும் ஆசிரியை ஜகத் ஜனனி உயிரிழப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். பயிற்சிக்கு முந்தைய நாளே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துள்ளார். தலைவலிப்பதாக கூறிய அவரைக் கணவரை வரவழைத்துத்தான் பயிற்சி மைய நிர்வாகிகள் அனுப்பிவைத்தனர். உண்மையில் இதுதான் நடந்தது. அதற்கான ஆதாரங்களையும் வைத்திருக்கிறோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு