Published:Updated:

நீட் தேர்வைப் போல் அல்ல `நெக்ஸ்ட்'! - மத்திய அரசின் முடிவைக் கேள்வி எழுப்பும் கல்வியாளர்கள்

சத்யா கோபாலன்

நீட் தேர்வைத் தொடர்ந்து நெக்ஸ்ட் தேர்வுக்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு

மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே சேர முடியும் என்ற நடைமுறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால் கிராமப்புற மாணவர்களால் மருத்துவத் துறையில் நுழைய முடியாது எனக் கல்வியாளர்கள் கொந்தளித்தனர். தற்போது மருத்துவ முதுநிலைப் படிப்புகளில் சேருவதற்கு ‘நெக்ஸ்ட்’ (National exit test) என்ற தேசிய நிறை நிலைத் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மருத்துவ படிப்பு
மருத்துவ படிப்பு

மத்திய கேபினட் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், `மருத்துவக் கல்வியைச் சீரமைப்பதற்காகத் தேசிய மருத்துவ கமிஷனை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை தற்போது செயல்பாட்டில் உள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலை மாற்றியமைக்கும். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மசோதாவில் பல்வேறு புது அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தங்கள் இறுதி ஆண்டில் ‘நெக்ஸ்ட்’ தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வு இரண்டு குறிக்கோள்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்று, இதில் வெற்றி பெறுபவர்கள்தான் இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற முடியும். இரண்டாவது, நெக்ஸ்ட் தேர்வில் வாங்கும் மதிப்பெண் தான் மருத்துவ முதுநிலை படிப்புக்குத் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும். எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்க விரும்புபவர்கள், நீட் தேர்வு, பொதுவான கவுன்சலிங் மற்றும் நெக்ஸ்ட் தேர்வு ஆகிய அனைத்திலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அங்கு படிக்க முடியும்' எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, `ஏற்கெனவே மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் தேர்வைத் தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்த்து வருகின்றன. நீட் தேர்வால் தங்களுடைய மருத்துவக் கனவுகள் சிதைவதால் பல மாணவர்கள் ஏற்கெனவே தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். எனவே இந்தத் தேர்வையும் நாங்கள் எதிர்க்கிறோம்' என்றார் ஆவேசத்துடன். கல்வியாளர்கள் மத்தியிலும் நெக்ஸ்ட் தேர்வு முறை தொடர்பான கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது.

கனிமொழி
கனிமொழி

“ மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்ற தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை உள்ள தேர்வு முறையில் நான்கு ஆண்டுக்காலம் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் பயிற்சி மருத்துவராகச் செயல்பட வேண்டும். அதன் பிறகு தன்னை ஒரு மருத்துவராக, இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டு மருத்துவராகப் பணி செய்யலாம். புதிதாகக் கொண்டுவந்துள்ள நடைமுறையில் நெக்ஸ்ட் என்பது முதுநிலை படிப்புக்கான நுழைவுத் தேர்வாகப் பார்க்கப்படுகிறது. அது முற்றிலும் தவறானது. இந்த முறையின்படி ஒரு மாணவர் நான்கரை ஆண்டுகள் படித்து முடித்த பிறகு நெக்ஸ்ட் தேர்வு எழுதித் தேர்வானால் மட்டுமே மெடிக்கல் கவுன்சிலில் தங்களை மருத்துவராகப் பதிவு செய்ய முடியும். இதன்மூலம் பல கேள்விகள் எழுகின்றன" என விவரித்த கல்வியாளர் `ஆனந்தம்' செல்வகுமார்,

`` இதற்கு முன்னால் உள்ள நடைமுறைப்படி நான்கரை ஆண்டுகள் படித்துவிட்டு ஒரு வருடம் பயிற்சி மருத்துவராக இருந்தால் மட்டுமே மெடிக்கல் கவுன்சிலில் மருத்துவராகப் பதிவு செய்ய முடியும். ஆனால், தற்போது கொண்டு வந்துள்ள புதிய முறையின்படி மாணவர்களின் இறுதி ஆண்டில், அதாவது பயிற்சி மாணவராகச் செல்லும் முன்பே இந்த நெக்ஸ்ட் தேர்வு எழுதினால் போதும். செய்முறை பயிற்சி இல்லாமலே மாணவர்கள், மருத்துவர்களாகத் தேர்வாகிவிட வாய்ப்பு உள்ளது என்பதை அறிய முடிகிறது.

செல்வகுமார்
செல்வகுமார்

இரண்டாவதாக, மாணவர்கள் நான்கு ஆண்டு கல்வி மற்றும் ஒரு வருடம் பயிற்சி ஆகியவற்றை முடித்தாலே மருத்துவர் ஆகிவிடலாம். அதற்கு மேல் விருப்பப்பட்டால் முதுநிலை படிப்புகளைப் படிக்கலாம். மாணவர்கள் படிக்கும் இந்த நான்கு வருடத்துக்குள்ளேயே மருத்துவப் பயிற்சி, நோயாளியை அணுகுவது, கல்வி போன்ற அனைத்தையும் கற்கின்றனர். ஆனால் நெக்ஸ்ட் முறைப்படி, மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தங்கள் முதலாம் ஆண்டு முதல் ஒரு போட்டித் தேர்வுக்குத் தயாராவதைப் போல்தான் தயாராவார்கள். அவர்களுக்கான மருத்துவ அறிவு முற்றிலுமாக பாதிக்கப்படும்” என வேதனைப்பட்டவர்,

“நீட் தேர்வுக்குப் பதிலாக நெக்ஸ்ட் தேர்வு எனச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். நீட் என்பது மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மட்டுமே, ஆனால் ‘நெக்ஸ்ட்’ தேர்வு எழுதினால்தான் மருத்துவராக தேர்ச்சியடைய முடியும். வெறும் மூன்று மணி நேரம் எழுதும் தேர்வு ஒரு மருத்துவரை உருவாக்குமா என்பது சந்தேகம்தான். `மருத்துவ முதுநிலைப் படிப்பு படிக்க நீட் தேர்வு தேவையில்லை, நெக்ஸ்ட் தேர்வில் பெறும் மதிப்பெண்ணே போதுமானது' எனத் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வில் ஒருமுறை தேர்ச்சிபெற முடியவில்லை எனில் மீண்டும் தேர்வு எழுதலாம். அதேமுறை நெக்ஸ்ட் தேர்விலும் உள்ளதா என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அரசின் ஆர்வத்தை வரவேற்கிறோம். ஆனால் வெறும் 3 மணி நேரத் தேர்வு மூலம் மட்டுமே தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்காமல், அவர்களுக்கு வழங்கும் கல்வியும் தரமானதாக இருக்க வேண்டும்.

மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு

நான்கு ஆண்டுகள் படிக்கும் மருத்துவ மாணவர்கள் எங்கெல்லாம் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தகுதியான மருத்துவர்களாக உருவாகிறார்களா என்பதை நான்கு ஆண்டுகளாக நடக்கும் ஒவ்வொரு தேர்வின் போதும் உறுதி செய்ய வேண்டும். 3 மணி நேரத் தேர்வுதான் ஒரு மருத்துவரை தீர்மானிக்கும் என்றால் நிச்சயமாக மாணவர்கள் மனப்பாடம் செய்து அப்படியே எழுதுவார்கள். அவர்களால் முழுமையான மருத்துவர்களாக முடியாது. படிக்கும் போதே அவர்களுக்குத் தரமான கல்வி கொடுத்து தகுதியான மாணவர்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த மருத்துவர்களை உருவாக்க முடியும்” என்றார் உறுதியாக.