Published:Updated:

``குடும்ப சூழல் குறித்து கவலைப்படாதீங்க!" - அரசுப்பள்ளி தத்தெடுப்பு விழாவில் துணை கமிஷனர் உருக்கம்

சென்னை பாடிகுப்பத்தில் உள்ள அரசுப் பள்ளியைத் திருமங்கலம் காவல் நிலையம் தத்தெடுத்துள்ளது. அந்த விழாவில் ஆதரவற்ற மாணவியின் படிப்பு செலவை திருமங்கலம் காவல் நிலையம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அரசுப்பள்ளி தத்தெடுப்பு விழா
அரசுப்பள்ளி தத்தெடுப்பு விழா

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் பாதுகாப்பு பணியோடு சமூக சேவையிலும் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்கள், தங்களால் முடிந்த சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகின்றன. கடந்த நவம்பர் மாதம், புளியந்தோப்பு காவல் நிலையம், பட்டாளம் அரசுப் பள்ளியைத் தத்தெடுத்தது. தற்போது திருமங்கலம் காவல் நிலையம் சார்பில், பாடிகுப்பம் அரசுப் பள்ளி தத்தெடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விழாவில் மாணவிகளுடன் போலீஸார்
பொங்கல் விழாவில் மாணவிகளுடன் போலீஸார்

அதற்கான விழா இன்று பள்ளிவளாகத்தில் நடந்தது. விழாவில் அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ``இதுபோன்ற ஒருபள்ளியில் படித்த நாங்கள், இன்று நல்ல நிலைமையில் உள்ளோம். குடும்ப சூழல் குறித்து மாணவ, மாணவிகள் கவலைப்பட வேண்டாம். உங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஏனெனில், இன்றைய மாணவர்கள், நாளைய தலைவர்கள். பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாடும் இந்தத் நேரத்தில் படிப்பிலும் சமூக சேவைகளிலும் மாணவர்கள், மாணவிகள் அக்கறை செலுத்த வேண்டும். இந்தப் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவி குறித்த தகவல் தெரிந்ததும் அவருக்கு கல்வி உதவித் தொகை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவியின் கல்விச் செலவை ஏற்க காவல்துறை தயாராக உள்ளது" என்றார்.

தாமதமான 108... விபத்தில் சிக்கியவருக்காக தனியார் ஆம்புலன்ஸுடன் டிரைவராக வந்த போலீஸ்!

இந்த விழாவில் உதவி கமிஷனர் சிவக்குமார், இன்ஸ்பெக்டர்கள் ரவி, வேல்முருகன், சத்யலிங்கம் உட்பட ஏராளமான போலீஸார் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து போலீஸார் பொங்கல் விழாவையும் கொண்டாடினர். விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் பொங்கலிடப்பட்டது. அதோடு மாணவ, மாணவிகளுக்கு உதவிகளும் வழங்கப்பட்டன.

விழாவில் மாணவ, மாணவிகள்
விழாவில் மாணவ, மாணவிகள்

திருமங்கலம் போலீஸார் கூறுகையில், ``சமீபத்தில் நடந்த விழிப்புணர்வு விழாவில்தான் சென்னை பாடிகுப்பத்தில் உள்ள சென்னை மாநகராட்சியின் உயர்நிலைப்பள்ளியைக் குறித்த தகவல் காவல் நிலையத்துக்கு தெரியவந்தது. அதனால், இந்தப் பள்ளியைத் திருமங்கலம் காவல் நிலையம் தத்தெடுத்துள்ளது. உயரதிகாரிகளின் அனுமதியோடு இந்தப் பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுத்துள்ளோம். விரைவில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் கட்டிக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இந்தப் பள்ளிக்குத் தேவையான உதவிகளைத் திருமங்கலம் காவல் நிலையம் சார்பில் செய்து கொடுக்கப்படும்" என்றனர்.