Published:Updated:

`தேர்வுக் கட்டண உயர்வால் கொதித்தெழுந்த மாணவர்கள்!’ - பணிந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து, தேர்வுக் கட்டணத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திடீரென குறைத்திருக்கிறது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

வேலூரை அடுத்த சேர்க்காடு கிராமத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ, மாணவிகளே இக்கல்லூரிகளில் அதிகம் படிக்கிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

இந்த நிலையில், சமீபத்தில் செமஸ்டர் தேர்வுக் கட்டணத்தை 50 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியது. இதனால் ஏழை எளிய, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. தேர்வுக் கட்டண உயர்வைத் திரும்ப பெறக்கோரி நான்கு மாவட்டங்களில் உள்ள பல கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். 

தவிர, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதையடுத்து, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வுக் கட்டணத்தை மட்டும் குறைப்பதாகப் பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. 

திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

இதுதொடர்பாகப் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பெருவழுதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``இளங்கலை பாடங்களில் எழுத்துத் தேர்வில் ஒரு தாளுக்கான தேர்வுக் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. 

முதுகலைப் பாடங்களில் ஒரு தாளுக்கு ரூ.160-லிருந்து 145 ரூபாயாக எழுத்துத் தேர்வு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுக்கான கட்டணத்தையும் குறைத்திருக்கிறோம். எனினும், மற்ற கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

பல்கலைக்கழக அறிவிப்பு
பல்கலைக்கழக அறிவிப்பு

இந்தக் கட்டணத்தையே நடக்கவுள்ள செமஸ்டர் தேர்வுகளுக்கு அந்தந்த கல்லூரி நிர்வாகங்கள் பெற்றுக்கொள்ளலாம்’’ என்று கூறியிருக்கிறார். ‘‘இந்த அறிவிப்பு எங்களின் போராட்டத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி’’ என மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.