Published:Updated:

`பள்ளிகள் இல்லாத கிராமம், முதன்முதலாக 10-வது தேர்ச்சி பெற்ற மாணவிகள்’ - நெகிழ்ந்து கொண்டாடிய மக்கள்!

மாணவிகள்
மாணவிகள் ( HT )

``நான் எப்படிப் படிப்பேன்... இங்கு பள்ளிகள் இல்லை... ஒருவர் கல்வியை வாங்கவோ பிச்சை எடுக்கவோ முடியாது” என்று தேர்ச்சிபெற்ற மாணவிகள் பேசினர்.

ராஜஸ்தானிலுள்ள பத்லா கிராமத்தில், எஃகு தட்டுகளின்மீது எழுப்பப்படும் ஒலி, அங்குள்ள மணல் திட்டுகளின் வழியாகப் பரவி, ஒவ்வொரு வீட்டிலும் சென்றடைந்தது. அக்கிராமத்தில், குழந்தை பிறந்ததைக் குறிக்கும் விதமாக இந்த ஒலியை எழுப்புவது வழக்கம். ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ஒலி எழுப்பப்பட்டதுக்குக் காரணம் முற்றிலும் சுவாரஸ்யமானது.

கிராமத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்
கிராமத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்
Dusra Dashak

ராஜஸ்தான் மாநிலத்தில், திறந்தநிலைப் பள்ளிகளின் தேர்வு முடிவு கடந்த திங்கள்கிழமை இரவு அறிவிக்கப்பட்டது. நமக்கு சாதாரணமான செய்தியாகத் தெரியும் இது, தூங்கிக் கொண்டிருந்த அந்தக் கிராமத்துக்கு கொண்டாடக்கூடிய இரவைத் தந்தது.

அமிரா, வச்சி மற்றும் ஹிரா பானு என இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைய, அந்தச் செய்தியைத்தான் கொண்டாடித் தீர்த்துள்ளனர் கிராம மக்கள். கொண்டாட்டத்துக்குக் காரணம், மாணவர்கள் ஒருவர்கூட பள்ளியில் சேரவில்லை என்பதால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிராமத்தில் இருந்த அனைத்து அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டன.

அதையும் தாண்டி, அக்கிராமத்திலேயே முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் என்றால் அது இந்த மூன்று மாணவர்கள்தான். இதனால்தான் அந்தக் கிராமத்திலுள்ள அனைத்துக் குடும்பங்களும் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை இனிப்புகள் வழங்கி, மாணவிகளுக்கு மாலை அணிவித்து, விழாவைப்போல கொண்டாடிவருகின்றனர்.

‘‘கல்வி என்பது தங்கப்பதக்கங்களைத் தாண்டியது!’’

``பத்தாம் வகுப்பு தேர்வில் வெற்றிபெறுவது கடினமாக இருந்தது. கற்றல் நிலையத்தில் இணைந்து கல்வி பயில்வதற்கு முன்புவரை என்னுடைய பெயரை எழுதுவதுகூட எனக்குக் கடினமாக இருந்தது. நான் எப்படிப் படிப்பேன்... இங்கு பள்ளிகள் இல்லை. ஒருவர் கல்வியை வாங்கவோ பிச்சை எடுக்கவோ முடியாது” என்று தத்துவார்த்த தொனியில் 17 வயது அமிரா கூறுவதாக ஹிந்துஸ்தான் ஊடகம் பதிவுசெய்துள்ளது. மேலும், ``பலோடி நகரில் உள்ள கல்லூரியில் படித்து மருத்துவராக வேண்டும்” என்கிற தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்
கிராமத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்
Dusra Dashak

பள்ளிகள் இல்லாத கிராமத்தில் கல்வியைப் பாதியில் விட்டவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சவலாக ஆரம்பிக்கப்பட்ட கற்றல் நிலையம்தான், தஸ்ரா தஷ்க். கிராமத்தின் மையத்தில் ஒரு நூலகத்தை அமைத்து, அதில் முக்தர் அலி, ஆனந்தராம், பன்வர் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

அம்ரு சவுத்ரியின் தலைமையில் இவர்கள் அந்தக் கிராமத்தை மீண்டும் கல்வியின் பிடிக்குள் கொண்டுவர முயற்சி செய்து வந்தனர். ராஜஸ்தான் அரசின் சௌர்யா உர்ஜா நிறுவனத்தின் நிதி உதவியுடன் இந்தப் பணிகளை மேற்கொண்டனர். கடந்த 2017-ம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இன்று, சராசரியாக தினமும் 70 முதல் 80 மாணவர்கள் கல்வி நிலையங்களுக்குச் சென்றுவருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் என தொழில்நுட்பத் துறை வளர்ச்சியோடு கல்வித்துறையும் செயல்படும்போது, அடிப்படைக் கல்விக்கே பத்லா கிராமம் சிரமம்படுகிறது. இந்ந நிலையில், பத்லா கிராமத்தின் வரலாற்றிலேயே மூன்று மாணவிகள் முதன்முறையாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் செய்தி பலரையும் நெகிழச்செய்துள்ளது. இந்த மாணவிகளின் வெற்றி, இன்னும் பல மாணவர்களை, குறிப்பாகப் பெண்களை கல்விபெற முன்வர வைக்கும் எனக் கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையிலிருந்து பேனா விற்று விழுப்புரத்தில் படித்து TNPSCக்கு தயாராகும் பாபு! - ரயில் பெட்டிக்கதைகள்
அடுத்த கட்டுரைக்கு