Published:Updated:

`ஒடிசாவுக்கு விளையாடப் போக நிதியில்லை!'-கைவிரித்த திருவள்ளுவர் யுனிவர்சிட்டி; மனஉளைச்சலில் மாணவர்கள்

ஒடிசாவில் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான கயிறு இழுக்கும் போட்டிக்குத் தகுதிபெற்ற வேலூர் மாணவ மாணவிகளைக் கலந்துகொள்ள வேண்டாம் என்று கடைசி நேரத்தில் அறிவித்து, திருவள்ளுவர் பல்கலைக்கழகம் கை விரித்திருக்கிறது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

Tiruvalluvar University
Tiruvalluvar University

திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில், கல்லூரிகளுக்கு இடையேயான கயிறு இழுக்கும் போட்டியின் அறிமுக விழா, குடியாத்தம் திருமகள் அரசினர் ஆலைக்கல்லூரி மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்கள் தரப்பில் 9 அணிகளும், மாணவிகள் தரப்பில் 5 அணிகளும் கலந்துகொண்டன. 

Students
Students

பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) விஜயராகவன் தலைமைதாங்கி போட்டியைத் தொடங்கிவைத்தார். மாணவர்கள் பிரிவில் குடியாத்தம் திருமகள் ஆலைக்கல்லூரி முதலிடமும், அரக்கோணம் அரசுக் கல்லூரி இரண்டாமிடமும் பிடித்தன. மாணவிகள் பிரிவில், வேலூர் டி.கே.எம் மகளிர் கல்லூரி முதலிடமும், திருவண்ணாமலை சண்முகா கல்லூரி இரண்டாமிடமும் பிடித்தன. 

`தேர்வுக் கட்டண உயர்வால் கொதித்தெழுந்த மாணவர்கள்!’ - பணிந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

வெற்றிபெற்ற இந்த அணிகளைச் சேர்ந்த 10 மாணவர்களும், 10 மாணவிகளும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில், வரும் 6-ம் தேதி ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ள அகில இந்தியப் பல்கலைக்கழக அளவிலான கயிறு இழுக்கும் போட்டிக்குத் தகுதிபெற்றனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் கலந்துகொள்வதால், வேலூர் மாணவர்கள் கடுமையாகப் பயிற்சிபெற்று வந்தனர்.

Students
Students

இந்த நிலையில், ``ஒடிசாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்காமல் விலகிக்கொள்வதாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திடீரென அறிவித்தது. இதனால், பயிற்சி பெற்றுவந்த மாணவ மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். `அறிவிப்பைத் திரும்பப் பெறுமாறு’ குடியாத்தம் அரசினர் ஆலைக்கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளின் தரப்பில் திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது.

அதற்கும் பல்கலைக்கழகம் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தது. ஒடிசா போட்டிக்கு ஓரிரு நாள்களே இருப்பதால், கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுபற்றி அந்தந்தக் கல்லூரி நிர்வாகம் தரப்பில் பல்கலைக்கழகத்தில் இன்று முறையிடப்பட்டது. துணைவேந்தர் தாமரைச் செல்வி, `நிதிப் பற்றாக்குறை’ என்று கூறி கைவிரித்திருக்கிறார். இதனால், மாணவ மாணவிகள் மன உளைச்சலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 

Tiruvalluvar University
Tiruvalluvar University

இதுபற்றி விளக்கம் கேட்க, துணைவேந்தரின் செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டோம். அவர், போனை எடுக்கவில்லை. பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் (பொறுப்பு) விஜயராகவனிடம் கேட்டபோது, ``இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்திவருகிறோம். இன்னும் முடிவு எடுக்கவில்லை’’ என்றார். ``அகில இந்திய போட்டியில் கலந்துகொள்ள ஒடிசாவுக்கு நாளையே புறப்பட வேண்டும் என்பதால், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மாணவ மாணவிகள் மற்றும் அந்தந்தக் கல்லூரி நிர்வாகங்கள் வலியுறுத்தியிருக்கின்றன.