தமிழ்நாட்டின் மாநிலப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை மாநில அரசே நியமனம் செய்யும் வகையில் பல்கலைக்கழகச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரும் மசோதா ஏப்ரல் 25 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி மசோதாவைத் தாக்கல் செய்தார்.

சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், திறந்தநிலைப் பல்கலைக்கழகம், திருவள்ளூர் பல்கலைக்கழகம், ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் என தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கீழ் 13 பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. இப்பல்கலைக்கழகங்களின் வேந்தராகத் தமிழக ஆளுநரும், இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் செயல்பட்டுவர, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்துவந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகுஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பல்கலைக்கழக சட்டத்தின்படி, அம்மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்கிறது; கர்நாடகாவில் மாநில அரசின் ஒப்புதலுடனே துணைவேந்தர் நியமனம் நடைபெற்றுவருகிறது. அதேபோல், தமிழ்நாட்டிலும் மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவரும் மசோதாவைத் தாக்கல் செய்து அமைச்சர் பொன்முடி பேசினார்.

அரசைக் கலந்தாலோசிக்காமல் தனிச்சையாகச் செயல்படுவதாகவும், தன்னுடைய அதிகார வரம்பை மீறிவதாகவும் மாநில அரசு கடும் விமர்சனங்களை ஆளுநர்மீது முன்வைத்துவரும் சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊட்டி ராஜ்பவனில் தமிழ்நாட்டின் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் கூட்டியிருக்கிறார். இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் துணைவேந்தர் நியமனம் குறித்த மசோதா மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
“கடந்த நான்கு ஆண்டுகளில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமனத்தில், ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேகமான உரிமை என்பதுபோல் செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்கவேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், அதன்கீழ் செயல்படும் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தரை நியமிக்க முடியவில்லை என்பது, ஒட்டுமொத்தப் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. இச்செயல் மக்களாட்சின் தத்துவத்திற்கே விரோதமாக இருக்கிறது. துணைவேந்தர் நியமனம் மாநில அரசின் உரிமை தொடர்புடைய பிரச்சினை. மாநிலத்தின் பல்கலைக் கழகக் கல்வியுரிமை தொடர்பான பிரச்சினை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை,” என்று இந்த மசோதா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.

“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி பல்கலைக்கழகங்களை உருவாக்குவது, ஒழுங்குபடுத்துவது, கலைப்பது என்பது மாநில அரசின் முழுமையான அதிகாரத்தின்கீழ் வருகிறது. மாடர்ன் டெண்டல் காலேஜ் வழக்கில் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு, ‘பல்கலைக்கழகத்தை ஒழுங்குபடுத்தக் கூடிய மாநில அரசின் அதிகாரம் கரைந்துபோகவில்லை’ என்று மாநில அரசின் உரிமையை உறுதிபடுத்தியிருக்கிறது. மாநிலத்தின் கொள்கை முடிவுகள், வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்குத் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கிறது. ஆளுநர் என்பவர் தன்னுடைய அனுபவம், அக்கறை மூலமாக அரசுக்கு ஆலோசனை சொல்லலாம், வழிகாட்டலாம். ஆனால், ஊட்டியில் கூட்டியிருக்கும் துணைவேந்தர் மாநாடு போன்ற தனிச்சையான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுகிறார். அரசமைப்புச் சட்டம் அவருக்கு வழங்கிய அதிகாரத்தைவிட கூடுதலாக அதிகாரத்தை உருவாக்கிக் கொள்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சவால் விடுகிறார். இந்தப் பின்னணியில், மாநில அரசு மாநிலத்தின் தேவைகளுக்குத் தகுந்தார்போல, மக்களின் நன்மைக்காக துணைவேந்தரை நியக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறது. இன்றைய சூழலுக்கு உகந்த நியாயமான இந்த அணுகுமுறை, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

“தமிழ்நாட்டில் கல்வியின் தரம் ஏற்கெனவே மோசமாக இருக்கும் நிலையில் இந்த மசோதா மிகவும் துரதிருஷ்டவசமானது; தமிழ்நாட்டின் உயர்கல்விக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கக் கூடியது. துணைவேந்தர் நியமனம் என்பது பிரிட்டிஷ் காலம்தொட்டே இருக்கும் ஒரு நல்ல நடைமுறை, அதை மாற்ற வேண்டிய தேவை இல்லை. இந்த மாற்றம் காரணமாக அரசியல்வாதிகள் துணைவேந்தர்களாக வரும் வாய்ப்பு இருக்கிறது; துணைவேந்தர்களே அரசியல்வாதிகளைப் போல் செயல்படத் தொடங்கிவிடுவார்கள். இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர மாட்டார் என்றே நம்புகிறேன்; அவர் இதற்கு ஒப்புதல் தரக்கூடாது,” என்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.

தற்போது வரை 11 மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையிலிருக்கும் நிலையில், துணைவேந்தர் நியமனம் குறித்த இந்த மசோதாவின் மீதான ஆளுநரின் அணுகுமுறை குறித்துப் பேசும்போது, “சட்டப்பேரவையின் ஓர் அங்கமாக விளங்கும் ஆளுநர், சட்டப்பேரவையில் நிறைவேறும் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தால்தான் அது சட்டமாகும். மாணவர்களின் எதிர்காலம் பற்றிய ஒரு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதுதான் ஆளுநரின் செயல்பாடாக இருக்கும் என்றால், மாணவர் நலனில் அக்கறையில்லாமல், அவர்கள் நலனுக்கு விரோதமாகவும், குழப்பம் நீடித்தால் மாணவர்களுக்கு கல்வி பாதிக்கும் கவலை இல்லாமலும் அரசியல் செய்கிறார் என்றே கருதவேண்டும். ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால், சட்டப்பேரவையில் நிறைவேறிய மசோதாவை அடிப்படையாகக் கொண்டு அரசமைப்புச் சட்டம் 246 பிரிவு அட்டவணை 7 பட்டியல் 2 வரிசை 32-ன்படி, மாநில அரசு இதைச் செயல்படுத்த முடியும். ஆளுநர் ஒப்புதல் தந்தாலும், தராவிட்டாலும் தமிழக அரசு துணைவேந்தரை நிமிக்கத் தொடங்க வேண்டும்,” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.