Published:Updated:

`தமிழகத்தில் நவம்பர் 16-ல் பள்ளிகளைத் திறக்கலாமா?’ - 9-ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம்

பள்ளிக் கல்வி இயக்ககம்
பள்ளிக் கல்வி இயக்ககம்

`தமிழகத்தில் பள்ளிகளை நவம்பர் 16-ம் தேதி திறப்பது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகங்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நவம்பர் 9-ம் தேதி நடத்தப்படும்’ என அரசு அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் கடந்த மார்ச் இறுதியில் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவரும் சூழலில், தமிழகத்தில் பள்ளிகளை வரும் 16-ம் தேதி முதல் திறக்க அரசு அனுமதியளித்து உத்தரவிட்டது. 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வரலாம் என்றும் அரசு அறிவித்திருந்தது. கொரோனா இரண்டாம் அலை ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்த தமிழக அரசின் அறிவிப்பு சர்ச்சையானது. மேலும், அரசின் இந்த அறிவிப்புக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். `தமிழக அரசு இந்த உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
Representational Image

இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 9-ம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

`தியேட்டர்கள், பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி!' - தமிழக அரசு உத்தரவின் முக்கிய அம்சங்கள்

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ``பள்ளிகளைத் திறப்பது குறித்து மத்திய அரசு, 30.9.2020 அன்று வெளியிட்டிருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15-10-2020-க்குப் பிறகு சூழ்நிலைக்கேற்ப பள்ளிகளை மாநில அரசுகள் படிப்படியாகத் திறக்க அனுமதித்திருக்கிறது. எனினும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, சுகாதாரத்துறை மற்றும் தொற்றுநோய் சிறப்பு வல்லுநர்குழுவுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகளைத் திறந்திடலாம் என்று அரசால் அறிவிக்கப்பட்டது’’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்
Representational Image

மேலும், ``பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் வாயிலாகப் பள்ளிகள் திறப்பு குறித்துச் சில கருத்துகள் வெளியிடப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், இது குறித்து ஏற்கெனவே பெற்றோர்கள், கல்வியாளர்களின் கருத்துகள் அரசால் பெறப்பட்டு, பரிசீலிக்கப்பட்டிருந்தபோதிலும், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, அந்தந்த அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும், தனியார் பள்ளி நிர்வாகத்துடனும் பள்ளிகள் திறப்பது குறித்த கருத்துகளைப் பெற்றிட ஏதுவாக வரும் நவம்பர் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு கருத்துக் கேட்புக் கூட்டம், அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்களின் தலைமையில் காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கிறது.

`நவம்பர் 16 பள்ளி, கல்லூரிகள் திறப்பு உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும்!’ - மு.க.ஸ்டாலின்

இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு, தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள், தங்கள் கருத்துகளைக் கடிதம் மூலமாகத் தெரிவிக்கலாம். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அந்தந்தப் பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசால் முடிவெடுக்கப்படும்’’ என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு